tamilnadu

img

ஓட்டு - வரத.ராஜமாணிக்கம்

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து சொக்கன் தலைகீழாக போதையில் திரிந்தான். இரவு திரும்பியவன் கையில் பிரியாணி பொட்டலம் இருந்தது. முத்தம்மாள் பொட்டலத்தை வெளியே வீசி எறிந்தாள். காத்திருந்த நாய் பொட்டலத்தைக் கவ்விக்கொண்டு ஓடியது. “ஏண்டி பிரியாணியை நாய்க்கு வீசுன” என சொக்கன் அடிக்க வந்தான்.  “அப்படித்தான்யா வீசுவேன். மானம் கெட்டுப் போய் குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் ஆசப்பட்டு பொழப்ப தொலச்சிட்டு நிக்கிற நீயெல்லாம் ஒரு ஆம்பளையா” என்ற முத்தம்மாளின் வாயில் சொக்கன் ஒரு குத்து விட்டான். வலி தாங்க முடியாமல் “அய்யோ..” என முத்தம்மாள் அலறியதில், தூக்கத்திலிருந்த பாப்பா எழுந்து கொண்டாள்.  பயத்தில், “அம்மா...” என அருகில் வந்தவளை முத்தம்மாள் அள்ளி அணைத்துக் கொண்டாள்.  “அம்மா வாயில நெத்தம்” என பாப்பா துடைத்து விட்டதும், முத்தம்மாள் பொங்கி அழுதாள். தேர்தல் நாளன்று காலையில் சொக்கன் பரப்பரப்பாக இருந்தான்.  “பன்னாடிக்கு சாவி சின்னத்துல முதல் ஓட்ட நீதான் போடனும் முத்தம்மா” என கனிவாக கேட்டுக் கொண்டான். பாப்பாவை இடுப்பில் தூக்கிக் கொண்டு, முத்தம்மாள் ஓட்டுப் போட கிளம்பினாள். சொக்கனுக்கு சந்தேகமாக இருந்தது. “முத்தம்மா, மறக்காம சாவி சின்னத்துக்கு போட்டுரு, வேற சின்னத்துக்கு போட்டு எம் மான மரியாதைய வாங்கியிறாத” என கெஞ்சினான்.  பாப்பா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.  முத்தம்மாள் ஓட்டுச்சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனாள். முத்திரைக் கட்டையை எடுத்து, சாவி சின்னத்திற்கு போடப் போனவளை தடுத்த பாப்பா, “சீப்பு சின்னத்துக்கு போடும்மா” என திடமாக கூறினாள்.  மகளின் வார்த்தையில், கணவனை மறந்த முத்தம்மாள், சீப்பு சின்னத்துக்கு ஓட்டுப் போட்டாள். வெளிய வந்ததும், சொக்கன், “அம்மா எந்த சின்னத்துல ஓட்டுப் போட்டுச்சு” என பாப்பாவிடம் கேட்டான். “அம்மா..அம்மா” என இழுத்த பாப்பா “சாவி சின்னத்துல போட்டாங்க” என்றதும் சொக்கன் சந்தோசமாக முத்தம்மாளைப் பார்த்தான். முத்தம்மாள் பாப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

;