tamilnadu

வாடகை பாக்கி 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

கடலூர், ஜன.24- கடலூர் நகராட்சியில் வாடகை பாக்கி வைத்திருந்ததாக 3 கடைகளுக்கு வெள்ளிக்கிழமை(ஜன.24)அதிகாரிகள் சீல் வைத்தனர். கடலூர் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள கட்டடங்களில் வணிக நிறுவனங்கள் நடத்தி வருவோர் சுமார் ரூ.30 கோடி வரையில் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால், நகராட்சியின் வருமானம் குறைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையும், பல்வேறு வளர்ச்சிப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் வாடகையை உயர்த்தியதை காரணம் காட்டி சிலர் நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில் அதனையே காரணமாக தெரிவித்தும் வாடகையை செலுத்துவதில்லை. எனவே, வாடகை பாக்கியை வசூலிக்கும் வகையில் பாக்கிதாரர் களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமையன்று பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சியினர் சீல் வைப்பு நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர். அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையன்று நகராட்சி மேலாளர் பழனி, நகர்நல அலுவலர் ப.அரவிந்த்ஜோதி, பொறியாளர் ஜெயப்பிரகாஷ்நாராயணன், வருவாய் ஆய்வாளர் சக்திவேலன், உதவியாளர்கள் அரிகுமார், காதர்நவாஷ், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கடற்கரை சாலை, மஞ்சக்குப்பம் பகுதியில் வரி வசூலில் ஈடுப்பட்டனர். இதில், அதிக வாடகை பாக்கி வைத்திருந்ததாக 3 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாக தெரிவித்தபோதிலும் உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இக்கடைகள் மொத்தம் ரூ.56 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

;