tamilnadu

கடலூர் மாவட்டத்திற்கு 26 ஆவது இடம்

கடலூர், ஏப். 19-பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் கடலூர் மாவட்டம் 88.45 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று மாநிலத்தில் 26 ஆவது இடத்தைப் பிடித்தது.தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 1 ஆம் தேதி அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. மாவட்டத்தில் 218 பள்ளிகளிலிருந்து 16,041 மாணவிகளும், 13,974 மாணவர்களும் மொத்தம் 30,015 பேர் இத்தேர்வினை எழுதினர். விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமையன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இதில், கடலூர் மாவட்டம் 88.45 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று மாநிலத்தில் 26 ஆவது இடத்தைப் பிடித்தது. தேர்வு எழுதியவர்க ளில் மாணவிகளில் 14,606 பேரும், மாணவர்களில் 11,942 பேரும் தேர்ச்சி பெற்றனர். முறையே 91.05மற்றும் 85.46 சதவீத வெற்றியை பதிவு செய்தனர்.தேர்வு முடிவுகளை வெளியிட்டு முதன்மைக்கல்வி அலுவலர் கா.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் கடலூர் மாவட்டம் 86.69 சதவீதம் தேர்ச்சியுடன் 28 ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் தற்போது 1.76 சதவீதம் கூடுதல் தேர்ச்சியுடன் 26 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாவட்டத்தில் 47 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. கடுமையாக உழைத்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திய தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன்” என்றார்.

;