tamilnadu

img

ஊரடங்கு இப்போதும் அப்போதும் -- எஸ் வி வேணுகோபாலன் 

ஒரு நாள் ஊரடங்கு என்று அறிவித்தபோதே, எப்படி நாள் முழுக்க வீட்டில் இருப்பது என்று பேச்சு எழுந்தது. இப்போது 21 நாட்கள் அறிவிக்கப்பட்டு, அது மேலும் நீட்டிக்கப்படக் கூடும் என்ற உணர்வில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். 

எப்படி வெளியே போகாமல் இருப்பது... எப்படி பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டிருப்பது... பார்த்த படங்களையே, படித்த துணுக்குகளையே, பழகிய உணவையே, படிந்து போன தடங்களையே திரும்பத் திரும்ப எப்படி உள்ளிருந்து கடந்து உள்ளேயே கிடப்பது என்று பேசிக் கொண்டிருக்கிறது ஒரு பெருந்திரள். வீடு முழுக்க, வீதி முழுக்க, ஊர் முழுக்க, நாடு முழுக்கவும்.... ஏன் உலகம் முழுக்கவும் இதே நிலைதான்...

வசதி இருப்போர் இரண்டு மாதங்களுக்கு மளிகை வாங்கிப் போட்டாகிவிட்டது. அடுத்தடுத்த நிலையில் இருப்போர் அவரவர் தன்மைக்கு ஏற்ப அலைந்தும் திரிந்தும் அஞ்சியும் ஒளிந்தும் ஏதோ நிரப்பி வைத்துக் கொண்டு அன்றாடப் பாட்டைப் போக்கிக் கொண்டே இருக்கின்றனர்.  

இன்னொரு புறம், வாங்கவும் கையில் ஏதுமின்றி, ஒளியவும் சொந்தக் குச்சு வீடுமின்றி, கோடிக்கணக்கானோர் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர், இதே தேசத்தில் தான்.  இடம் பெயர்ந்து எங்கோ திரிந்து எங்கோ புகலிடம் கண்டு உழைத்துக் கொண்டிருந்தோர் திடீர் என்று மாறிய சூழலில் மைல் கணக்கில் நடக்கத் தொடங்கி உள்ளனர், எப்போது போய்க் கூடையும் இந்தப் பறவைகள், அடையுமா ?  

பசியும், பயமும், நிச்சயமின்மையும் ஒருசேர துரத்தும்போது நடப்பது எப்படி இருக்கிறது தெரியுமா என்ற கவிதையை அவர்களால் தான் எழுத முடியும். வரலாற்றில் எங்கேனும் இப்படி, ஏதேனும் ஒரு ஜனத்திரள் நடந்து கொண்டே இருக்க நேர்கிறது. ஒரு நோய்க் கிருமியின் நிமித்தம் என்பது கூட அவர்களுக்கு எட்டி இருக்காது. அவர்களுக்குச் சொல்லப்பட்டிருப்பது, இங்கே இருக்காதே, இங்கே படுக்காதே, இங்கே உலாத்திக் கொண்டிராதே. அவ்வளவுதான். நீண்ட கழியும் அதை விட நீண்ட அதிகாரமும் அவர்களை செலுத்துகிறது. செலுத்தப்பட்டே வாழும் கூட்டத்தை, துரத்தியே பழகிய  கண்களுக்கு அவர்கள் துயரம் ஒரு போதும் விளங்காது. அவர்கள் பாடு பற்றித் தெரிந்து கொள்ளும் தேவையும் இருக்காது.  

ஆனால், இந்த நேரத்தில் வேறொன்று தான் சில நாட்களாக மனத்தில் தெறித்துக் கொண்டே இருக்கிறது...

மக்கள் ஊரடங்கோ, சுய ஊரடங்கோ எதுவோ ஒன்று நம் எல்லோர்க்கும் சொல்லி நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் முன்பாக, இரண்டு நாட்கள் முன்பாக, சில மணி நேரங்கள் முன்பாகவாவது திரும்பத் திரும்ப ஊடகங்களில், வீதிகளில் சொல்லப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுகிறது. அடங்கு என்ற சொல்லையே கடுமையாக விமர்சிக்கிறார் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன். அதனால் தான், லத்தியை எடுத்துச் சுழற்றுகிறது காவல் துறை என்கிறார் (நல்லவேளை, ராஜேந்திரன் என்னும் நல்லவர் ஒருவர் அந்தத் துறையில் வித்தியாசமான குரலில், அன்போடு அறிவுறுத்துங்கள், சமநிலை இழக்காதீர்கள் என்று தங்கள் கீழ்நிலை அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்). மேலும், இது ஊரில் அடங்குவது இல்லையே, வீட்டில் அடங்கி இருப்பது தானே, ஊர் அமைதி என்று சொல்லுங்களேன் என்கிறார் எஸ் எஸ் ஆர். 

