tamilnadu

img

உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் முயற்சி - பி.ராஜீவ், தேசாபிமானி முதன்மை ஆசிரியர்

 பி.ராஜீவ், தேசாபிமானி முதன்மை ஆசிரியர்

ஐக்கிய அரபு எமிரேட் (யுஏஇ) தூதரகத்திற்கு ராஜீய நடவடிக்கை என்ற பெயரிலான பார்சலில் தங்கம் கள்ளக் கடத்தல் நடந்த சம்பவம் சாதாரண நிலையில் மாநில அரசுக்கு எவ்விதத்திலும் அதிகாரமில்லாத துறையில் நடைபெற்ற விஷயமாகும். ஆனால், பல ஊடகங்களும் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப்-பும், பாஜகவும் சேர்ந்து முதலமைச்சரையும் இடது ஜனநாயக முன்னணி அரசையும் தவறான முறையில் சித்தரிப்பதற்காகப் பொய்களைக் கட்டமைப்பதன் மூலம் முயற்சிக்கின்றன. இதற்காக ஒருபகுதி ஊடகங்கள் ஓய்வில்லாத பொய்ப் பிரச்சாரம் நடத்துகின்றன. பொய்ச் செய்திகளையும் படங்களையும் காங்கிரசும் பாஜகவும் அவர்களே தயாரித்து சுயநல அரசியல் நோக்கத்திற்காக கைகோர்த்துக் களத்தில் இறங்கியுள்ளன. முதலமைச்ச ரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி க்குக் குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ளது என்ற செய்தியை மாநில அரசையும் முதலமைச்சரையும் இந்த  வழக்குடன் இணைப்பதற்கான சரடாக இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மாநிலஅரசு தயங்காது

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சம்பந்த மான செய்திகள் வெளிவந்த சமயத்திலேயே அவரை அந்தப் பொறுப்பிலிருந்து முதலமைச்சர் நீக்கிவிட்டார். குற்றம் புரிந்த எவரையும் பாதுகாக்கிற தன்மை இந்த  அரசுக்கு இல்லையென்றும், உப்பு தின்றவர் தண்ணீர் குடிக்கட்டும் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி முதல மைச்சர் அறிவிக்கவும் செய்தார். கள்ளக் கடத்தல் சம்பந்த மாக முழுமையான விசாரணைக்காக தகுந்த மத்திய ஏஜென்ஸியைப் பொறுப்பாக்க வேண்டுமெனக் கோரி பிரத மருக்கு முதலமைச்சர் கடிதமும் எழுதினார். அத்துடன், குற்றவாளிகளில் ஒருவர் ஐ.டி.துறையின் கீழ் உள்ள ஸ்பேஸ் பார்க் மார்க்கெட்டில் பொறுப்பு வழங்கப்பட்ட நிறுவனத்தின் பிரிவில் ஆறு மாதங்களுக்கான தற்காலிக பணியாளராக இருந்தார். அதற்காக அவர் பயன்படுத்திய தகுதிச் சான்றிதழே போலியாக இருந்ததென்ற குற்றச் சாட்டும் எழுந்தது. அது குறித்து விசாரணை நடத்தப் படும் என்று அரசு தெளிவாக்கியுள்ளது. எந்தவொரு விசார ணையிலும் எவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டாலும் அவரைப் பாதுகாப்பதற்கான ஒரு நிலைப்பாடும் மாநில அரசுக்கு இல்லை என்றும் முதலமைச்சர் தெளிவாக்கி விட்டார். முக்கியமான பணியில் உள்ள இந்த அதிகாரி ஏதேனும் தவறு செய்திருப்பதைக் கண்டறிந்தால் கடும் நடவடிக்கையெடுக்கவும் மாநில  அரசு தயங்காது.

