tamilnadu

img

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்....

கோவிட்-19 எனும் கொரோனா கொடிய நோய் பரவலை தடுக்கும் பொருட்டு 2020 மார்ச் 25 முதல் நான்கு கட்டமாக மே 31 வரை 67 நாட்கள் மத்திய - மாநில அரசுகளால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நாட்களில் வேலை இழப்பு, வருமானம் இழப்பு, குடும்ப பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் அரசின் உதவி, அரசிடம் எதிர்பார்ப்பு பற்றியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விருதுநகர் மாவட்டக் குழு சார்பில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் 2020 மே 30,31 ஆகிய தேதிகளில் பொதுமக்களிடம் கள ஆய்வு செய்யப்பட்டது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 145 கிராமங்களில், 1854 குடும்பங்களிலும், 7 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் உள்ள 93 வார்டுகள் / தெருக்களில் 1229 குடும்பங்களிலும் மொத்தம் 238 பகுதிகளில் 3083 குடும்பங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்த 3083 குடும்பங்களின்  மொத்த உறுப்பினர்கள் 11,408 பேர். இதில் பெண்கள் 5717 பேர்,  ஆண்கள் 5691 பேர்,  குடும்பத்தின் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் ஆண்,பெண்,வயோதிகர், இளம் வயதினர் மற்றும் சமூகத்தின் சகல பிரிவினரிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அதன்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 3083 பேரில் விவசாயிகள் 281 பேர்,  கூலித்தொழிலாளர்கள் 1011 பேர், பஞ்சாலை தொழிலாளர்கள் 93 பேர், பட்டாசு தொழிலாளர்கள் 387 பேர், தீப்பெட்டி தொழிலாளர்கள் 208 பேர்,  அச்சக தொழிலாளர்கள் 65 பேர், கட்டிடத் தொழிலாளர்கள் 264 பேர், ஆட்டோ,கார்,வேன் ஓட்டுனர்கள் 208 பேர், விசைத்தறி தொழிலாளர்கள் 107 பேர், கைத்தறி நெசவாளர்கள் 44 பேர், வியாபாரம் செய்வோர் 103 பேர், சுய தொழிலில் ஈடுபடுவோர் 230 பேர், தையல் தொழிலாளர்கள்,  மைக்செட் பந்தல் அமைப்பாளர்கள்,  மேளம் இசைக்கலைஞர்கள் 82 பேர் என்ற எண்ணிக்கையில் இருந்தனர். இந்த ஆய்வில் கிடைத்த விபரங்கள், விருதுநகர் மாவட்டத்திற்குரியதுதான் என்றாலும், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, தமிழகம் முழுமையும் உள்ள நிலைமையின் பிரதிபலிப்பே ஆகும்.

விவசாயம் பெரும் இழப்பு
விவசாயிகள் நெல், மக்காச்சோளம்,  கரும்பு, தென்னை, மா, கொய்யா, வாழை, காய்கறி என பல உணவுப் பொருட்கள் மகசூல் செய்து வருகின்றனர். நெல்லுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள விலை 72 கிலோ மூட்டைக்கு ரூ.1300 ஆகும்.  அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்டத்தில் உற்பத்தியாகும்  நெல் 10 சதவீதம் அளவு கூட கொள்முதல் செய்யப்படுவதில்லை. வெளி வியாபாரிகளிடமே 90 சதவீத நெல் விற்பனை செய்யப்படுகிறது வியாபாரிகள் ரூ.1000த்திற்கு மட்டும் வாங்குகின்றனர்.  இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.  சராசரியாக ஐந்து ஏக்கர் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு ரூபாய் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
மா,  கொய்யா, வாழை, காய்கறி, பூ சாகுபடி செய்த விவசாயிகள் பொது முடக்க  காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோவில் திருவிழாக்கள்,  திருமண வைபவங்கள் இல்லாததால் பூ வியாபாரம் முற்றிலும் முடங்கியது. வாழைப்பழம் வாங்க ஆள் இன்றி பாதி விலை கூட கிடைக்கவில்லை. வாழைப்பழங்கள் பல இடங்களில் விற்பனையாகாமல் வீணாகியுள்ளது. பொது மக்களிடம் பணப் புழக்கம் குறைந்ததால் காய்கறி வாங்குவது குறைந்து, காய்கறிகள்  தேங்கி மிகக் குறைவான விலைக்கே விற்பனை ஆனது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தக்காளி பயிரிட்ட ஒரு விவசாயி, கடந்த வாரம் 100 கிலோ தக்காளி பறித்தேன். 2 பேர் வேலை செய்ததற்கு கூலி ரூ.400/-. தக்காளியை சந்தைக்கு கொண்டுவர வண்டி வாடகை ரூ.400/-. சந்தையில் ஒரு கிலோ தக்காளிக்கு ரூ.7வீதம் மொத்தம் ரூ.700 மட்டும் தான் கிடைத்தது. எனக்கு ரூ.100 கை நட்டம் தான் ஆச்சு. எங்களது பொழப்பு இப்படிதான் போகுது... என புலம்பினார். இதுபோலத் தான் பெரும்பாலான விவசாயிகளின் நிலைமையுள்ளது.

