tamilnadu

img

எஸ்.பி. பாலசுப்பிரமணியம்... இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

“பாடும் நிலா” - என்பதே அந்தப் பாட்டுக்குயிலின் பெயராக நிலைத்துவிட்டது. அதுவோ இன்று தன் பாடும் குரலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டது. 

ஒன்றல்ல... இரண்டல்ல... ஓராயிரமா? அல்ல... அல்ல. ஒரு நாற்பதினாயிரம் பாடல்களுக்கும் அதிகம். இத்தனை பாடல்களையும் தனது எளிய ரசிக மகாஜனங்களுக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக குழைவுகளாலும், கமகங்களாலும் இழைத்து இழைத்து அந்த அன்றில் பறவை அள்ளியள்ளி வழங்கியிருக்கிறது. 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்ற பெயரை உச்சரிக்கும்போதே மனமெங்கும் இசையால் நிரம்பி வழியும் உணர்வைப் பெறாத தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், வடநாட்டு ரசிகர் என்று எவர் இருக்க இயலும்? “இயற்கையென்னும் இளையக் கன்னி”யைத்தான் அவரின் குரல் முதன்முதலில் அழைத்து தமிழில் தனது பயணத்தைத் தொடங்கினார். ‘சாந்தி நிலையம்’ (மே 23, 1969) - என்பதே அந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர். இறுதி வரையில் தனது கோடானுகோடி ரசிகர்களுக்கு சாந்தியை  - மனஅமைதியை மட்டுமே வழங்கப்போவதை அப்போதே உணர்த்திய விந்தைபோலிருந்தது அந்தத் தொடக்கம். அதே ஆண்டு சாந்தி நிலையத்தை முந்திக்கொண்டு வெளிவந்த எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ (மே 1, 1969) படத்தில் “ஆயிரம் நிலவே வா” - என்று அவர் தனது இளம் குரலில் அழைத்தபோது உடன் பாடிய சுசீலாவுக்கும்கூடச் சிலிர்த்ததாம். 

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் (4-6-1946 / 25-9-2020) என்கிற இயற்பெயரைக் கொண்ட அந்த இசைக் குயிலின் அளப்பரிய தடம் இந்தியத் திரைவானில் வேறு எவருமே எட்டமுடியாததாக இருக்கிறது. அதற்காக அவர் எடுத்துக்கொண்ட இசை முயற்சிகள், கடும் உழைப்பு எவரையுமே வியக்க வைப்பது. இத்தனைக்கும் மிகவும் இளகிய, கருணை நிரம்பிய உள்ளம் அவருடையது என்பதும், எல்லா மனிதர்களையும் நேசிக்கிற அவரது பாங்கு இணையற்றது என்பதும் அந்தப் பாடலரசனின் பெருமைகளுக்கு மகுடங்கள்.

தனது தேனொழுகும் தீங்குரலால் திரையிசையுலகின் சிகரம் தொட்ட பாலசுப்பிரமணியத்தின் தந்தை ஹரிகதா கலைஞர் சாம்பமூர்த்திக்கு தனது மகனை ஒரு பொறியாளராக்கிவிடவேண்டும் என்கிற பெரு விருப்பம். ஆனால், தந்தையின் பாரம்பரிய இசை மரபில் ஊறி வளர்ந்த பாலுவுக்கோ பாட்டுப்பாடுவதில்தான் தீராத காதல். ஒரு பாடகனாக மேடைகளில் ஜொலிக்கவேண்டும் என்கிற அவரது ஆசைக்குத் தோதாக தான் முதலில் பயின்ற அனந்தபூர் ஜே.என்.டி.யு. பொறியியற் கல்லூரியிலிருந்து உடல் நலமில்லாமல் போனதைச் சாக்காகக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். சென்னையில் வேறொரு கல்லூரியில் படித்துக்கொண்டே பாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெறுவதாகத் தொடர்ந்தன அவரது இசை முயற்சிகள். இளையராஜா, அவரது சகோதரர் பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரடங்கிய ஒரு இசைக் குழுவைத் தன் பொறுப்பில் அந்த நாளிலேயே தொடங்கிய பாலு தொடர்ந்து திரைப்படங்களில் பாடுகிற வாய்ப்புகளுக்காக முயன்றுகொண்டிருந்தார். 
முதலில் தெலுங்கிலும் பின்னர் தமிழிலும் அவருக்கான வாய்ப்புக் கதவுகள் திறக்கத் தொடங்கின. டி.எம்.சௌந்தர ராஜனும், பி.பி.ஸ்ரீனிவாசும், சீர்காழி கோவிந்தராஜனும் இன்னும் சிலரும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த தமிழ்ச் சினிமா சூழலில் ஒரு புத்தம்புது பூந்தென்றலெனப் புறப்பட்டு வந்தவர் பாலு. இளம் வயதிற்கேற்பவே இருந்தது அவரது இளமைக் குரல். ஆனாலும் அதில் அழுத்தமான இசை நுட்பங்களை உணர்ந்த இசையமைப்பாளர்கள் அவருக்கு போட்டி போட்டுக்கொண்டு வாய்ப்புகளை வழங்கினார்கள். பாலுவும் பாடலின் தன்மைக்கேற்ப தனது தனித்திறனோடான வித்தைகளை மெல்ல மெல்லக் காட்டி, ரசிகர்களிடையே ஒரு புதுவிதச் சுவையை ஊட்டினார். அவருக்கே உரித்தான அந்தத் தனித்துவ அழகை இங்கே சில பாடல்களின்வழி பார்ப்போம். 

