tamilnadu

img

எட்டு வழிச்சாலையால் எந்தப் பயனும் இல்லை

எட்டுவழிச்சாலை பிரச்சனையில் எழக்கூடிய முதல் கேள்வி- இந்த திட்டம் நல்லதுதானே, இதற்கு ஏன் எதிர்ப்பு, சாலைகள் போடுவதும் ஊருக்கு ஊர் நல்ல போக்குவரத்து தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதும் நல்ல பணிதானே என்று தோன்றும். ஆனால் இன்று நம் சமுதாயம், குறிப்பாக தமிழ்நாட்டில் அதைவிட மிக முக்கியமான பணிகள் முடங்கியோ அல்லதுஎதுவும் செய்யப்படாமலோ இருப்பதைத்தான் பார்க்கிறோம். ஏற்கெனவே நமது மாநில அரசு பல லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருப்பது குறித்து பத்திரிகையில் படிக்கிறோம். ஆக இன்று அரசின் பணிகள், இருக்கும் பிரச்சனைகளில் எது முக்கியமானது என்று தீர்மானித்து அவற்றை முன்னிறுத்தி செய்ய வேண்டுமேயன்றி, தேவையற்ற அல்லது அவ்வளவு அவசியமில்லாத ஒரு பணிக்காக10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட வேண்டுமாஎன்பதை அரசு யோசிக்க வேண்டும்.

சேலத்திற்கு ஏற்கெனவே இரண்டு பெரு வழிச்சாலைகள் உள்ளன. 1) செங்கல்பட்டு, விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, ஆத்தூர் வழி, 2) வேலூர், கிருஷ்ணகிரி வழி, 25 அல்லது 30 கிலோ மீட்டர்கள் குறைக்கப்படும் என்பதற்காக நாம் இழப்பது எவ்வளவு என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். 10 ஆயிரம் கோடி இன்றைய மதிப்பீடு. இதுஇன்னமும் பல காரணங்களுக்காக அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதுதான் பொதுப்பணித்துறையில் வழக்கமாக நடப்பது. மற்றொன்று இதன் விளைவாக பலநூற்றுக்கணக்கான மரங்கள், காடுகள், கனிம வளங்கள்,விவசாய பூமி, நடுத்தர ஏழை விவசாய குடும்பங்கள் நசிந்துபோகும் நிலை என எண்ணிலடங்கா பிரச்சனைகள்.வேறு பல முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் கவனிக்கப்படாமல் உள்ளன என்று சொல்லும் போது, அவை ஒன்றா, இரண்டா? அரசாங்க மருத்துவமனைகள், பள்ளிகள் இவைகளுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்யப்படாமல் இருக்கும் பல பிரச்சனைகள் இருக்கும் போது இந்த திட்டம் தேவையில்லை. அரசாங்க மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர்கள், தேவையான மருந்துகள் கூட இல்லாத நிலையைத்தான் பார்க்கிறோம். ஏரிகள், கண்மாய்கள் தூர்வாறப்படக்கூட நிதி இல்லாத நிலையைப் பார்க்கிறோம்.

தேவையற்ற ஒன்று

சரி. இப்பொழுது மற்ற தேவையான பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு சாலைகள் போக்குவரத்துக் குறித்து மட்டும் நாம் யோசிப்போம். இருக்கின்ற சாலைகளை சரியாக மேம்படுத்துவது, பராமரிப்பது என்பதே நடக்காமல் இருக்கும் போது, ஏற்கெனவே தொடர்புள்ள ஊர்களுக்கு புதிதாக சாலையமைப்பது தேவையற்ற ஒன்று.நம் மாநிலத்தில் பெரிய, சிறிய ஊர்களை எடுத்துக்கொண்டால், பிரதான சாலைகளை மட்டும் நன்றாக வைத்துக் கொண்டிருப்பதில் மட்டும் சரியான பலனில்லை. ஆனால் ஒரு ஊரில் கூட கிளைச்சாலைகள், தெருக்கள் இவைகள் சரியாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக வாகனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலையைத்தான் பார்க்கிறோம். சென்னையில் மட்டுமல்லாமல், மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி இன்னும் மற்ற சிறிய ஊர்களில் பல இடங்களில் ஊருக்குள் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. கோவையில் சமீபத்தில் ஆவாரம்பாளையம் சாலையிலிருந்து கணபதி நோக்கி செல்லும் போது, நாம் ஒரு பெருநகரத்தில் தான் இருக்கிறோமா என்ற ஐயம் ஏற்பட்டது. வழியில் ஒரு குறுகிய கீழ்ப்பாலம் வருகிறது. அது முக்கியவழி. அது மிக குறுகலாக இருப்பதால் வாகனங்கள் ஒருதிசையில் தான் செல்ல முடியும். ஆக இரு பக்கங்களிலும் வரிசையாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருப்பது தான் அன்றாட காட்சியாக உள்ளது. இது ஒன்றும்ஒரு அடிப்பாலத்தைப் பற்றிய பிரச்சனை மட்டும் அல்ல. அதற்கு முன்பும் பின்பும் வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாத நிலையில் தான் சாலைகளும் தெருக்களும் உள்ளன.

