tamilnadu

img

ஹோ சி மின் : நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்?

ஹோ சி மின் : நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்? எது என்னை லெனினிசத்தை நோக்கி உந்தித் தள்ளியது. 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் “கிழக்கு குறித்த பிரச்சினைகள்” என்ற சோவியத் இதழில் வெளியான கட்டுரை. (Hanoi: Foreign Languages Publishing House, 1962)

முதலாம் உலகப்போர் முடிந்த நிலையில் நான் பாரீசில் தங்கலானேன். புகைப்படக் கலைஞரின் உதவியாளர் போலவும், பண்டைய சீன புகைப்படக் கலைஞரின் உதவியாளர் போலவும், ஃப்ரான்சிலேயே தயாரிக்கப்பட்ட  “பண்டைய சீனப் பொருட்களை“ விற்பவர் போலவும் இருந்து வந்தேன். அப்போது, வியட்நாமில் ஃப்ரெஞ்ச் காலனியம் செய்யும் கொடுமைகளை கண்டிக்கும் வகையிலான துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தேன்.

அந்த காலத்தில் ரஷ்ய புரட்சியை ஒரு உள்ளுணர்வின் பேரில்தான் ஆதரித்தேனே அன்றி, அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அப்போது நான் உள்வாங்கியிருக்கவில்லை. லெனினுடைய மிகச்சிறந்த தேசப்பற்றையும், சக கூட்டாளிகளை விடுதலையடைச் செய்தவை பற்றியுமான அபிமானத்தின் பேரிலேயே அவரை வியந்து நேசித்தேன். அதுவரை லெனின் குறித்த புத்தகம் எதையும் வாசித்திருக்கவில்லை.

அதுவரை எம் தோழர்களை சகோதர சகோதரிகளே என்றுதான் நான் அழைத்து வந்தேன். அவர்கள் என் மீதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் குறித்தும் ஃப்ரெஞ்ச் சோஷலிஸ்ட் கட்சியினர் அக்கறை கொண்டிருந்தனர். அதுவே என்னை ஃப்ரெஞ்ச் சோஷலிஸ்ட் கட்சியில் இணையச் செய்தது. ஆனால் எனக்கு கட்சி குறித்தோ, தொழிற் சங்கம் குறித்தோ அல்லது சோஷலிசம், கம்யூனிசம் குறித்தோ பெரிய புரிதல் எல்லாம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.

சோஷலிஸ்ட் கட்சியின் அக்கிளையில் சூடான விவாதங்கள் நடக்கும். குறிப்பாக சோஷலிஸ்ட் கட்சியில் லெனின் உருவாக்கிய மூன்றாவது அகிலத்தில் இணைவதா? இரண்டாம் அகிலத்திலேயே தொடர்வதா? அல்லது இரண்டுக்கும் இடையில் ஒரு புதிய அகிலத்தை உருவாக்குவதா? என்கிற விவாதம் தீவிரமாக நடந்தது. நான் இக்கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன். வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் பங்கேற்று விவாதங்களை கவனமாக கேட்டுவந்தேன். துவக்கத்தில் முழுமையாக அவற்றைப் புரிந்துகொள்ள இயலவில்லை. துவக்கத்தில் எனக்கு இவ்விவாதங்கள் விளங்கவேயில்லை. எந்த அகிலத்தில் இருந்தால் என்ன? அது புரட்சிக்கு என்ன உதவிடப்போகிறது என்றே கருதினேன்.

உண்மையில் நான் விரும்பி ஆர்வமாக எதிர்பார்த்தது இவ்விவாதங்களில் கிடைக்கப் பெறவில்லை. காலனிய நாடுகளுக்கு ஆதரவாக இதில் எந்த அகிலம் நிற்கிறது? என்பதையே நான் தெரிந்து கொள்ள விரும்பினேன். 

இக்கேள்வியை நான் ஒரு கூட்டத்தில் முன்வைத்தேன். மூன்றாவது அகிலம்தான் காலனிய நாட்டு மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று சில தோழர்கள் கூறினர். அதோடு “தேசியம் மற்றும் காலனிய பிரச்சினைகள் குறித்த ஆய்வுரைகள்“ என்ற லெனினின் புத்தகத்தையும் ஒரு தோழர் கொடுத்தார்.