ஊடகங்களின் வேடம்

இந்த வழக்கை விசாரித்த சுங்கத்துறையும் என்ஐஏயும் கைதுசெய்த குற்றவாளிகளில் ஒருவருக்குப் பாஜகவுடன் தொடர்பு உள்ளது. முடிவில் கைதுசெய்தது முஸ்லிம் லீக்கின் முக்கிய தலைவரின் நெருங்கிய உறவி னரைத்தான். இந்த வழக்கு சம்பந்தமாக இடதுசாரியுடன் தொடர்புள்ள ஒருவர் பேரிலும் குற்றச்சாட்டு எழவில்லை. முதலமைச்சரின் அலுவலகத்துடன் தொடர்புள்ள குற்றச் சாட்டுக்கு உள்ளானவர் ஐஏஎஸ் அதிகாரியாவார். என்றாலும், ஊடகங்கள் என்னவெல்லாம் பொய்களை ஜோடித்து வெளியிடுகின்றன. குற்றவாளிகளில் ஒருவர் சி.பி.எம். உறுப்பினர் என்று ஒரு செய்தியை முறைகேடாக உருவாக்கினார்கள். ஏசியாநெட் சானல் ஆசிரியர் அது தவறு என்று சொல்லி வருத்தம் தெரிவித்தார். என்றாலும், சில ஊடகங்கள் அதற்குக்கூடத் தயாரில்லை. குற்ற வாளிகளுக்குத் தங்கத்தை விட்டுக்கொடுக்க வேண்டு மெனக் கோரி சுங்கத்துறையைத் தொடர்புகொண்ட யூனியன் தலைவரின் தேசத்துரோகக் குற்றம் என்று என்ஐஏ கண்டறிந்த குற்றவாளிகளுக்காக வாதிட்ட வழக்க றிஞரின் சமூக ஊடக அக்கவுண்டுகளை வெறுமனே பார்த்தால்கூட எவருக்கும் பிடிகிடைக்கிற அவரின் அரசியல் உறவை இந்த ஊடகங்கள் கண்டுகொண்டதாக நடிக்கக் கூட தயாரில்லை.

குற்றவாளிகளைப் பிடிப்பதில் கேரள போலீஸ் தோற்றுவிட்டதென்றும், ஆறு நாட்களாகக் கேரள போலீஸால் முடியாததை 24 மணி நேரத்தில் என்ஐஏயால் முடிந்தது என்றும் தலைப்பு போட்ட ஊடகங்கள் உண்டு. ஒத்துழைக்கவில்லை என்று தலையங்கம் எழுதியவர்கள் உண்டு. ஒரு விவாதத்தில் சுங்கத்துறையின் சூப்பி ரெண்டாக இருந்தவர் இது சம்பந்தமாகத் தெளிவுபடுத்தி னார். ஒரு மத்திய ஏஜென்ஸி விசாரணை நடத்துகிற வழக்கில் அவர்கள் கேட்காமல் மாநில அரசின் போலீசால் எவருக்கு எதிராகவும் எஃப்ஐஆர் பதிவுசெய்யவோ, கைதுசெய்யவோ முடியாது என்பது சாதாரண அறிவுள்ள எவருக்கும் புரியக்கூடியது. என்றாலும், இத்தகைய தவறான பிரச்சாரத்தால் தவறான புரிதல் உண்டாக வாய்ப்புள்ளது என்பதால் இந்த விளக்கம் தேவைப்படு கிறது. போலீஸ் உள்ளிட்ட உதவி பெறுவதற்கு சுங்கத்துறைச் சட்டம் சுங்கத்துறைக்கு வாய்ப்பு வழங்குகிறது. ஆனால், அதற்கு ஏற்ப சுங்கத்துறை, போலீசின் உதவியைக் கேட்டது ஜூலை 11 மதியத்திற்குப் பிறகுதான். உடனே மாநில போலீஸ் விரிவான விசாரணைக் குழுவை நியமித்தது.