10 நாள் கூட வேலை இல்லை
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய கூலித் தொழிலாளர்கள் 10 நாட்கள் கூட வேலை கிடைக்காமல் வருமானமின்றி கடும் நெருக்கடியில் உள்ளனர்.  பஞ்சாலை, பட்டாசு, தீப்பெட்டி, அச்சு போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மார்ச் 25 முதல் மே 17 வரை 53 நாட்கள் முழுமையாக ஆலைகள் மூடியதால் வேலையிழந்தனர்.  சில பஞ்சாலைகளில் மட்டும் வேலை இழந்த நாட்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள பஞ்சாலைகள், பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளர்களுக்கு சம்பளம் ஏதும் கிடைக்கவில்லை.  மேலும் மே 17 க்குப்பின் 50 சதவீதம் தொழிலாளர்களை வைத்து வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.  வேலை இழப்பு, சம்பள இழப்பால்  இப்பிரிவு தொழிலாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

கட்டிடப்  பணிகள்  நடைபெறாத நிலையில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு முற்றிலும் வேலை இல்லை.  பொது முடக்கம்   இருந்த 67 நாட்களில் 7 முதல் 10 நாட்கள் மட்டுமே பலர் வேலை செய்துள்ளனர். ஏறக்குறைய  50 நாட்களுக்கும் மேல் வேலை இழந்துள்ளனர்.  நாளொன்றுக்கு ரூ.600 சம்பளம் பெறும் கட்டுமான தொழிலாளி ஒருவருக்கு ரூ.30,000 இழப்பு ஏற்பட்டுள்ளது ஆட்டோ,  கார்,  வேன் ஆகியவை 67  நாட்களும் ஓடவில்லை. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1000 வரை வருமானம் பெறும் இத்தொழிலாளர்களுக்கு ரூ.67 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாகன தவணை,  எப். சி கட்டணம்,  இன்சூரன்ஸ் பிரிமியம் என அனைத்தும் கட்ட வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உள்ளது.  வண்டி ஓடினால் மட்டுமே இவர்களின் வாழ்க்கை ஓடும். எனவே,  மிக நெருக்கடியில் நிர்க்கதியாய் இவர்கள் நிற்கின்றனர். 

தேங்கிக் கிடக்கும் பொருட்கள்
விசைத்தறி, கைத்தறி தொழில் பொதுமுடக்க காலத்தில் பாதி அளவு இயங்கியது.  நூல் கிடைக்காமலும் நெய்த துணிகள் தேக்கத்தாலும் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. சிறுகடை வியாபாரத்தில் மளிகைக்கடை, காய்கறிக்கடை, மருந்துக்கடை தவிர டீக்கடைகள், சலூன் கடைகள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட  அனைத்து கடைகளும் 53 நாட்கள் பொது முடக்க காலத்தில் அடைக்கப்பட்டிருந்தன.  அடைக்கப்பட்ட காலத்தில் வருமான இழப்பு மட்டுமல்ல கடை வாடகை, மின்சாரக் கட்டணம் போன்ற கட்டாயச் செலவுகளும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருமான இழப்பு மற்றும் செலவு என்ற வகையில் சாதாரண சிறு கடை உரிமையாளர்களுக்கு 2  மாதங்களில் ரூ. 1 லட்சம் வரை  இழப்பு ஏற்பட்டுள்ளது. 
தையல், எலக்ட்ரீசியன்,  மோட்டார் சைக்கிள் மெக்கானிக் என சுய தொழில் புரிவோருக்கு இரு மாத காலத்தில் வருமானம் ஏதும் இல்லை.  ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.  இதுதவிர ஒலி, ஒளி அமைப்பாளர்கள், பந்தல் அமைப்பாளர்கள் மேளக்  கலைஞர்கள்,  இசைக்கலைஞர்கள்,  கோவில் பணியாளர்கள்  என பலதரப்பட்ட இவர்களுக்கு தற்போது  வரை வேலை இல்லை.  எனவே, பெரும் சிரமத்தில் இவர்கள் உள்ளனர்.  பொது முடக்க காலத்தில் சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