அவினாசி சாலையின் மறுபக்கமும் குறிச்சி மருத்துவமனை, ஜி.வி.ரெசிடென்சி இந்த பகுதிகளுக்கும் சென்று பாருங்கள் நிலைமை என்னவென்று. சமீபத்தில் திருச்செங்கோட்டிலிருந்து சங்ககிரிக்கு செல்லும் பாதையிலும் அதே படிப்பாலப் பிரச்சனை இருப்பதை பார்த்தேன். இப்படிஒவ்வொரு ஊர்களிலும் சிறிய பெரிய ஊர்களிலும் இதே நிலைமை. சமீபத்தில் திருச்சி, திருநெல்வேலி, இன்னும் சில ஊர்களுக்கு சென்ற போது இதே நிலைமைதான்.ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இளம் வழக்கறிஞரின் மறைவுக்குறித்து நினைவேந்தல் நடந்தபோது என்னை அழைத்திருந்தார்கள். நெய்வேலிக்கருகில் உள்ள ஒரு கிராமம். அங்கே சிறிய கிராமங்களுக்கு சாலையே கிடையாது. வண்டி செல்லும் பாதையில் காரில்போகும் போது இப்படியும் கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனவா என்று தோன்றியது. நல்ல வேலையாக நான் ஒரு ஸ்கார்ப்பியோ காரில் சென்றதால் அதிலும் தட்டுத்தடுமாறித் தான் போக வேண்டியிருந்தது. சாதாரண காரில்போய் இருக்க முடியாது. இந்த 10 ஆயிரம் கோடியை வைத்து அப்படிப்பட்ட கிராமங்களை இணைக்கக்கூடிய சாலையோ மேம்படுத்தக்கூடிய பணியோ செய்யலாமே.

மேம்பாலங்கள்- அடிப்பாலங்கள்

சாலைகளின் இன்றைய தராதரத்தையும் ஊர்களுக்குள் உள்ள போக்குவரத்து நெரிசலைப் பற்றியும் யோசிக்க வேண்டும். முக்கிய சாலைகள் சந்திப்புகளில் மணிக்கணக்காக மக்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதில் பலியாவது நேரமும் எரிபொருள் வீணாவதும் தான். இந்த பிரச்சனைகளை எல்லா ஊர்களிலும் பார்க்கிறோம். அப்படிப்பட்ட இடங்களில் தேவை மேம்பாலங்களும், அடிப்பாலங்களும், அதை செய்யாமல் இருக்கும் வரைஎரிபொருளும் நேரமும் வீணாவதை தடுக்க முடியாது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களிலேயே இருக்கக்கூடிய பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாத அரசும் அரசு அதிகாரிகளும் சேலத்திற்கு ஒரு புதிய வழி கண்டுபிடிக்க என்ன அவசரம். அவசியம். இதனால் எத்தனை பேருக்கு பலன் இருக்கும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.உதாரணமாக, செங்கல்பட்டு விழுப்புரத்திலிருந்து சென்னைக்கோ சேலத்திற்கோ செல்பவர்கள் பழைய சாலையில் தான் போக வேண்டும்.அதே போல் வேலூர் கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் அல்லது சென்னை செல்பவர்கள் பழைய சாலையைத் தான் உபயோகிக்க முடியும். புதிய சாலையை உபயோகிக்கப் போவதில்லை. அவசியமுமில்லை. ஆக சென்னையிலிருந்து நேரடியாக சேலம் செல்பவர்கள் மட்டும்தான் இந்த புதிய சாலையை பயன்படுத்த முடியும். இதற்காக இவ்வளவு பணத்தைக் கொட்டி, ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி, விவசாயத்தை நசித்து அதை நம்பியிருக்கும் பல குடும்பங்களின் வாழ்க்கையை நசிப்பது தேவையா? சேலத்திலிருந்து செங்கல்பட்டிற்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் வந்து விடலாம். ஆனால் செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு சுமார் 50 கி.மீ வருவதற்கு 3 மணி நேரம் ஆகும். இந்த வழியில் தேவைப்பட்ட மேம்பாலங்கள் அடிப்பாலங்கள் கட்டி சீரான போக்குவரத்தை ஏற்படுத்தலாம்.

