tamilnadu

img

விலை மதிப்பற்றது ஊடக சுதந்திரம் - ஜி.ராமகிருஷ்ணன்

கொரோனா தொற்று பரவலும், மர ணங்களும் மக்கள் மத்தியில் ஒரு புறம் அச்சத்தை உருவாக்கியுள்ள போது, ஊரடங்கைப் பயன்படுத்தி, மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு, வேகவேகமாக அமலாக்கி வரும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் நாசமாக்கி வருகிறது.   தேசப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கதவைப் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அகலத் திறந்துவிட்டதோடு, கனிம வளங்களையும் கொள்ளைய டிக்க ஏதுவாக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடாளுமன்ற விவாதத்திற்குப் பிறகே முடிவு செய்வோம் என்று கூறிய மோடி அரசு திடுதிப்பென அறி வித்துவிட்டது. மத்திய அரசின் மேற்கண்ட அறிவிப்புகள் எல்லாம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே ஆகும். 

ஊடகவியலாளர்களுக்கு குறி

காவல்நிலையத்தில் நிராயுதபாணியாக உள்ளவர்க ளை அடித்துச் சித்ரவதை செய்வதைப்போல், ஊரடங்கால் வீதிக்கு வந்து மக்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத சூழலைப் பயன்படுத்தி மோடி அரசு, அறிவிக்கப்படாத அவசர காலத்தைப் போலச் செயல்பட்டு மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதக் கொள்கைகளும், நட வடிக்கைகளும் விபரீத விளைவுகளை உருவாக்கும் என விமர்சிப்போர் மீது, தேச விரோத வழக்குகள் பாய்கின்றன. பாஜக அரசின் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டும் ஊடக வியலாளர்கள், அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்க ளில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள், அல்லது பணியிறக்கம் செய்யப்படுகிறார்கள். மோடி தலைமையில் பாஜக அதிகாரத்துக்கு வந்தபின் கடந்த 6 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும், 198 ஊடக வியலாளர்கள் சங்பரிவார் கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளார் கள். இந்த வன்முறைச் சம்பவ வழக்குகளில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காசி சிப்லி என்ற பத்திரிகையாளர் மத்திய அரசை விமர்சித்த தற்காக பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 

நாடு முழுவதும் கொரோனா காலத்தில் செய்திகளைச் சேகரிப்பதற்காக உயிரையும் பணயம் வைத்துப் பணியாற் றக்கூடிய பத்திரிகையாளர்கள், கொரோனா சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அரசை விமர்சித்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. மார்ச் 25க்குப் பிறகு இது வரையில் சுமார் 10 பத்திரிகையாளர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  குஜராத் மாநிலத்தில் மாநில பாஜக அரசின் தலைமை யில் மாற்றம் வரும் என்று, தாவல் பட்டேல் என்ற பத்திரி கையாளர் எழுதியதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்ட செய்தியை வெளியிட்டதற்காக வயர் இணைய இதழின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜ னுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆத்தீஷ் தசீர் எனும் பத்திரிகையாளர் 2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், டைம்ஸ் இதழில் பிரதமர் வேட்பாளரான மோடியை விமர்சித்துக் கவர் ஸ்டோரி எழுதியிருந்தார். அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக நவம்பர் 2019 இல் அவருடைய வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன் அட்டையை மத்திய உள்துறை அமைச்சகம் பறித்தது.  மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து, நாடு முழுவதிலும் ஊடக சுதந்திரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. விளைவாக, குளோபல் பிரஸ் ஃப்ரீடம் இண்டெக்ஸ் எனப் படும் ஊடகச் சுதந்திரக் குறியீட்டில், 180 நாடுகளில் இந்தியா மேலும் இரண்டு புள்ளிகள் குறைந்து 142 ஆம் இடத்தில் இருக்கிறது.  

பெண் பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்

பெண் பத்திரிகையாளர்கள் இன்னும் மோசமான அடக்குமுறைகளைச் சந்தித்து வருகிறார்கள். ஃப்ரி ஸ்பீச் கலெக்டிவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பத்திரிகை யாளருமான கீதா சேஷு, “பெண் பத்திரிகையாளர்கள் கொலை, பாலியல் வன்புணர்வு மிரட்டல்களை சந்திக்கிறார் கள்;  பின் தொடரப்படுகிறார்கள் என்றும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விவரங்கள் வெளி யிடப்படுகின்றன; அவர்கள் உண்மையைப் பேசுவதால் அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இவை” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். 