100 நாள் வேலைத் திட்டம்
கிராமப்பகுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1854 பேரில் 622 பேருக்கு மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை உள்ளது. இதில் 205 பேருக்கு  மட்டுமே ஏப்ரல், மே மாதங்களில் வேலை கிடைத்துள்ளது.  இதில்7  நாட்கள் வரை வேலை செய்தவர்கள் 177 பேர். அதிலும் ஓரிரு நாட்கள் மட்டுமே வேலை செய்தவர் 28 பேர்.  ரூ.170 க்கும் குறைவாக கூலி வழங்கப்பட்டுள்ளது. 

ரேசன் அட்டை
மொத்தம் 3,083 குடும்பங்களில் ரேசன் அட்டை உள்ளவர்கள் 2914 பேர். ரேசன் அட்டை இல்லாதவர்கள் 158 பேர். ஏப்ரல், மே மாதங்களில் பெரும்பாலும் அரிசி, பருப்பு, பாமாயில் கிடைத்துள்ளது.10 சதவீதம் பேருக்கு ஏதேனும் ஒரு பொருள் குறைவாக கிடைத்துள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை பகுதிகளில் ஏப்ரல் மாதம் தரமற்ற அரிசி வழங்கப்பட்டுள்ளது. 

அமைப்பு சாரா நலவாரியம்
ஆய்வு செய்த 3083 பேரில் விவசாயிகள் 281 பேர். மீதமுள்ள  2802 பேரில்  அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் 767 பேர் மட்டுமே.  இதில் 567 பேருக்கு  மட்டுமே அரசு அறிவித்த உதவி நிதி கிடைத்துள்ளது. சுகாதார, மருத்துவ வசதிகள்  பற்றி  கேட்டதில் 1731 பேர் ஓரளவு இருப்பதாக தெரிவித்தனர். 1552 பேர் சுகாதார வசதி, மருத்துவ வசதி அறவே இல்லை எனக் கூறியுள்ளனர். 
67 நாள் பொது முடக்க காலத்தில் அரசு அறிவித்த சிறிய நிவாரணத்தை தாண்டி அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிரமப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.  3083 பேரில் 758 பேருக்கு மட்டுமே ஏதேனும் ஒரு நிவாரணம் கிடைத்துள்ளது. 

கடன் கடன் கடன்
இந்த நெருக்கடியான சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு 2359 பேர் கடன் வாங்கியதாக கூறினர். நகையை அடமானம் வைத்தும், வாரக்கடனாகவும் ரூ.10 வட்டிக்கு கடனாகவும் பலரும் கடன் பெற்றதாக தெரிவித்துள்ளனர். 555 பேர் உறவினர்கள், நண்பர்கள் உதவி மூலமும், சிறிய அளவிலான சேமிப்பை எடுத்தும் சமாளித்ததாக கூறினார்கள்.169 பேர் ரேசன் பொருட்களை மட்டுமே வைத்து அரை குறையாய் சமைத்து ஒருவேளை, இரு வேளை மட்டுமே சாப்பிட்டு சிக்கனமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். விருதுநகர் அருகே சுந்தரலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சிலர்,  வேலையில்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தோம். காடுகளில் பிரண்டை தண்டு பிடுங்கி கொண்டுவந்து கடையில போட்டோம். சில நாள் ரூ.100 வரை கிடைத்தது. அடுத்து அதுவும் விக்காம போனதுனால விலை குறைஞ்சு ரூ.50 தான் கிடைத்தது. அதைவைத்து தான் 15 நாட்களா வாழ்க்கைய ஓட்டுறோம் என்றனர். இராஜபாளையம், அருப்புக்கோட்டை பகுதிகளை சேர்ந்த கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் கூறியது. பல நாள் பட்டினி கிடக்கிறோம். ”பசி மறந்து போச்சு, பிள்ளைகளுக்கு பால் வாங்க காசு இல்லை. வாழ்நாளில் இதுபோல கஷ்டம் வந்ததே இல்லை. செத்துபோய்டலாமா...” என குமுறினர்.அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு 2285 பேர் நிவாரணம் ரொக்கமாக ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம்  வரை உடனே வழங்க வேண்டும் எனவும்,  203 பேர் வட்டியில்லா கடன் வழங்க வேண்டுமெனவும்,  372 பேர் வேலை கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும், 223 பேர் இந்த அரசாங்கத்திடம் என்ன கேட்டாலும் கிடைக்காது என அதிருப்தியும் தெரிவித்தனர். 

