tamilnadu

img

பிடித்த வேலைக்கும் போகலாம்..!!

ஊடகத்துறை

அச்சுத்துறை மற்றும் காண்ஊடகம் என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டாலும், ஊடகவியலைப் பயில்பவர்கள் எப்போதுமே ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக் கொள்ளும் வாய்ப்பும் இருந்து கொண்டே இருக்கும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதும் புலமை பெற்றவர்கள் இந்தத் துறையைத் தேர்வு செய்து படிக்கலாம். ஊடகத்துறை என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதேச மொழிகளிலும் ஏராளமான ஊடகங்கள் உள்ளன. உள்ளுர் மொழி நாளிதழ்களில் இந்தியாவிலேயே அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளில் பல தமிழ்நாளிதழ்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்படத்துறை

புகைப்படக்கலைஞர் என்றவுடன் கல்யாண வீட்டில் நம்மையெல்லாம் மணமக்களைப் பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டே இருப்பார்களே, அவர்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இந்தத்துறையும் ஒரு சிறிய கடல் மாதிரியானதாகும். சினிமா, விளம்பரம், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். புகைப்படங்ளே பேசும் என்பார்கள். அப்படிப்பட்ட படங்களை எடுத்து உலகமே நம்மைப் பற்றிப் பேசும் நிலைமை கூட உருவாகும்.

ஆடல் பாடல் மற்றும் இசை

நல்ல குரல் வளம், நடனமாடும் ஆசை மற்றும் இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் ஆகியவை உள்ளவர்கள் அந்தத் துறைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம். இசைக்கல்லூரிகளில் படித்துவிட்டு பல்வேறு வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, சொந்தமாகவே இசைப்பணியைச் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். படிப்பதற்கேற்ற வேலை இந்தத்துறைகள் இன்னும் இருந்துகொண்டேதான் உள்ளது.

ஆடை வடிவமைப்பு

இந்தத்துறை தற்போது தொழில்நுட்ப ரீதியாகவும் மிகவும் முன்னேறிவிட்டது. நமது கற்பனை வளம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் இணைகையில் அற்புதமான வடிவமைப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கணினித்துறையில் ஓரளவு அறிவும் தேவைப்படுகிறது. இது தொடர்பான படிப்பு, நமது கற்பனைத்திறனை மேம்படுத்தும். கல்லூரிப் படிப்பில் சந்தைப்படுத்துதால் குறித்தும் கற்றுக் கொள்ள முடியும். இந்தத் துறைக்கு எப்போதுமே கிராக்கி இருப்பதால் வேலைவாய்ப்புக்கும் பஞ்சமில்லை. உங்கள் திறமைக்கு நல்ல தீனியும் கிடைக்கும்.

விமானப் பணிப்பெண்கள்

இயல்பாகவே தகவல் பரிமாற்றம் நன்றாகச் செய்யக்கூடிய பெண் என்று உங்களை நீங்கள் நினைத்தால் விமானப் பணிப்பெண்ணாவதற்கான படிப்பில் சேரலாம். இதற்கென்று தனியாகப் படிக்க வேண்டும். விமானத்தில் பணியாற்ற விரும்புவர்களுக்கு என்று படிப்பு இருக்கிறது. அதே வேளையில், உங்கள் பட்டப்படிப்பைத் தனியாக தொலைதூரக்கல்வி மூலம் பயின்று கொள்ளலாம். உலகம் முழுவதும் சுற்றி வருவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

விளையாட்டுத்துறை

உங்களுக்கு விளையாட்டுத்துறையில் ஆர்வமா? நீங்கள் விளையாட்டுத்துறையில் சாதனையாளராக இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்ச அறிவு, குறைந்தபட்ச அனுபவம் இருந்தால் பயிற்சியாளராக ஆகலாம். ஏற்கனவே பள்ளிப்பருவத்தில் பல போட்டிகளில் வென்றவராக இருந்தால், விளையாட்டுத்துறைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மூலம் கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு சேருவதன் மூலம் பயிற்சியைத் தொடர்வதற்கும், போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். 