இனி, என்ஐஏ சட்டத்தைப் பார்த்தால் அதன் 6-வது  பிரிவின் 6-வது உபபிரிவுப்படி மாநில போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கை என்ஐஏயிடம் ஒப்படைப்ப தற்கு மத்திய அரசு முடிவு செய்தால் மட்டுமே மாநில அரசும் போலீசும் அவசரமாக விசாரணையை முடித்துக் கொண்டு அனைத்து ஆவணங்களையும் என்ஐஏவிடம் உடன் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒரு சட்டம் இருக்கிற நாட்டில்தான் என்ஐஏவும், அதற்கு முன்பு சுங்கத் துறையும் விசாரணை நடத்துகிற வழக்கில் - தங்களின் அதிகார எல்லைக்குள் வராத வழக்கில் மாநில போலீஸ் குற்றவாளியைக் கைதுசெய்யவில்லை என்று பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அடுத்து இதன் தொடர்ச்சியாக, குற்றவாளி கள் கர்நாடகத்திற்குத் தப்பிச் செல்வதற்கு மாநில போலீஸ் உதவியது என்ற பிரச்சார வேலையை ஆரம்பித்தனர். மூன்றாவது லாக்டவுனில் எவ்வாறு தலைநகரிலிருந்து தப்பிச்சென்றார்கள் என்ற கேள்வியை முதலாவது பக்கத்தில் கேட்ட மலையாள மனோரமா பத்திரிகையே அவர்களின் வெப் எடிசனில் மூன்றாவது லாக்டவுனுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தலைநகரிலிருந்து தப்பிச் சென்றார்கள் என்ற செய்தியையும் வெளியிட்டி ருந்தார்கள்! மாநிலத்திலிருந்து வெளியே பயணப்படு வதற்கு, புறப்படுகிற மாநிலத்தின் அனுமதி தேவை யில்லை என்று மத்திய அரசின் உத்தரவு நடைமுறையில் இருக்கும்போதுதான் இந்தப் பயணம் என்பது இவர்கள் யாருக்கும் தெரியாதா? கர்நாடக அரசின் சேவா சிந்து ஆப்பில் ரிஜிஸ்டர் செய்ததன் பிரின்ட் அவுட்டைக் காட்டி னால் மட்டுமே  அவர்களுக்கு அந்த மாநிலத்திற்குள் செல்வ தற்கு முடியும். அதுமட்டுமல்ல, பெங்களூரு நகரத்தில் மட்டும் 168 தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்கள் உண்டு என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நாளில்தான் இந்தக் குற்றவாளிகள் அந்த நகருக்குப் போய்ச் சேர்ந்த னர். எந்த அரசியல்வாதியென்று இதற்குள் தெளிவாகி யுள்ள ஒரு குற்றவாளி கர்நாடகத்திற்கு எவ்வாறு சென்றார் என்பதை விசாரணை செய்யாமலிருப்பவர்கள் யாருடைய நலனைப் பாதுகாக்கிறார்கள்? மாத்ருபூமியின் மற்றொரு செய்தியையும் சேர்த்து வாசிப்பது. நன்றாக இருக்கும். ஸ்வப்னாவின் வேலைக்கு ‘க்ளீன்சிட்’ தந்தது கர்நாடகத்தி லிருந்துதான் என்பதே அந்தச் செய்தி. இவ்வாறு இருக்கை யில் இந்தக் கர்நாடகத் தொடர்புக்குப் பதில் சொல்ல வேண்டியது யாராக இருக்கும்?

உண்மைக் குற்றவாளிகள் 

உண்மையில் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கிற ஒன்றாக மாறிய தங்கக் கள்ளக் கடத்தலில் அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பி விடுவதற்கான இந்த முயற்சி எதற்காக வேண்டி? முதலாவதாக, உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்வதற்கான முயற்சி; இரண்டாவதாக, சுயநல அரசியல் நோக்கத்திற்காகவும் அதிகார மோகத்திற்கா கவும் எந்த எல்லை வரையும் போவதற்கான அடங்காத வேகம். இந்தியாவுக்கு வரும்  தங்கக் கள்ளக் கடத்தலில் 2 சதவீதம் மட்டுமே கைப்பற்றப்படுகிறது என்று ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. கூகுளில் ரத்குன திரிவேதி  என்ற பெயரைத் தேடினால் 1300 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு டன் தங்கம் குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையம் வழியாக கடத்திக் கொண்டுவந்த வழக்கில் பிடிபட்டதைக் காணலாம். இவ்வளவு தங்கம் எதற்காக என்பதும், யாருக்காக என்பதும் இன்றுவரையும் தெளிவற்ற அனுமா னங்களாகவே தொடர்கின்றன.

