tamilnadu

img

வெட்டுக்கிளிகள் நடத்தும் உணவு யுத்தம் - வெ.ஜீவகுமார் ( வழக்கறிஞர்)

துள்ளும் வயது; மெலிந்த உருவம்; குரல் மட்டும் அந்த 15 வயது சிறுமியிடம் ஓங்கி ஒலித்தது. அவர் பெயர் கிரேட்டா தன்பர்க். ஐ.நா. சபையின் கால நிலை உச்சி மாநாட்டில் ஸ்வீடன் நாட்டின் அந்தச் சிறுமி பின்வருமாறு பேசினார். “நாங்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு நடக்கும் ஒவ்வொன்றும் தவறாக உள்ளது. நான் இங்கு இருந்திருக்கக் கூடாது. கடலின் மறுபக்கம் பள்ளியில் இருந்திருக்க வேண்டும்... இங்கு தேவைப்படுவது காலநிலை மாற்றம் அல்ல.  காலநிலை அவசரம்.... இதை உணராமல் பணம், பொருளாதார வளர்ச்சி பற்றி பெருமை பேசுகிறீர்கள். நீங்கள் எங்களை ஏமாற்று கிறீர்கள். இந்த பூமி பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. வீடு தீ பற்றி எரிகிறது. இந்த நெருப்பு அனைவரையும் அழிக்கும்.....” 

புவி வெப்பம், அவற்றின் தகிப்பினால் ஏற்படும் வாழ்நிலை மாற்றங்கள் இவையே அந்த சிறுமி உரையின்  மையமாகும். கோவிட் 19 கொரோனா தொற்று அபாயம் மனித குலத்தை மலை உச்சியில் நிறுத்தி உள்ளது. இதோ மலையின் மறுபக்கத்திலிருந்து கோடிக் கணக்கான வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நடக்கிறது. உலகின் மொத்த நிலப்பரப்பில் 5-ல் ஒரு பகுதியை அழித்து 10ல் ஒரு பங்கு உலக மக்களை பட்டினிக்கு தள்ளும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பூமி தோன்றி 200 கோடி ஆண்டுகள் இருக்கலாம். முழு பரிணாம வளர்ச்சியுற்ற மனிதன் உருவாகி 35 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம். சுமார் 3 கோடி 18 லட்சம்  ஆண்டுகளுக்கு பிறகு தான் மனிதன் பூமிக்கு வருகிறான். இப்போதும் இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. லட்சக்கணக்கான ஜீவராசிகளும் தாவரங்களும் பூமியில் வசிக்கின்றன. உலகில் பூச்சி இனங்கள் மட்டுமே 13.5 லட்சம் உள்ளன. இதில் 1000க்கும் மேற்பட்ட வெட்டுக் கிளி இனங்கள் உள்ளன. சுமார் 50 வகை வெட்டுக்கிளிகள் நன்மை பயப்பவையாக உள்ளன. அதில் 22 வகை வெட்டுக்கிளிகள் பேரழிவு சக்திப் படைத்தவையாக உள்ளன.

உலகின் மிக அபாயகரமான பூச்சி பாலை வன வெட்டுக்கிளி என ஐ.நா. வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறுகிறது. மென்மேலும் புவி வெப்பமயமாதல்தான் கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் பல்கி பெருக காரணம் என சுற்றுச்சூழல் அறிவியல் கூறுகிறது. 2018ல் அரேபிய பாலைவனத்தில் ஏற்பட்ட இரு பெரும் புயல்கள் வெட்டுக்கிளி களின் இன விருத்திக்கான காரணமாகும்.  2018 மே மற்றும் அக்டோபரில் பாலைவன மணலில் தண்ணீர் தேங்கும் அளவு மழை இருந்தது. காற்றின் இவ்வித ஈரப்பதம் வெட்டுக்கிளிகளின்  எண்ணிக்கையை பெருக்கியது. 2019ல் ஆப்பிரிக்காவிலும் கடும் வறட்சியும் பிறகு கன மழையும் என தட்ப வெப்பம் மாறியது. ஒரு சதுரகிலோமீட்டரில் வெட்டுக்கிளிகள் முட்டையிடுவது 1000 கூடுக ளாக இருந்தன. ஒரு முட்டைக் கூட்டில் 80 முதல் 100  முட்டைகள் வரை இருக்கும். 80 என கணக்கிட்டால் கூட 80,000 முட்டைகளும் வெட்டுக்கிளியாக மாறும். ஒரு வெட்டுக்கிளி வாழ்நாளில் 3 முறை முட்டையிடுகிறது. ஒரு தடவைக்கு 80 வீதம் மூன்று தடவைக்கு 240 முட்டைகள் என கணக்கிட்டால்  ஒரு கோடி 92 லட்சம்  வெட்டுக்கிளிகள் ஒரு ச.கி.மீட்டரில் உருவாகின்றன. இவை காற்று வீசும் திசையில் ஒரு நாளைக்கு 200 கி.மீ வரை பறக்கின்றன. ஒரு வளர்ந்த பாலைவன வெட்டுக்கிளிக்கு ஒரு நாளைக்கு சுமார் 2 கிராம் உணவு தேவைப்படுகிறது. இவை ஒரு நாளைக்கு சராசரியாக 35,000 மனி தர்கள் உணவை நாசம் செய்கின்றன. லோகஸ்ட் வகை எனப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் ஈரான், ஏமன், ஆப்கா னிஸ்தான், பாகிஸ்தான் வழியாக பயணித்து இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத்தில் நுழைகின்றன. காஷ்மீர், பஞ்சாப், தில்லி, பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம் ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்க ளில் வழக்கமாக இவை பேராசையோடு இரை தேடும்.