குணசேகரன் ராஜினாமா

தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசின் செயல்பாடு களை விமர்சிக்கும்  ஊடகங்களையும், ஊடகவியலாளர்க ளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாஜக, சங்பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றன. அப்படி இயலாத பட்சத்தில் அவர்கள் பணியாற்றக்கூடிய ஊடக நிறுவனங்களில் இருந்து அவர்களை வெளியேற்ற முயற்சிப்பார்கள், அல்லது பணியிறக்கம் செய்ய முயற்சிப் பார்கள். நியூஸ் 18ல் பணியாற்றி வந்த ஹசீப் முகம்மது சமீபத்தில் அவ்வாறு வெளியேற்றப்பட்டார். அதனுடைய முதன்மை ஆசிரியராக இருந்த குணசேகரன் பணி யிறக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் ராஜினாமா செய்தி ருக்கிறார். வேறு சில காட்சி ஊடகங்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் பெண் பத்திரிகையாளர்கள் மீது சங் பரிவாரங்களைச் சேர்ந்த விஷமிகள் ஆன்லைனில் அவதூறு பரப்பும் சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன.   இந்தப் போக்கு குறித்து, ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இணையவழிக் கருத்தரங் கில் உரையாற்றிய இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம், “ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உண்டு” என்றும், “தமிழக ஊடகவியலாளர்கள் ஜனநாயகம், மதச் சார்பின்மை நெறிகளை வட இந்திய ஊடகங்களைக் காட்டி லும் சிறப்பாகக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தப் போக்கை மாற்றி தமிழகத்தில் கால்பதிக்க பாஜக முயற்சிக்கிறது, இது எதிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஊடக நிறுவனங்களின் போக்கு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் நடத்தப்பட்ட இணையவழி ஊடக உரிமை மாநாடு, சங்பரிவாரத்தின் கருத்தியலை விமர்சிக்கக்கூடிய எவர் ஒருவரையும் விட்டுவைக்காமல் விரட்டிவிட்டு, அவர்கள் இடத்தில் தமது ஆதரவாளர்களை நிரப்பிட பாஜக முயற்சிக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, சங்பரிவாரத்தின் மிரட்டலுக்குப் பயந்தோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ தனது மதிப்பார்ந்த ஊடகவிய லாளர்களை கைவிடும் ஊடக நிறுவனங்களின் போக்கைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழக அரசின் லட்சணம்

தமிழக அரசு ஜனநாயகம், மதச்சார்பின்மை நெறிக ளை உயர்த்திப் பிடிப்பதற்குப் பதிலாக, சங்பரிவாரத்தின் செயல்பாடுகளுக்குத் துணை போகிறது. இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தையும், பெண் செயற்பாட்டாளரையும் இணைத்து அவதூறாக வந்த முக நூல் பதிவு குறித்தும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலை வர் ஆர். நல்லக்கண்ணு பற்றி வந்த அவதூறு குறித்தும் கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கை யும் இதுவரை எடுக்கவில்லை. பெண் பத்திரிகையாளர்கள், பெண்கள் இயக்கத் தலைவர்கள் மீது சமூக வலைத் தளத்தில் போடப்பட்ட ஆபாசமான பதிவுகள் குறித்த புகார்க ளுக்கு இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. சங் பரிவாரத்தினர் அளிக்கும் புகார்கள் மட்டும் மிகுந்த கவனத் தோடும், அவசரத்தோடும் அதீதமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. 

ஊடகத்தின் பணி என்ன?