நான் மேற்சொன்ன விஷயங்களை யோசித்துப் பார்த்தால் இதனால் சொல்லொண்ணா சிரமங்களுக்கு உள்ளாவது, பல்லாயிரக்கணக்கான வாகனங்கள். அதைஉபயோகப்படுத்துவது லட்சக்கணக்கான சாதாரண மக்கள்தான். அவர்களால் விமானத்தில் செல்ல முடியாது.ஆகவே, சாலைகள், தெருக்கள் மேம்பாடு என்பது அறிவுப்பூர்வமாகவும் பொறுப்போடும் சிந்தித்து செயலாற்றப்பட வேண்டிய ஒன்று. 

நம்மை நாமே ஏமாற்றும் திட்டம்

மரங்களையும் காடுகளையும் அழித்து நாம் என்ன கண்டோம்? பருவ நிலைகளே மாறிப்போனது தான் கண்ட பலன். அதிக வெப்பம், அதிக குளிர், அதிக மழை அல்லதுமழையே இல்லாத நிலை. இதற்கெல்லாம் நாம் தான்காரணம். மரங்களை வெட்டுகிற விஷயத்தில் அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் மக்களை முட்டாள்கள் ஆக்கிவிடுகிறார்கள். ஒரு மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் நடப்படும் என்ற விதி நிகழ்வதே கிடையாது என்பதோடு, இதில் ஒரு நகைப்பிடமான கொள்கை என்னவென்றால், ஒரு மரத்தை வெட்டினால் இன்னொரு மரத்தை எங்கேவேண்டுமானாலும் பல கிலோ மீட்டர்கள் தள்ளி நடப்படலாம். இதில் எந்த பயனும் கிடையாது. கூடிய வரை அதன்அருகாமையிலேயே நடப்பட வேண்டும். அதுதான் அறிவுப்பூர்வமான விஞ்ஞானப்பூர்வமான கொள்கையாக இருக்க முடியும். இந்த மேற்சொன்ன அரசாங்க கொள்கைநம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் திட்டமாகும்.நம்மைச்சுற்றி ஏன் இப்படி நிகழ்வுகள் நடக்கின்றன? அதைச் சொல்வதற்கு நானே வெட்கப்படுகிறேன். தேர்தலில் பணம் கொடுத்தால் தான் ஓட்டு,மிக்சி, கிரைண்டர்,பொங்கல் இனாம், தொலைக்காட்சி பெட்டி, செல்போன்கள் என்பது நம்முடைய ஜனநாயகமாகிவிட்டது. ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தேர்தலுக்குப்பின் எனக்குஇன்னமும் பணம் வந்து சேரவில்லை என்று போராடியதைப்போல் ஒரு வெட்கக்கேடு இருக்க முடியுமா? இந்தியாவில் இந்த அவலநிலை எங்கும் கிடையாது. ஆங்கிலத்திலும் தமிழிலும் பழமொழிகள் உண்டு. மக்களுக்கேற்ற மன்னன்தான் வாய்ப்பான். இந்த இலவசங்களிலிருந்து எப்போது நம்மை நாமே விடுவித்துக் கொள்வோமோ. அன்றுதான் உண்மையான ஜனநாயகம் ஏற்படும்.

மருத்துவமும் கல்வியும்

இலவசமாக கிடைக்க வேண்டிய மருத்துவமும் கல்வியும் தான். அது முடிந்த கதையாக அரசியல்வாதிகளின்/முதலாளிகளின் கைக்கு போய்விட்டது. அதைப்பெற நாம் கவலைப்படுவதில்லை. அதற்காக போராட யாருமில்லை. வேண்டாத விஷயங்களுக்கு ஆயிரக்கணக்கில் கூடி போராடுகிறோம். பெருமதிப்பிற்குரிய திரு.நல்லக்கண்ணு அவர்கள், மணல் திருட்டு, கனிமத் திருட்டு, ஊழல் இவற்றைஎதிர்த்து போராடுவோம், வாருங்கள் என்று இந்த வயதிலும் இளைஞர்களுக்கு அவர் கூக்குரலிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் இதற்கு யாரும் செவிசாய்க்கத் தயாராக இல்லை.இந்த துயரமான சூழ்நிலையில் நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த பெருவழிச்சாலை எதிர்ப்புபோராட்டம் என்பது இங்கொன்றும் அங்கொன்றுமாக 50 அல்லது 100 பேர் மறியல் செய்வது கோஷங்கள் போடுவது- இவற்றில் எந்த பயனும் இல்லை. இந்த போராட்டத்தைபெரிய அளவில் எடுத்துச் சென்றால் தான் நமக்கு பயன் தரும். உங்களிலேயே ஒரு சிலர் நல்ல நட்ட ஈடு கொடுத்தால் வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தால், இந்த போராட்டத்தில் பயனே இல்லை. தேவையுமில்லை. ஆகவே இப்போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

நன்றி : உழவன் உரிமை : மே 2019




;