பச்சை நிறத்தில் தெரியும் எதுவும் இவற்றின் உணவே. பசும்தாவரம், தீவன செடி, வேளாண் பயிர்கள், புல்வெளிகளில் உள்ள புல், பூண்டு, மரம், செடி, கொடி, பூ, பிஞ்சு, இலை, தழை, காய்கறி, பழம், வாசனை பொருட்கள் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள், நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், பருத்தி,சோளம் என அனைத்து பயிர்களை யும் இவை நாசமாக்குகின்றன. சோமாலியாவில் இவ்வகை வெட்டுக்கிளி கள் பேரிடராக அறிவிக்கப்பட்டன. கென்யாவில் பெருமளவு வெட்டுக்கிளிகள் இப்போது இருப்பதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறுகிறது.

பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவு தேடும்போது அவற்றின் நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. செரடோ னியம் என்ற வேதிப்பொருளை அவற்றின் உடல் உற்பத்தி செய்கிறது. செரடோனியம் சுரந்த சில மணி நேரங்களில் தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் கூட்டு வாழ்வுக்கு தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு, பழக்கம், நடத்தை, வேகம் எல்லாமே மாறு கிறது. சரியான ஈரப்பதமும், ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளி லிருந்து வெளிவரும் வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பில், நிறத்தில் இன்னும் மூளை அமைப்பில் கூட மாறுகின்றன. இந்த வகை வெட்டுக்கிளிகள் வழக்கமான வடஇந்திய தடத்திலிருந்தும் இப்போது இலக்கு மாறும் ஆபத்து உள்ளது. 1878லேயே வெட்டுக்கிளி களின் தாக்குதல்கள் தமிழகத்தில் இருந்த தாக தரவுகள் உள்ளன. தோழர் சு. வெங்கடேச னின் புகழ் பெற்ற காவல் கோட்டம் நவீனத்தி லும் இவற்றுக்கான சான்றுகள் உள்ளன. 

தமிழகம் இதிலும் பாரம்பரிய நடவடிக்கை களுக்கு புகழ் பெற்றதாகும். வேப்ப எண்ணெய் அடிப்படையிலான பூச்சிக்கொல்லிகள் இந்த  வெட்டுக்கிளிகளை விரட்டும். இதைப் போலவே காய்ந்த மிளகாய் செடிகளை வைத்து தீ மூட்டி புகை மண்டலம் உருவாக்கி இவற்றை அழிக்க முடியும். இந்த வகை வெட்டுக்கிளிகளை முதலில் சீனாவும் தன் பாரம்பரியப்படியே எதிர்கொண்டது. 2018-ல் சீனத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஏற்பட்டது. ஜின்ஜியாங் மாகாணத்தில் இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராக சீனா உயிரியல் ஆயுதம் ஏந்தியது. அவை  சுமார் 7 லட்சம் வாத்துகளும் கோழிகளும் ஆகும். இவை வெட்டுக்கிளிகளின் மசாலாவை சாப்பிட்டன. தமிழகத்தில் பாரம்பரிய மிகு பறவைகள், விலங்குகள் இப்போது இல்லாமல் போயின.

வெட்டுக்கிளிகளை எதிர்ப்பதற்கு வேதியல் ரசாயன மருந்துகளை பயன்படுத்தும் போது நுகர்வோருக்கு அவை புது வகை பக்க விளைவுகளை உருவாக்குகின்றன. நீர் நிலைகள், மனிதர்கள், ஆடுமாடுகள் இல்லாத இடங்களில் வேண்டுமானால் குட்டி விமானங்கள் மூலம் பூச்சி மருந்தினை தெளிக்கலாம். டிரம் அடித்தும் மற்றும் வழக்கமான இயற்கை பூச்சி கட்டுப்பாட்டு முறைகளின் மூலமும் வெட்டுக்கிளிகளை விரட்டலாம். வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் தாக்குதல் நடத்தினால் அவற்றுக்கு எதிரான  போரில் பயன்படுத்த கூடிய தீயணைப்பு எந்திரங்கள், பெரிய டிராக்டர்களை முதலில் அரசு தயார் செய்ய வேண்டும்.

முதலாளித்துவ பேராசை பூமியை மயான மாக்கி எரிக்கின்றன. துவக்கத்தில் கூறிய கிரேட்டா தும்பர்க்கின் வார்த்தைகளில் கூறி னால் வீடு தீப்பற்றி எரிகிறது. இந்த நெருப்பு அனைவரையும் எரிக்கும். ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பவர்கள் மீதும் தீ பரவும்.

;