tamilnadu

img

நாளும் உழைக்கும் தொழிலாளி கையேந்த வேண்டுமா? - சி.பி.கிருஷ்ணன்

தொழிலாளர்கள் கால நேரமில்லாமல் ஈவிரக்கமின்றி சுரண்டப்பட்டபோது, ”8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோஷத்தை முன் வைத்து அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் உலகெங்கிலும் தொழிலாளர்கள் மத்தியில் காட்டுத் தீ போல் பரவியது. 1886லிருந்து அந்த மே 1ம் நாள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களால் “தொழிலாளர் தினமாக” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 135வது மேதினத்தில் உலகத் தொழிலாளர்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறார்கள். உலக அளவில் ஏற்றதாழ்வு மிகவும் அதிகமாக உள்ளது. 2020 ஆக்ஸ்பாம் அறிக்கையின் படி உலகில் உள்ள 2153 பில்லியனர்களிடம் உள்ள சொத்து உலகின் அடித்தட்டில் உள்ள 60% அதாவது 460 கோடி மக்களின் சொத்தை விட கூடுதலாக உள்ளது.

22277 வருடங்கள்

”இந்தியாவில் 1% அதாவது 1.3 கோடி பணக்கா ரர்களிடம் உள்ள சொத்து, அடித்தட்டில் உள்ள 70% அதாவது 95.3 கோடி ஏழை இந்தியர்களிடம் உள்ள சொத்தின் நான்கு மடங்கைவிட கூடுதலாக உள்ளது. இந்தியாவில் உள்ள வெறும் 63 பெரும் பணக்காரர் களிடம் உள்ள சொத்து 2018-19 இந்திய நாட்டின் பட்ஜெட் தொகையான 24.42 லட்சம் கோடி ரூபாயை விட கூடு தலாக உள்ளது. ஒரு தொழில்நுட்ப கம்பெனியின் முதன்மை அதிகாரியின் ஒரு வருட சம்பளத்தை ஈட்டு வதற்கு ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்மணிக்கு 22277 வருடங்கள் ஆகும்” என்று ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.

வரலாறு காணாத நெருக்கடி

இவ்வளவு ஏற்றத்தாழ்வான சூழலில், கோவிட்-19 முழு அடைப்பின் காரணமாக உருவாகியுள்ள நெருக் கடி 1930 மற்றும் 2008 பொருளாதார சரிவைவிடக் கடு மையானதாக இருக்கும் என்று பல பொருளாதார நிபு ணர்கள் கணித்துள்ளனர். இதன் சுமையையும் தொழிலா ளர்கள் தலையில் ஏற்றுவதற்கான முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சிஎம்ஐஇ (செண்டர் ஃபார் மானிடரிங் இண்டியன் எகானமி) ஆய்வின்படி இந்தியாவில் 2020 ஜனவரி 19ம் நாள் 6.6% ஆக இருந்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மூன்றே மாதத்தில் 26.2% ஆக உயர்ந் துள்ளது. பிரதமரின் வேண்டுகோளையும் மீறி, கொரோனா முழு அடைப்பு தொடங்கிய ஒரே மாதத்தில் 13.3 கோடி பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் வெட்டப்பட்டுள்ளது. மத்திய அரசே தொழி லாளர்களின் பிஎப் பணத்திலிருந்து முழு அடைப்பு காலத்திற்கு ஊதியம் வழங்கலாமா என்று ஆலோ சித்து வருகிறது. “தொழிலாளர்கள் அவர்களது வியர்வையாலும், இரத்தத்தாலும் உருவாக்கி, எதிர்காலத்திற்கு சேமித்து வைத்துள்ள தொகையைச் சூறையாடுவது மோசமான நடவடிக்கையாகும்” என்று சிஐடியு, ஏஐடியுசி கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலை நேரம் அதிகரிப்பு

பெரும்பாலான நாடுகளில் வாரம் 5 நாட்கள் 35 மணி நேர வேலை என்றிருக்கும் சூழலில், வாரம் 6 நாட்கள் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை என்றி ருக்கும் தொழிற்சாலை சட்டத்தை திருத்தி வாரம் 6 நாட்கள் நாளொன்றுக்கு 10 மணி/ 12 மணி நேரம் என்று உயர்த்த முயற்சிக்கிறது மத்திய அரசு. குஜராத், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேச அரசுகள் 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றி உத்தர விட்டுள்ளன. குஜராத் அரசு ஓவர் டைம் சம்பளத்தை மறுத்து, சாதாரண வேலை நேர சம்பளமே கூடுதல் 4 மணி நேரத்துக்கும் வழங்கப்படும் என்று உத்தர விட்டுள்ளது. குஜராத் முதலாளிகள் சங்கம் “ஓராண்டுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க வேண்டும்” என்று அரசிடம் கோரிக்கை வைத்துள் ளது.

அகவிலைப்படி வெட்டு

மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கும், ஓய்வூதியர் களுக்கும் 2021 ஜூன் மாதம் வரை 18 மாதகாலத்திற்கு அகவிலைப்படியை வெட்டியுள்ளது. இதனால் அரசு 37000 கோடி ரூபாயை சேமிக்குமாம். அதே சமயம்  500 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் கடன் வாங்கி, வசதியிருந்தும் திருப்பி செலுத்தாத 50 பெரும் கடனாளி கள் கட்ட வேண்டிய 68600 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசும் மத்திய அரசினை பின்பற்றி மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதி யர்களுக்கும் 18 மாத அகவிலைப்படியை மறுத்துள் ளது. மேலும் சில மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை வெட்டிக் குறைத்துள்ளன.