 இணையதள வடிவமைப்பு

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்து வருகிறது. இன்றைக்கு அனைத்துத் துறைகளுமே தகவல்களைத் தொகுத்துத் தருவதற்கு, சேமித்து வைக்க, விளம்பரப்படுத்திக் கொள்ள இணையதளங்களை உருவாக்கிக் கொள்கின்றன. இவற்றை உருவாக்குபவர்கள் மற்றும் வடிவமைப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. 

வெளிநாட்டு மொழிகள்

வெளிநாட்டில் வேலை தேடிச் செல்பவர்களுக்கு அந்தந்த மொழிகளைக் கற்றுத் தருபவர்களுக்கு கிராக்கி இருக்கிறது. சுற்றுலாத்துறையில் வழிகாட்டிகளுக்கான வேலைவாய்ப்பும் உள்ளது. அனைத்து நாடுகளின் தூதரங்களிலும் ஊழியர்களாகப் பணிபுரிவதற்கான வாய்ப்பு வெளிநாட்டு மொழிகளைப் பயின்றவர்களுக்கு உள்ளது. முக்கியமான நாடுகளில் பேசப்படும் மொழிகளைச் சொல்லிக் கொடுப்பதற்கான ஆசிரியர்களின் தேவையும் இருக்கிறது. இதுபோன்று பல்வேறு வாய்ப்புகள் உள்ள இந்தத்துறையில் சேர்ந்து வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொள்வது பலனளிக்கும்.

தேசத்தைப் பாதுகாக்க விருப்பமா?

ராணுவம் மற்றும் துணை ராணுவம் ஆகிய இரண்டிலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பத்தாம் வகுப்பு நிறைவு செய்ததிலிருந்தே இந்த இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம். ராணுவத்திலும் இளைஞர்கள்தான் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். 30 வயது நிரம்புகையில் பெரும்பாலான ராணுவத்தினர் பத்து ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே இளம் வயதிலேயே போர் வீரர்களை பணிக்கு எடுப்பதில் ராணுவம் கவனம் செலுத்துகிறது.தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை ஆகியவை ராணுவம் என்று கருதப்படுகின்றன. இதில் நேரடிப் போரில் ஈடுபடும் பிரிவைச் சேர்ந்த அனைவருமே கிட்டத்தட்ட 20 வயதுக்கு முன்பே தேர்வு செய்யப்பட்டு விடுகிறார்கள். நிர்வாகம், கணக்கியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு பட்டதாரிகளைத் தேர்வு செய்கிறார்கள். ராணுவத்திற்காக தனியாக மருத்துவக் கல்லூரியே உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு நிறைவு செய்த பிறகு இந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதில் பயில்வோர் ராணுவத்தில் மருத்துவ அதிகாரிகளாகப் பணிபுரியலாம். 

இந்தப் பணியில் சேர்ந்து குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்தால் ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்று விடுகிறார்கள். இந்தியாவின் நடுத்தர மக்களுக்குப் பெரும் நிவாரணமாக இருந்து ஓய்வூதியம் கிட்டத்தட்ட அனைத்துத்துறைகளில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. முன்னாள் ராணுவத்தினரைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு இன்னும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. பணியில் இருக்கும்போதும் ஏராளமான சலுகைகள் உள்ளன. அதில் பல சலுகைகள் ஓய்வூக்குப் பிறகும் தொடர்கிறது.

துணை ராணுவம்

மத்திய துணை ராணுவம், எல்லைப் பாதுகாப்புப்படை, அசாம் ரைபிள்ஸ், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை என்று பல்வேறு பிரிவுகள் துணை ராணுவத்தில் உள்ளன. பணியைப் பொறுத்தவரை, ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஊதியங்களிலும், சலுகைகளிலும் கூட பெரிய வேறுபாடுகள் எதுவுமில்லை. அந்தஸ்தில் கூட, முன்னாள் துணை ராணுவத்தினர் என்ற புதிய பிரிவை உருவாக்கியிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பினரும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகையில், துணை ராணுவத்தினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. குறைந்தபட்சப் பணிக்காலத்தை நிறைவு செய்து விட்டு விருப்ப ஓய்வு பெற்று வரும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் அரசுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி தேச சேவை செய்யும் வாய்ப்பும் இளமைப் பருவத்திலேயே கிடைக்கிறது.