அந்நூலில் இருந்த சில அரசியல் வார்த்தைகளை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் அதை நான் படித்ததால் என்னால் அதன் முக்கிய கூறுகளை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. அது எனக்கு ஒரு உணர்வெழுச்சியை, உத்வேகத்தை, தெளிவான பார்வையை கொடுத்தது. அதோடு அது எனக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்தது. அதீத மகிழ்ச்சியில் நான் கண்ணீரே சிந்தினேன். நான் தனியாகத்தான் அறையில் இருந்தேன் ஆனாலும் “அன்புக்குரிய தியாகிகளே! தோழர்களே.. ! இதுவே நமக்கு தேவையானது. இதுவே நம் விடுதலைக்கான வழி“ என்று ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்பு நிற்பதுபோல் கத்தியேவிட்டேன்.

அதுமுதல் நான் மூன்றாம் அகிலத்தின் மீதும் லெனின் மீதும் நம்பிக்கை கொண்டேன்.

பொதுவாக கட்சிக் கிளைக் கூட்டங்களில் விவாதங்களுக்கு செவிமடுத்து மட்டுமே வந்தேன். கூட்டங்களில் எல்லோரும் தர்க்க ரீதியாக விவாதிப்பதாக நான் நம்பி வந்தேன். இது  விவாதங்களில் எது சரி எது தவறு என்பது குறித்தான வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடியாமல் செய்தது. லெனினுடைய நூலை வாசித்த பிறகு நான் விவாதங்களில் பங்கேற்க துவங்கினேன். என்னுடைய சிந்தனைகள் அனைத்தையும் வெளிக்கொணரும் வகையில் ஃப்ரெஞ்ச் மொழிவளம் எனக்கு இல்லாத போதும், மூன்றாம் அகிலம் குறித்தும் லெனின் குறித்தும் சொல்லப்பட்ட அவதூறுகளை எதிர்த்து வலுவாக வாதிட்டு அக்கருத்துக்களை வீழ்த்தினேன். “காலனிய ஆதிக்கத்தை எதிர்க்காமல், காலனிய மக்களின் பக்கம் நிற்காமல் எந்தவிதமான புரட்சியை நீங்கள் படைக்கப் போகிறீர்கள்“ என்பதே எனது ஒரே வாதமாக இருந்தது.

எனது இக்கருத்தை எனது கிளையில் மட்டும் பேசுவதோடு நில்லாமல் மற்ற கிளைகளுக்கும் சென்று எனது நிலையை விளக்க முற்பட்டேன். மார்ஷல் காசின், வெயில்ன்ட் கௌடரியர், மன்மௌசு  உள்ளிட்ட பல தோழர்கள் என்னுடைய சித்தாந்த அறிவு வளர்ச்சிக்கு உதவினர். இறுதியாக அவர்களோடு சேர்ந்து டார்ஸ் (Tours) மாநாட்டில் மூன்றாவது அகிலத்துடன் இணைவது என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றேன்.

துவக்க காலத்தில் கம்யூனிசம் என்னை லெனின் மீதும் மூன்றாம் அகிலத்தின் மீதும் நம்பிக்கை கொள்ளச் செய்வில்லை. தேசப்பற்றே என்னை முதலில் லெனினோடும், மூன்றாம் அகிலத்தோடும் நம்பிக்கை கொள்ளச் செய்தது. படிப்படியாக போராட்டங்களும் மார்க்சிய லெனினிய வாசிப்பும், நடைமுறை அனுபவங்களும் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்கியது. அது யாதெனில்  சோஷலிசமும் கம்யூனிசமும் மட்டுமே ஒடுக்கப்பட்ட நாடுகளையும் உலகம் முழுமையுமுள்ள உழைக்கும் மக்களையும் அடிமை நிலையிலிருந்து மீட்க முடியும் என்பதாகும்.

எங்கள் நாட்டிலும் சீனாவிலும் அதிசயம் நிறைந்த “அனைத்தையும் அறிந்த நூல்“ பற்றிய புராண கதை ஒன்று உண்டு. சிக்கலான தருணத்தில் அந்நூலை திறந்தால் அது வழிகாட்டுமாம். லெனினிசம் என்பது “அதிசயம் நிறைந்த” புத்தகம் மட்டுமல்ல; அதுவே வியட்நாம் மக்களின் புரட்சிக்கான வழிகாட்டியாகும். எங்களது இறுதி இலக்கான சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தை அடைவதற்கான ஒளிக்கீற்றுமாகும்.

 

தமிழில்: ச. லெனின்

;