“ஆயிரம் நிலவே வா” பாடலிலேயே சரணமொன்றில் “என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ...” எனும் வரியை இரண்டாவது முறையாகப் பாடுகிறபோது அவள் நிலை என்பதை சற்றே நீட்டி அதிலொரு குழைவையும் காட்டி, அந்தப் பாடலின் சூழலுணர்வைத் தனது குரலாலேயே ரசிக மனங்களுக்குக் கடத்தி ஜாலம் புரிந்தார். அது அப்போதே எஸ்.பி.பி. எனும் புதுப் பாடகரின் தனிச் சிறப்பை எல்லோரும் உணர வைத்தது.  பாலு தனது இசை ஆசானாகக் கருதிய மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் சேர்ந்து முத்தான முத்தல்லவோ (1976) படத்தில் பாடிய, “எனக்கொரு காதலி இருக்கின்றாள் - அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்”

- என்ற பாடலில் அந்த இரு இசை மகா கலைஞர்களும் சேர்ந்து வழங்கியது ஒரு இசைப் பெருவிருந்து என்றால் மிகையில்லை. அவர்களிருவரோடும் பியானோவும், வயலினும் சேர்ந்துகொண்டு அந்த விருந்தை மேலும் நல்விருந்தாக்கின.
“பாடும்போது நான் தென்றல் காற்று” - என்று பாலு பாடும்போதே செவிகளைத் தமிழ்த் தென்றல் வருடும். “அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ”- என்று அவரது குரல் எழுப்பும் கேள்விக்கு அந்தக் குரலின் பாங்கிலேயே பதிலிருக்கும். “வான் நிலா நிலா அல்ல...  உன் வாலிபம் நிலா” - என்று பாலுவின் குரல் ஒலிக்கும்போது அதுவொரு தீர்க்கமான தீர்ப்பாகவே தோன்றும். “கேளடி கண்மணி பாடகன் சங்கதி” - என்றால் அதிலொரு வேண்டுகோள் தொனிக்கும். “மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாடவேண்டும் காவியச் சிந்து” - என்று பாடுகிறபோது அதிலொரு  அரைகூவல் தெரிக்கும். 

“ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ...” - என்று கோபமும் சோகமுமாக அவர் கேட்கும் கேள்வியில் ஒரு கொதிப்பையே கொண்டுவந்துவிடுவார். “சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி” - என்ற வரிகளில் நேரமில்லடி என்பதை சின்ன நீட்டல் செய்து பாடுகிறபோது உண்மையிலேயே நேரமில்லை என நம்மை உணரச்சொய்யும் முயற்சி அதிலிருக்கும். “உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” - பாடலின் கடைசி வரியில் “நானென்ன கள்ளா பாலா... நீ சொல்லு நந்தலாலா” - என்கிறபோது தன்மீதான கழிவிரக்கத்துடன் கெஞ்சும் தொனியை கச்சிதமாகக் கொண்டுவந்திருப்பார். இப்படித்தான் அவரது ஒவ்வொரு பாடலிலும் பாடலின் உணர்வை உள்வாங்கிப் பாடியிருப்பார். அதுதான் அவரது தனிச் சிறப்பு. அதுதான் அவரை இந்த ரசிக உலகம் இன்றுவரையில் நெஞ்சினில் வைத்துக் கொண்டாடுவதன் ரகசியம். 

“நிலாவே வா செல்லாதே வா” - என்று அவர் பாடிய பாடலை இன்று அவருக்கே பாடவைத்துவிட்டதுதான் சோகம். அவரது கின்னஸ் சாதனையான 40 ஆயிரம் பாடல்ளைப் பாடியது மட்டுமல்லாமல் 40 படங்களுக்கும் அதிகமாக அவர் இசையமைத்திருக்கிறார். பல படங்களில் ஒரு தேர்ந்த நடிகராகவும் திறமை காட்டியிருக்கிறார். நல்லதொரு தயாரிப்பாளராகவும் வலம் வந்திருக்கிறார்.

“இந்தத் தேகம் மறைந்தாலும்  இசையாய் மலர்வேன்” - என்ற அவரது வாக்கே அவருக்கான வாக்குமூலமாகிவிட்டது இன்று. ஆமாம், அவரது இந்தத் தேகம் இனி இருக்கப்போவதில்லை. அவரது பாடல்கள் ஒவ்வொன்றிலும் இசையாய் மலர்ந்துகொண்டிருக்கப்போகிறார் ஒவ்வொரு நாளும் எப்போதும்போல இசையின் நறுமணத்தை நம் செவிகளிலும் உள்ளங்களிலும் நிறைத்தவண்ணம். அப்போதெல்லாம் அவரை நினைத்தாலே இனிக்கும்.  இனித்துக் கொண்டேயிருக்கும்! 

===சோழ. நாகராஜன்===

;