சென்னை,மார்ச் 11- குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரதான எதிர்க் கட்சியான திமுக தொடர்ந்து மாநில அரசை வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினரும் திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் ஒரே உறுப்பினராக எம். தமிமுன் அன்சாரியும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டமும், என்பிஆர், என்ஆர்சி கருப்பு சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், மாநில அரசு செவிசாய்க்கவில்லை என்பதால் அரசுக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியில் கோரிக்கை அட்டை யுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் பெண் எம்எல்ஏ விஜயதாரணியும் அவருக்கு ஆதரவாக சிறிது நேரம் தர்ணாவில் கலந்து கொண்டார். திமுக எம்எல்ஏக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.