ஆய்வின் முடிவாக அரசுக்கு  பரிந்துரைகளும் கோரிக்கைகளும்
நான்கு கட்ட ஊரடங்கு அமலில் இருந்த 67 நாட்களில் பெரும்பாலான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியுடனும் பலர் ஒருவேளை உணவு உட்கொண்டும் வாழ்ந்து வருகின்றனர்.  80 சதம் பேர் கடனாளிகளாக மாறியுள்ளனர். வேலை இழப்பு அதிகம் உள்ளது.  வெளியூர்களில் வேலை செய்த பலர் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளனர்.  தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு மேலும் 30 நாட்களுக்கு பல தளர்வுகளுடன் நீக்கப்பட்ட போதிலும் மாவட்டத்தின் முக்கிய தொழில்களான பஞ்சாலை, தீப்பெட்டி,  பட்டாசு ஆகிய அனைத்தும் முழுமையாக இயங்காத நிலையில் இதில் வேலை செய்யும் தொழிலாளர்களில்  30 சதவீதம் முதல் 50 சதவீதம் பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.  கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் 100 சதவீதம் தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க தமிழக அரசு அறிவித்த போதிலும் பல ஊராட்சிகளில் இது இன்னும் அமலாகவில்லை. சிறு, குறு தொழில் செய்வோர்,  சுய தொழில் புரிவோர்,  சிறிய அளவில் வியாபாரம் செய்வோர், விவசாயிகள் அனைவருக்கும் நஷ்டமும் இழப்பும் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கையாக கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:   

1.விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் விவசாயம் செய்திட புதிய கடன்கள் வழங்க வேண்டும். 

2. வருமான வரி செலுத்தாத அரிசி ரேசன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா  நெருக்கடி முடியும் வரை மாதம் ரூ. 7500 வழங்க வேண்டும்.

3. குடும்ப அட்டை உள்ள, இல்லாத அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் 6 மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் தலா 10 கிலோ அரிசி,  துவரம் பருப்பு,  சீனி, பாமாயில் ஆகியவை இலவசமாய் கிடைக்கச் செய்திட வேண்டும்.

4. கைத்தறி, கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்கும் வகையில் நூல் தடையின்றி கிடைக்கவும்,  தேங்கியுள்ள துணிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வாரத்தில் 6  நாட்கள் தொடர்ச்சியாக வேலை வழங்கவும்,  வேலை அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அட்டை வழங்கவும், வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

6. சிறுதொழில் முனைவோர், சிறு கடை வியாபாரம் செய்வோர்,  சுயதொழில் புரிவோர் அனைவருக்கும் மத்திய அரசு அறிவித்தபடி ரூ. 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். 

6. வேலையில்லாத இளைஞர்களுக்கும்  தற்போது வேலை இழந்தோருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். 

7.  மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

8. மகளிர் குழுக்கள், நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளவர்களிடம் நெருக்கடி தந்து வசூலிப்பது தடுத்து நிறுத்துவதோடு 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.

படக்குறிப்பு 
2020 மார்ச் 25 முதல் மே 31 வரையிலான 67 நாட்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் சந்தித்த துன்பதுயரங்கள் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களிடம் விரிவான முறையில் ஆய்வு செய்தது. அது தொடர்பான அறிக்கையை, கோரிக்கைகளுடன் கட்சியின் தலைவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வியாழனன்று வழங்கினர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலசுப்பிரமணியம், எம்.மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.குருசாமி, எம்.முத்துகுமார், பி.என்.தேவா, சி.முருகேசன், வி.முருகன், எஸ்.லட்சுமி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

===கே.அர்ஜுனன்===

விருதுநகர் மாவட்டச் செயலாளர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

;