tamilnadu

img

கடலூர் சிப்காட்டில் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் பலி....

கடலூர்:
கடலூர் அருகே சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 30 க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் குடிகாடு பகுதியில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் பூச்சிக்கொல்லி மற்றும் உரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் 100 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தொழிற் சாலை பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது.இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சுமார் 8 மணிக்கு அங்கு உள்ள ரியாக்டர் திடீரென அதிக அழுத்தம் காரணமாக வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுதவிர ஓர் வெண் புகை மண்டலம் அங்கிருந்து கிளம்பி பல மீட்டர் தூரம் வானில் சென்றதை காணமுடிந்தது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் பழைய வண்டி பலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (42), கடலூர் முதுநகர் அருகே உள்ள செம்மங்குப்பத்தை சேர்ந்த கருணாகரன் மகன் கணபதி ( 25), கடலூர் முதுநகர் அருகே உள்ள காரைக்காடு சேர்ந்த செந்தில்குமார் மனைவி சவிதா (35), பரங்கிப்பேட்டை சேர்ந்த விஜயகுமார் மகன் விசேஷ ராஜ் (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இதுதவிர பலர் காயமடைந்தனர்.தேனி சின்னமனூர் முத்து முருகன் மகன் ஹரிஹரன் ( 23), கடலூர் சுப்பிரமணியபுரம் மாயவள் மகன் ராஜி (24), குடிகாடு ராதாகிருஷ்ணன் மகன் கண்மணி (43), ஈச்சங்காடு சக்கரவர்த்தி மனைவி தேவிபாலா (32).காரைக்காடு குமார் மனைவி செல்வி (45), காரைக்காடு முருகானந்தம் மனைவி குணசுந்தரி (45), பாதிரிக்குப்பம் தமிழ்மணி மகன் வினோத்குமார் (25), புவனகிரி பூரா சாமி மகன் சதீஷ் குமார் (27), கடலூர் முதுநகர் மோகன்சிங் தெருவை சேர்ந்த பழனியப்பன் மகன் ராம்குமார் (26).

நெய்வேலி ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (31), பத்திரக்கோட்டை சேசாசலம் மகன் ஜவகர்கலால் (27), தூத்துக்குடி ஏரல் சேகர் மகன் சபரி (22), கடலூர் அன்ன வேலி லட்சுமணன் மகன் சத்தியமூர்த்தி (30), குடிகாடு அசோக்குமார் மனைவி கவிதா (33) ஆகியோர் படுகாயமடைந்து, கடலூர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

அமைச்சர் ஆறுதல்
படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தொழிலாளர் நல மேம்பாட்டு அமைச்சர் சி.வே.கணேசன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.மேலும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.அமைச்சருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் வந்திருந்தனர்

ரூ. 3 லட்சம் நிவாரணம்
இந்த விபத்தில் பலியானோர் குடும்பத் திற்கு அரசு சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
 

;