tamilnadu

img

கிடப்பில் கிடக்கும் அறுவா முக்கு திட்டம் செயல்படுத்தப்படுமா?

கடலோரத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 10 ஆண்டிற்கு ஒருமுறை (1976, 1985, 1995, 2005 மற்றும் 2015) வெள்ளப் பெருக்கினாலும், கடந்த 2004ல் சுனாமியால் 2011ல் ‘தானே’ புயலால் 2017 கடும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டது சுனாமி மற்றும் தானே புயல் போன்ற இயற்கை சீற்றங்களை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் பாதிப்பு களை அரசால் தவிர்க்க முடியும். கடலூர் மாவட்டம், சேலம், விழுப்புரம், திரு வண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் வடிகாலாக உள்ளது. அண்டை மாவட்டங்களில் பெருக்கெடுக்கும் மழை நீர் பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா, வெள்ளாறு, பரவனாறு வழியாக கடலூர், கடலூர் துறைமுகம் அடுத்த அக்கரைக்கோரி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியிலும் கடலில் சங்கமிக்கிறது. இதில் பெண்ணையாறு, கெடிலம் மற்றும் வெள்ளாறு பல கிராமங்களை கடந்து நேரடியாக கடலில் கலக்கிறது. ஆனால், நெய்வேலியில் உருவாகும் பரவனாறு இரண்டாம் சுரங்கம் வழியாக வடலூரில் உள்ள வாலாஜா ஏரியில் சங்கமிக்கிறது.

அங்கிருந்து பல்வேறு கிளைகளாகப் பிரிந்து பரதம்பட்டு, மேலப்புதுப்பேட்டை, கொத்தவாச்சேரி வழியாக ஒழுங்கற்ற முறையில் ஓடி கடலூர் துறைமுகம் அடுத்த அக்கரைக்கோரி அருகே கடலில் கலந்தது. இதனை தடுத்து, வாலாஜா ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லூரில் உள்ள பெருமாள் ஏரிக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 1991-96ம் ஆண்டு அப்போதைய அரசு, வாலாஜா ஏரி முதல் பெருமாள் ஏரி வரையில் பரவனாற்றை ஒழுங்குபடுத்திட புதிதாக ஆறு தோண்டப்பட்டது. பெருமாள் ஏரியில் இருந்து கடலுக்கு செல்லும் கீழ் பரவனாறு பல்வேறு கிராமங்கள் வழியாக வளைந்து, நெளிந்து செல்வதாலும், மழைக் காலங்களில் தண்ணீரின் வேகம் குறைவதால், தண்ணீர் வடிவதில் தாமதமாகிறது. மேலும், பரவனாறு கடலில் சங்கமிக்கும் அதே இடத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, கடலூர் வழியாக பெருக்கெடுத்து வரும் கெடிலம் ஆறும் கடலுடன் சங்கமிக்கிறது. கெடிலம் ஆறு மேட்டு பகுதியிலிருந்து நேரடியாக ஓடி வருவதால் அக்கரைக்கோரி முகத்துவாரத்தில் கெடிலம் ஆற்று நீரே முதலில் கடலுக்குள் செல்லும்,. பரவனாற்று  தண்ணீர் வடிய காலதாமதமாகும் பரவனாறு  மேல் பரவனாறு, கீழ் பரவனாறு, நடுபரவனாறு என்று 3 நிலைகளைக் கொண்டுள்ளது. கீழ்பரவனாறு பெருமாள் ஏரியின் தலைப்புப் பகுதியில் உள்ள உபரி நீர் போக்கியில் தொடங்கி 25 கி.மீ. தொலைவு கீழ் பரவனாறாக பயணித்து, பிறகு உப்பனாறாக மாறி 10 கி.மீ. தொலைவு கடந்து கடலூர் துறைமுகம் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கீழ்பரவனாற்றில் கரைகள் ஏதுமில்லாததால் வெள்ளக்காலங்களில் வெள்ள நீரானது பரந்து விரிந்து சென்று கடலில் கலக்கிறது.

பெருமாள் ஏரியின் பாசனத்துக்குள்பட்ட 6,503 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்படைகிறது. மேலும், வெள்ளநீர் வடிவதற்கு மிகுந்த காலதாமதமாவதால் இந்தப் பகுதியில் வேளாண் பயிர்கள் பாதிப்புகள், மனிதன், கால்நடைகள் உயிரிழப்பு ஆகியவையும் ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பைத் தடுக்க கீழ் பரவனாற்றில் வரும் தண்ணீரை நேரடியாக கடலில் கலக்கும் வகையில் திருச்சோபுரம் கிராமத்தில் ஒரு புதிய வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

அதே போல, பரவனாறு கடலூர் துறைமுகம் அருகே கடலில் கலக்கும்போது, கடலின் முகத்துவாரம் பகுதி மண்மேடாக மாறி விடுகிறது. இந்த முகத்துவாரம் பகுதி வழியாகவே மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். கடலில் மேடு உருவாகும் போது படகின் அடிப்பகுதி தரையைத் தட்டி படகு விபத்தில் சிக்கிக் கொள்கிறது. இதனால், பிடித்து வரப்பட்ட மீன்கள் கடலில் கொட்டிவிடுவதோடு, மீனவர்கள் உயிரிழக்கவும் நேரிடுகிறது. எனவே, இதனைத் தடுக்கும் வகையில் திட்டம் தீட்ட வேண்டுமென மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதனடிப்படையில், பரவனாற்றின் போக்கை சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே வழிமறித்து புதியதாக வடிகால் அமைத்து கடலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பானது பார்வைக்கு அருவாளின் மூக்கு போன்றத் தோற்றத்தை அளிப்பதால் அதற்கு அருவாள் மூக்குத் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.95 கோடியில் செயல்திட்டம் வடிவமைத்துள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் வெள்ளக்காலங்களில் பரவனாறு மற்றும் பெருமாள் ஏரியிலிருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 42,800 கனஅடி நீர் வெளியேறும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 15 கி.மீ. தொலைவுக்கு கடல் நீர் பரவனாற்றில் உள்புகுவது தடுக்கப்படுவதுடன், குண்டியமல்லூர், பெரியபட்டு, ஆலப்பாக்கம், கம்பளிமேடு, திருச்சோபுரம் உள்ளிட்ட 24 கிராமங்கள் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்.

தற்போதைய நிலை

இத்திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் செய்ய நிதித்துறைக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் 27 கடலூர் மாவட்ட ஆய்வு கூட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். அதை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.