tamilnadu

img

தமிழ்ப் புனைகதைகளில் காந்தி

தமிழில் புனைகதைகள், இதழ்கள் என்ற இரண்டின் வழியாகவும் காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றவர், அக்காலத்தில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர் ராஜாஜி. மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் கூட. அவர் , தமிழ்நாட்டில் மதுவிலக்கை அறிமுகம் செய்த முதலாவது முதலமைச்சர் . எனவே , காந்தியின் இதயத்திற்கு நெருக்கமான கொள்கையான மதுவின் தீமைகளுக்கு எதிராக அவரது கதைகள் பரப்புரை செய்ததில் வியப்பு எதுவுமில்லை. பின்னர் மிகக் குறைந்த செலவில் திரைப்படமாக எடுக்கப்பட்ட அவரது சிறுகதைதான் 'திக்கற்ற பார்வதி ' சிங்கீதம் சீனிவாசராவுக்குத் தேசிய விருதைப் பெற்றுத்தந்தது . 

கருப்பனை மணந்துகொண்ட மகிழ்ச்சியான இளம்பெண் பார்வதியின் கதைதான் திக்கற்ற பார்வதி .ஏழையாக இருந்தாலும் அன்பான மாமன் - மாமி ,பேரன்பு கொண்ட கணவன் ஆகியோருடன் அவளது வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதாக இருந்தது . கருப்பன் தனது வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒருவரிடம் கடன் பெற்று வண்டி ஒன்றை வாங்கினான். கடனைத் திருப்பிச் செலுத்தப் போதுமான அளவுக்கு வருவாய் ஈட்டவும் செய்தான் . ஆனால் அவனுடைய உறவினர் ஒருவரால் கள்ளுக்கு அறிமுகமானான். விரைவிலேயே அவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானான். துயரங்களும் இன்னல்களும் தொடர்ந்தன. குடிப்பழக்கம் அவனது வருவாயைக் குடித்தது. கடனை அடைக்க இயலாத அவனது நிலையைப் பயன்படுத்திக் கடன் கொடுத்தவரின் மகன் , பார்வதியைப் பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டான். இதனை அறியவரும் கருப்பன், அவனைக் கொன்று விடுகிறான் . காவலர்கள் அவனைக் கைது செய்து வழக்குத் தொடர்கின்றனர் . வழக்கறிஞர்களின் அறிவுரையின்பேரில் , தன் கணவனுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கள்ளப்புணர்ச்சியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்கிறாள் பார்வதி . ஆனால், நிலைமை மோசமாகத் திரும்புகிறது. கணவன் சிறைத்தண்டனை பெறுகிறான். குடும்பமும் அவளைக் கைவிடுகிறது. இறுதியாக அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். தமிழில் காந்தி பற்றிய புனைகதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 

 1. நேரடியாகவோ மறைமுகமாகவோ காந்திய சிந்தனைகளைப் பேசும் படைப்புகள். 

2.காந்தியத் தத்துவம், அவரது திட்டங்கள் இவற்றின் தாக்கம் பெற்றவர்களைக் கதைமாந்தர்களாகக் கொண்ட புனைகதைகள். 

3. காந்தியே ஒரு கதாபாத்திரமாகத் தோன்றும் படைப்புகள். ராஜாஜியின் படைப்புகள் முதல் வகையைச் சேர்ந்தவை. கல்கியின் ' அலைஓசை ' இரண்டு மற்றும் மூன்றாம்

வகையைச் சார்ந்தது. ஒரு காந்தியவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான கல்கி , அலை ஓசையைத் தமது வார இதழான கல்கியில் 70 வாரங்களுக்கு மேலாகத் தொடர்கதையாக எழுதினார்.அவர் அதைத் தமது படைப்புகளில் ஆகச்சிறந்ததாகக் கருதினார். இந்த காந்தியப் புதினம் ஒரு நூலாக வெளியிடப்பட்டபோது அது ஒரு வரலாறு படைத்தது . நான்கு நாட்களில் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையாயின. 1956 இல் இது சாகித்ய அகாடமி விருதையும் பெற்றது . 

காந்தி இப்புதினத்தில் வித்தியாசமான முறையில் ஒரு கதை மாந்தராகச்சித்தரிக்கப்படுகிறார். சீதா பாத்திரப்பார்வையின் வழி ஒரு பாத்திரமாக அவர் அறிமுகமாகிறார். காந்தியுடனான சீதாவின் மானசீக உரையாடல் கதையின் முக்கியமான திருப்பத்தில் நிகழ்கிறது . "காந்தி என்னும் கருணை தெய்வமே! தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டை விட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன் . இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தனை இன்னல்கள் நேர்ந்தாலும், எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்ய மாட்டேன். எப்படிப்பட்ட நிலையிலும் எந்தக் காரியத்தையும் ' இதை காந்தி மகாத்மா ஒப்புக் கொள்வாரா?' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன் . இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன் . இந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றும் சக்தியையும் தாங்கள் தான் எனக்கு அருளவேண்டும்!" இவ்விதம் சீதா மனதிற்குள் தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் . வாசற்கதவை சத்தமின்றி திறந்து கொண்டு வெளியேறினாள்." 