பழிவாங்கல்

“கோவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை எதிர்கொள்ள பெரும்பணக்காரர்களுக்கு வரி போட வேண்டும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30%லிருந்து 40% ஆக வருமான வரியை உயர்த்தலாம்; ஆண்டு வருமானம் 5 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு மீண்டும் சொத்து வரியை கொண்டு வரலாம்” என்று இந்திய வருவாய் துறை அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வருமான வரித்துறைக்கு சமர்ப்பித்துள்ளது. இப்படி ஆலோசனை வழங்கிய காரணத்திற்காகவே பிரஷாந்த் பூஷன், பிரகாஷ் துபே, சஞ்சய் பஹதூர் ஆகிய இந்திய வருவாய் துறை அதிகாரிகள் சங்க முக்கிய நிர்வாகிகளுக்கு குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை அறிக்கை பொது வெளியில் வருமான வரி பற்றிய மத்திய அரசின் கொள்கை மீது குழப்பத்தையும், நிச்சய மற்ற நிலையையும் உருவாக்கி விட்டதாம்; இதன் கார ணமாக பொருளாதாரத்தில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுமாம். எனவே ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று கேட்கிறது குற்றப் பத்திரிக்கை. பெரும் பணக்கா ரர்கள் மீது வரி போட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினாலே அவர்கள் மீது மத்திய அரசு பாய்கிறது. ஆனால் கோடிக் கணக்கான அரசு ஊழியர்களின், ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை முடக்கினால் குழப்பம் எதுவும் வராதாம். ”ஓராண்டுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க வேண்டும்” என்று கோரு பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாதாம். இதை விட மத்திய பாஜக அரசு தாங்கள் யார் பக்கம் நிற்கி றோம் என்பதை எப்படி பட்டவர்த்தனமாக கூற முடி யும்?

அரசின் கடமை

ஆக, மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தொழிலா ளர்களின் போராடிப் பெற்ற உரிமையை பறிப்பதி லேயே முழு கவனத்தையும் செலுத்துகின்றன. கோவிட்-19 முழு அடைப்பினால் ஏற்படும் இன்னல் களை தீர்க்க வேண்டிய பொறுப்பு இந்த அரசு களையே சாரும். தற்போதுவரை மத்திய அரசு மேற் கொண்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் வாழ்வாதா ரத்தையே இழந்துள்ள தொழிலாளர்களின் துயரத்தை ஒப்பிடும்போது பெயரளவிலேயே உள்ளன.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபம். நேற்று வரை உழைத்து கௌரவமாக வாழ்ந்து வந்த அவர்களின் வேலையையும் பறித்துக் கொண்டு, சொந்த ஊருக்கும் செல்ல விடாமல் தற்கா லிக முகாமில் பிச்சைக்காரர்களைப் போல் நடத்தியது மத்திய அரசு. வசதி படைத்தவர்களை தகுந்த இடை வெளியோடு சொந்த ஊருக்கு அனுப்பத் தெரிந்த அரசுக்கு, இவர்களை அனுப்பத் தெரியவில்லை. குழந்தை குட்டிகளுடன் பல நூறு கிலோமீட்டர் நடந்தே சொந்த ஊருக்கு சென்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வழியிலேயே இறந்து விட்டனர். இவர் களின் மரணம் கொரோனா இறப்பு கணக்கில் சேர்க்கப் படாது. அப்படி போய் சேர்ந்தவர்களில் சிலர் மீது உயி ரற்ற பொருட்கள் மீது தெளிக்கும் கிருமி நாசினி வீசப் பட்டது.

நாட்டு மக்களுக்கு உணவு, சுகாதாரம், கல்வி, வேலை, ஓய்வூதியம் வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசையே சாரும். அனைத்து வகையிலும் நிதி திரட்டும் அதிகாரத்தை மத்திய அரசு தன் கையில் வைத்துக் கொண்டு, மாநில அரசுகளை எல்லா அசாதா ரண சூழலிலும் மத்திய அரசை கை ஏந்த வைக்கிறது. ஜிஎஸ்டியில் மாநில அரசுகளின் பங்கை கூட மத்திய அரசு உரிய காலத்தில் கொடுப்பதில்லை. மாநில அரசுகள் கூட்டாட்சி முறையை வலுப்படுத்த மத்திய அரசுடன் போராடுவதற்கு பதிலாக தொழிலாளர்கள் உரிமையை பறிப்பது அநியாயமானது.

ஒன்றுபடுவோம்

நான்கில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கும் போது வேலை நேரத்தை கூட்டுவது (ஓவர் டைம் சம்பளம் கொடுத்தாலும் கூட) அராஜகம். தொழிலா ளர்கள் ஒன்றும் பிச்சைக் காரர்கள் அல்ல. அவர்களின் உழைப்பால்தான் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை நமது நாடும், உலகமும் கண்டுள்ளது. அவர்கள் தமக்குரிய கெளரவமான வேலையை, தங்கள் உழைப்புக்குரிய நியாயமான ஊதியத்தைத் தான் கேட்கிறார்கள். அதைப் பெறுவதற்கான போராட்டத்தில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் எத்தகைய பிளவு முயற்சிகளை ஆளும் வர்க்கம் மேற்கொண்டாலும் அவற்றையெல்லாம் தொழிலாளிகள் வர்க்கமாக திரண்டு முறியடிப்பார்கள். இதுதான் வரலாறு கற்றுத் தந்த பாடம். அந்த திசை வழியிலே தொய்வில்லாமல் பயணிப்போம் என்று சபதமேற்கும் நாள் தான் மே தினம்.

தொடர்புக்கு cpkrishnan1959@gamil.com





 

;