tamilnadu

img

பெண்களுக்கு எமனாகும் மைக்ரோ பைனான்ஸ் - ஐ.வி.நாகராஜன்

வேலையின்மை, மருத்துவச் செலவு, கல்விச் செலவு, விவசாயத்தில் நஷ்டம், தொழிலில் நஷ்டம், எதிர்பாராத செலவுகள் உள்ளிட்டவை கந்துவட்டிக்கு வழிவகுக்கிறது. ஒருவரிடம் கைநீட்டி வாங்கும் பணத்திற்கு நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என்று ஆயுள் முழுவதும் வட்டி கொடுத்துக்கொண்டு இருப்பவர்கள் யாரும் மிட்டா மிராசுகள் அல்ல; அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு மாடாய் உழைக்கும் எளிய மக்களே இதில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.  அதேபோல் பணத்தை கொடுப்பவர்களும் எந்த பின்புலமும் இல்லாத எளியவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த மதுரை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, நெல்லை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கித் தவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவர்கள் வாங்கும் பணத்தை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் அதற்கு மைக்ரோ வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று உருட்டி மிரட்டி வாங்கிவிடுகின்றனர் பணம் கொடுத்தவர்கள். இதனால் சொற்ப உடமைகளையும் இழந்து பலர் வீதிக்கு வந்துவிடுகின்றனர். அப்போதும் சமாளிக்க முடியாது என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதியும் போது வேறு வழியே இல்லாமல் உயிரையும் மாய்க்க தயாராகின்றனர் என்று ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றன. இந்த கொடுமைகள் தொடர்வதற்கு தமிழக அரசின் அலட்சியமும், நிர்வாகக் கோளாறுகளும் தான் காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கிராமங்களில் வாழும் பலருக்கு வங்கிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும், அப்படியே விழிப்புணர்வு இருந்து வங்கிகளில் கடன் பெறுவதற்கு முயற்சித்தாலும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பாக வங்கிக் கடன் அமைவதால் கந்து வட்டி கொடுப்போருக்கு இது ஏதுவாக அமைந்துவிடுகிறது.  இதனால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் ஏழை மக்கள் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். இப்படி வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பலரிடம் அதனை வசூலிக்க காவல் துறையினரையும் தங்களுக்கு துணையாக பயன்படுத்திக்கொள்கின்றனர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள். இதனால்தான் சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை ஏற்படுகிறது. சமீப காலமாக தமிழகம் முழுவதும் திங்கள்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறைதீர்க்கும் முகாமில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நிலையில் புகார் தெரிவிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் கந்துவட்டியின் கொடுமையின் உச்சகட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் தோழர் வேலுச்சாமி  படுகொலையை குறிப்பிட முடியும். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்திலுள்ள ஒரு பெண் தொழிலாளி கந்துவட்டிக்கான தவணை தொகையை தனது மகளிடம் கொடுத்து அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட கந்துவட்டிக் கும்பல் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டது. மகளின் வாழ்வை சீரழித்து இணையதளத்தில் வெளியிட்ட பதிவை அகற்றும்படி மன்றாடிய தாய்க்காக காவல் நிலையத்தில் வாதாடி போராடி எப்.ஐ.ஆர் போடவைத்தவர்தான் வேலுச்சாமி. இதற்கு பிறகு காவல் நிலையத்திலிருந்து மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டவரை வெறிகொண்டு வெட்டி சாய்த்தது கந்துவட்டிக் கும்பல். தமிழகத்தை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்திற்கு பிறகுதான் கந்துவட்டி தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெறும் மகளிர் குழுவினர் வாரத்தின் முதல் நாளில் தங்களுக்கான தவணைத் தொகையினை செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் கட்டாத உறுப்பினர்களின் வீட்டிற்கு மற்ற 9 பேரும் சென்று தவணை தொகையை எப்படியாவது பெற்றுத்தர வேண்டும்; குழுக்கூட்டம் நடக்கும் நாட்களில் தவணைத் தொகையை செலுத்திட பெண்கள் படும்பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இதில் குமாரபாளையத்தில் கடந்த ஆறு மாதங்களில் குழுக்கடன் கட்ட முடியாமல் அவமானத்தால் குறுகி காட்டூர் ராஜி, உடையார்பேட்டை சண்முகசுந்தரம், காலணி தையல்நாயகி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். அதன் பின்னர்தான் மைக்ரோ பைனான்ஸ் என்ற அரக்கனின் கோரமுகம் மற்றவர்களுக்கு தெரியவந்தது. ஒரு குழுவில் பணம் வாங்கிவிட்டு செலுத்த முடியாமல் தவிக்கும் பெண்கள் அதனை திருப்பிச் செலுத்த வேறு குழுவில் இணைந்து கடன் பெறுகின்றனர். இந்நிலையில் இரண்டு குழுவுக்கும் வாரந்தோறும் தவணையை செலுத்த முடியாத நிலையில், கடன் கொடுத்த அலுவலர் காவல் துறைக்கு போவதாக மிரட்டுவார். இதுபோன்ற நிலையில், மன உளைச்சலில் பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வகையில் மைக்ரோ பைனான்ஸ் என்பதும் எளிய குடும்பத்து பெண்களுக்கு எமனாக மாறிவிடுகிறது. நெசவாளர்கள், சிறு தொழில் செய்வோர்களுக்கு தங்கள் தொழிலை தொடர்ந்து நடத்திட நடைமுறை முதலீடு தேவைப்படுகிறது. வங்கிகள் பெரும் நிறுவனங்களுக்கு உரிய ஆவணங்களை பிணையாக வைத்துக்கொண்டு பணம் கொடுக்கின்றன ஆனால் சிறு தொழில் செய்வோருக்கு நிதி உதவிகளை செய்ய வங்கிகளால் இயலுவதில்லை. மேலும் வங்கியில் கடன் பெறுவதற்கான நடைமுறை விதிகள் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. இதனால் கந்துவட்டி, அடகு கடை போன்றவற்றில் அதிக வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு ஆயுள் முழுவதும் அதனை கட்டமுடியாமல் தவிக்கின்றனர்.  இன்னொருபுறம் கந்துவட்டியாக இருந்தாலும், மைக்ரோ பைனான்ஸாக இருந்தாலும் பெரும்பாலும் ஆண்களுக்கு கடன் தருவதில் தயக்கம் காட்டுகின்றனர். பெண்களைப் போல ஆண்கள் அவர்களது நிபந்தனைகளுக்கு ஒத்துப்போவதில்லை. இதனால் கந்துவட்டி நிறுவனங்கள் ஏராளமான மகளிர் குழுவை உருவாக்கி வருகின்றனர்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் மகளிர் குழுவினர் உள்ளதாக தகவல்கள் தெரிகிறது. மொத்தத்தில் கந்துவட்டி என்பது ஒரு சமூகக் கொடுமை. அந்த கொடுமைக்கு எதிரான பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அரசால் காது கொடுத்து கேட்கப்படுவதில்லை. சட்டமும் காவல் துறையும் பாதிக்கப்பட்டவர்களைவிட பணத்தை இறைப்பவர்களுக்கே பல நேரங்களில் சாதகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிக்குரலாக சுறுக்குக்கயிறும் எமனுமாக மாறுகிறது.

;