காந்திய இலட்சியத்தில் ஊறித்திளைக்கும் நூல்களைப் படைத்த மற்றொரு எழுத்தாளர், தனது படைப்புகளுக்காகப் பல்வேறு வட்டார மற்றும் பாரதிய ஞானபீடம் உட்பட தேசிய விருதுகளைப் பெற்றவரான அகிலன். அவரது ' புதுவெள்ளம் ' காந்தியத் தத்துவங்களால் தாக்கம் பெற்ற கிராமத்துச் செல்வ இளைஞன் முருகையனைச் சுற்றிச்சுழல்கிறது. புதினம் முழுவதும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் கதைத்தலைவன் காந்தியின் இலட்சியங்களை முழங்குகின்றான். காந்தியை போற்றிப்புகழுகின்றான். " கைது செய்யப்பட்ட காந்தியின் சக்தி,வெளியில் நடமாடும் காந்தியின் சக்தியைவிடப் பலமடங்கு வலிமைஉள்ளது என்பதை வெள்ளைக்காரர்கள் இந்தப் போராட்டத்தில் கண்டு கொள்வார்கள்" என்று ஓரிடத்தில் கதாநாயகன் முழங்குகிறான். அகிலன் இப்புதினத்தை ஒரு திரைப்படம் போல வாசகர்களின் ஆர்வத்தைக் கிளர்த்தும் விரைந்ததொரு நடையில் எழுதிச் செல்கிறார். நா. பார்த்தசாரதியின் " ஆத்மாவின் ராகங்கள் " அத்தகைய படைப்புகளில் ஒன்று. விடுதலை பெற்ற இந்தியாவில் ஒழுக்கத்தின் சீரழிவும் , அறம் சார்ந்த மனிதப்பண்பின் தரத்தாழ்வும் பற்றி அது வருந்துகிறது. அரசியலிலும் சமுதாயத்திலும் காந்திய விழுமியங்கள் தொலைந்து போயிருப்பதை எழுத்தாளர் காட்டுகிறார்.  

 காந்தியைப் பற்றி தமிழில் எழுதிய எழுத்தாளர்கள் அனைவரும் அவருடைய கொள்கைகளுக்காக அவரைப் புகழ்ந்து எழுதினார்கள் என்று சொல்வதற்கில்லை. விடுதலைக்குப் பின்பு பிறந்த எழுத்தாளர்கள் அவரதுஅரசியல் பற்றிக் கடுமையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்கள். எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை அடிப்படையாகக் கொண்ட " உப்புக் கணக்கு" என்ற தனது புதினத்தில், பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது காந்தி மேற்கொண்ட நிலைப்பாடு மீது சத்தியாக்கிரகி எனும் கதைமாந்தர் வாயிலாக மறைமுகமாக ஒரு கண்டனத்தை வெளிப்படுத்துகிறார். காந்தியைப் பற்றி தமிழில் எண்ணிறந்த சிறுகதைகள் பல வகைஎழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்கின்றன . சாகித்ய அகாடமி விருது விருது பெற்றவரும் விடுதலைப் போராட்ட வீரருமான சி. சு. செல்லப்பா 1964 - ல் " காந்தியுகக் கதைகள் " என்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். ' சத்தியாக்கிரகி ' எனும் தலைப்பிலான அவரது சிறுகதை மிகச் சிறந்த கதை. 

 காந்தியைப் பற்றி தமிழில் எழுதப்பட்ட கதைகளைப் பட்டியலிட்டால் அது தமிழகத்தின் பன்முகத்தன்மைக்கு சான்று சொல்லும். ஒரு சில உதாரணங்கள்: புதுமைப்பித்தனின் 'புதிய நந்தன்', சூடாமணியின் 'உள்ளும் புறமும்' , பி. எஸ். ராமையாவின் 'பதச்சோறு', அசோகமித்திரனின் 'காந்தி', ஜோதிர்லதா கிரிஜாவின் பல கதைகள், தேவபாரதியின் ' பிறிதொரு இரவு ', எஸ். ராமகிருஷ்ணனின் ' காந்தியோடு பேசுவேன் 'சுனில் கிருஷ்ணனின் ' ஆரோகணம்'.இந்திய மொழியில் உள்ள வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்கள் காந்தி பற்றி ஏராளமான படைப்புகளைத் தந்திருந்தாலும் காந்தி இன்னமும் ஒரு புதிராகவே இருக்கிறார். 

( நன்றி : நல்லி திசை எட்டும் ,

 மொழியாக்கக்  காலாண்டிதழ்,

ஜனவரி - மார்ச் , 2019)


;