1824 ஆம் ஆண்டில் பத்திரிகைகளின் உரிமங்களை எவ்வித விளக்கமும் தராமல் பறிக்கும் ஆணையை ஆங்கி லேய அரசு பிறப்பித்தது. அதை எதிர்த்து, ராம் மோகன் ராய் கையெழுத்து இயக்கம் நடத்தினார். ‘செய்திகள் தங்கு தடையின்றி சென்றடைவது நல்லாட்சிக்கு அவசியம்’ என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்தும் ராம் மோகன்ராயின் வார்த்தைகளையே இன்றைக்கும் நாம் எதிரொலிக்க வேண்டியுள்ளது.  பத்திரிகை சுதந்திரம் என்பது எந்த ஒரு நாடும் தவிர்த்து விட முடியாத விலைமதிப்பற்ற உரிமை என்பது காந்தியின் கருத்து. ஊடக உரிமை என்பது பேச்சுரிமை, எழுத்துரிமை,  கருத்துக் கூறும் உரிமை என அரசியல் சாசனம் வகுத்தி ருக்கும் அடிப்படை உரிமை சார்ந்தது. செய்தியையும், கருத்தையும் வெளியிடுவது ஊடகத்தின் பணி. 

சாத்தான்குளத்தில் லாக்கப்பில் இருந்த தந்தையும், மகனும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிரிழந்தார்கள் என்பது செய்தி. அவர்கள் மூச்சுத் திணறலால் இறந்தார்கள் என காவல்துறை ஆணையரும், தமிழக முதல்வரும் தெரிவித்தார்கள். இவர்கள் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது கருத்து. ஜெயராஜின் மகள் தன்னு டைய தந்தையும், சகோதரரும் காவல் துறையால் சித்ர வதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகத் தெரி வித்தார். அவர் சொன்னதும் கருத்து. இப்படி செய்திகளை யும், பல தரப்பாரின் கருத்துகளையும் ஊடகங்கள் வெளி யிட்டதன் விளைவாகவே மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து விசாரணையை தனது மேற்பார்வையில் துரிதப்படுத்தியது. ஊடகங்கள் தங்கள் பணியான செய்தி, கருத்து வெளியிடலை சிறப்பாகச் செய்த தன் விளைவாகவே காவல்துறைக்கு எதிரான வழக்கு விசாரணை சாத்தியப்பட்டுள்ளது. தனக்குச் சார்பான செய்திகளையும், கருத்துகளையும் மட்டுமே வெளியிட வேண்டும் என ஊடகங்களை நிர்ப்பந்தித்து, ஊடக சுதந்தி ரத்தைப் பறிப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.

பாஜகவின் குரலாக  இருக்க மறுத்தால்...

கொரோனா பெருந்தொற்று காலத்திலும், பாஜக இந்துத்துவா நாடாக கட்டமைப்பது, நவீன தாராளமயக் கொள்கையை முழுவீச்சில் நிறைவேற்றுவது என்ற தனது செயல்திட்டங்களை வேகவேகமாக நிறைவேற்றத் துடிக்கிறது. தேச விரோதச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற கொடுங் கோன்மைச் சட்டங்களை ஏவி,  ஜனநாயக, சிவில் உரி மைப் போராளிகளின் செயல்பாடுகளை முடக்குவது, சிறு பான்மையினர், விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை நசுக்குவது ஆகிய செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்களே நடத்தாமல் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடிய கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை 2020 திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்தைப் பதிவிட்ட செயற் பாட்டாளர்களின் வலைதளங்களையே முடக்கும் அளவு க்கு, பாஜக, கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமை மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

“பாஜகவின் குரலாக இருக்க மறுக்கும், அதன் செயல்பா டுகளையும், கொள்கைகளையும் விமர்சிக்கிற பத்திரிகை யாளர்கள் தாக்கப்படுவதும், பலியிடப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. பாஜகவின் ஊதுகுழலாக இருக்கும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் பாது காக்கப்பட்டு, சலுகை காட்டப்படுகிறார்கள். பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடக செய்திகள், வழக்கு களையும், பத்திரிகையாளர்கள் கைதுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. உண்மையை மறைத்து, பொய்ச் செய்திகள் பரப்பும் போக்கை பாஜக அரசு நிலைப்படுத்த முயல்கிறது. இந்தப் போக்கை எதிர்த்து ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், மக்கள் வாழ்வாதாரத்தையும் காக்க குரல் எழுப்ப வேண்டும்”என ஜூலை 25, 26 தேதிகளில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு விடுத்துள்ள அழைப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த அழைப்பை ஏற்றுக் குரல் எழுப்புவோம். ஊடக சுதந்திரம் காப்போம்!





 

;