ராஜீய ரீதியான வழியில் நடந்த முதலாவது கள்ளக் கடத்தல் இது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மனோரமா பத்திரிகையின் ஆன்லைனிலேயே ஒரு செய்தியைப் பார்க்க முடியும். 2013ல் சிங்கப்பூரிலிருந்து தில்லிக்கு வந்த யுஏஇயின் ராஜீய ரீதியான பார்சலில் 37 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது என்பதே அந்தச் செய்தி. வளைகுடா நாடுகளிலிருந்து வருகிற கள்ளக் கடத்தலின் திகைப்பூட்டுகிற சித்திரத்தை பல நீதி மன்றங்களிலும் சுங்கத்துறை தந்த சத்தியவாக்கு மூலங்க ளிலிருந்து வாசித்தறிய முடியும். திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே சுங்கத்துறை உயர்அதிகாரிக்கு எதிரான கள்ளக் கடத்தல் சம்பந்தமாக மூன்றுக்கு மேற்பட்ட மத்திய ஏஜென்ஸிகள் விசாரணை நடத்துகிறார்கள். கள்ளக் கடத்தலுடன் சம்பந்தம் உள்ளதாக இந்த வழக்கில் மட்டுமல்ல, மற்ற வழக்குகளிலும் கண்டறியப்பட்ட வர்களின் அரசியல் தொடர்புகள் பல சமயங்களிலும் வலதுசாரி அரசியல்வாதிகளுடையதாகவே இருக்கிறது. 

வீண் முயற்சி

இரண்டாவதாக, இதன் மூலம் இடதுசாரிகளை வேட்டை யாட முடியுமா என்கிற வீண்முயற்சியும் இதில் உள்ளது. கடத்த சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் மிகப் பெரும்பாலானவற்றையும் நிறைவேற்றி வரலாறு படைத்த கேரள மாநில அரசுக்குப் பொதுசமூகத்தில் நல்ல அங்கீகாரம் உள்ளது. இயற்கைச் சீற்றம் வேளைகளிலும், கொரோனா காலத்திலும் பினராயி விஜயன் இயக்குகிற அரசும், அவர் வகிக்கிற ஈடுஇணையற்ற மிகச்சிறப்பான தலைமையும் உலகின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த ஆட்சி தொடரும் என்று சில ஊடகங்களே எதிராளிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தது. இவற்றையெல்லாம் கண்டு மிரண்டுபோன எதிர்க்கட்சி கொரோனா கொள்ளை நோயின் சமூகப் பரவலுக்கு உதவும் விதமாக நேரடியாகக் களம் இறங்கி யது. ஆனால் மக்கள் அதை நிராகரித்துவிட்டனர். அத னால்தான், மாநிலத்திற்கு ஒரு சம்பந்தமும் இல்லை யென்றாலும் ஒரு வழக்கைத் திசைதிருப்பிவிட்டு உண்மை யான குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்வதற்கும் சுயநல அரசியல் நோக்கத்திற்காகவும் காங்கிரஸ் தலை மையிலான யுடிஎப் -பாஜக கூட்டணி முயற்சிக்கிறது. காங்கிரஸின் மாவட்டத் தலைவராகிய ஒரு பெண் உள்பட படங்களை மார்ஃப் செய்து வெளியிடுவது கேரளத்தின் பொதுச்சிந்தனைக்கு விடுக்கும் சவாலாகும்.

நடுநிலையுடன் விசாரணை நடத்தி இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்தால் இப்போதைய பொய்க்கதைகளைக் கட்டமைப்பவர்களின், அவற்றை வெளியிடுபவர்களின் தனிநிறத்தை மக்கள் அடையாளம் காண்பார்கள்.

நன்றி: தேசாபிமானி (14.7.2020)
தமிழில்: தி.வரதராசன்



 

;