நாம் இந்த ஊரடங்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மனத்தில் வேறோர் ஊரடங்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 5, 2019 இரவு என்ன நடந்தது?  

அதற்கு இரண்டு நாட்கள் முன்போ, நான்கு மணி நேரம் முன்போ, இல்லை அரை மணி நேரத்திற்கு முன்பாவது ஏதாவது எச்சரிக்கை விடப்பட்டதா? ஏன் எதற்கு என்று காரணங்களை பிரதமர் தொலைக்காட்சி முன்பு விளக்கி உரை நிகழ்த்தினாரா? நிபுணர்கள் கருத்துகளை முன்னதாக கேட்டு அமல்படுத்தப்பட்டதா? உலக அளவில் கருத்து என்ன, உள்ளூர் அறிஞர்கள் புரிதல் என்ன என்று ஏதேனும் ஊடகங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டதா?
ஒரு நாள் முழுக்க அல்லது இன்னும் 21 நாட்கள் என்று எல்லை சொல்லப்பட்டு அமல்படுத்தப்பட்டதா? (எதற்கு அசாதாரணமாக ஒரு பிராந்தியத்தில் இத்தனை இராணுவக் குவிப்பு என்ற கேள்விக்காவது விடை சொல்லப்பட்டதா?)

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிரான ஊரடங்கு பற்றித் தான் இப்போது திரும்பப் பின்னோக்கிப் போய்ப் பார்க்கிறோம். அரசே முன்னின்று  அரங்கேற்றிய எப்படியான அத்துமீறல் அது?

வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவ்வளவு தானா... உன் அலைபேசி வேலை செய்யாது. நீ யாரோடும் பேச முடியாது. உன் குடும்ப ஆட்கள் வீடு  வந்து சேரவில்லை என்றால் தேடக் கூடாது. வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. தலைவர்களைச் சிறையில் அடைப்போம், கேள்வி கேட்கக் கூடாது. வீட்டுச் சிறையில் வைப்போம். உலகுக்குத் தெரியக்கூடாது.  மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், இருளில் உழன்றாலும் ஏனென்று கேட்கக் கூடாது. 

வையகம் முகமது பஷீர் எழுதிய  மதிகள் புதினத்தில் வருமே, சுவருக்கு அடுத்த பக்கம் யார் இருக்கிறார், எப்படி இருக்கிறார், என்ன உணர்கிறார் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாதபடிக்கு, சுவர்களைத் தட்டித் தட்டித் தான் அண்டை வீட்டுக் குடும்பத்தோடும் பேசாமல் பேசிக்கொண்டிருக்க  முடியும். 

இந்த 21 நாட்களுக்குள் என்னென்ன திரைப்படம் பார்க்கலாம், இணையத்தில் என்னென்ன விளையாடலாம், வலை தளங்களில் என்னென்ன புதிதாகக் கற்கலாம் என்று திண்டாடித் தவிக்கிறது கொரானா ஊரடங்கில் சிக்கிய சமூகம். 

மாதக் கணக்கில், அலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, இணையதள தொடர்புகள் மறுக்கப்பட்டு, ஊர் அடங்கு அல்ல, வீடு அடங்கு அல்ல, உள்ளங்களையே அடக்கி வைத்திருந்த அதிகாரம் அது. ஆயிரக்கணக்கில் சிவில் சமூகம் சிறையில். லட்சக் கணக்கில் அவர்தம் சுற்றம் வீட்டுச் சிறையில். 

வெறி பிடிக்க வைக்கும் தத்துவார்த்தக் கிருமி கொரானாவை விடக் கொடியது. கொரானா பரவலில் இருந்து தப்பிக்க சமூக விலகல் என்ற சொல்லாடல் பயன்படுத்தப் படுகிறது. இடைவெளி விட்டு வாழ்தல் என்பது தற்காத்துக் கொள்ளவும், அடுத்தவரையும் பாதுகாக்கவும் ! இது தற்காலிகமான தேவை. மதவெறியர்கள் முன்னெடுத்திருப்பது சமூக விலக்கல். தங்களுக்கு ஒவ்வாத சமூகத்தை ஒரேயடியாக நீக்குதல். இது எத்தனை பெரிய ஆபத்தானது! எத்தனை தலைமுறைகள் கடந்து இரத்தத்தில் ஊறிக் கொண்டிருப்பது. எப்படி எளிதில் பற்றிப் பரவக் கூடியது!

கொரானா குறித்த விழிப்புணர்வு ஆக முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த சிறிய சமரசமும் செய்ய முடியாதது. அது  மக்களுக்கு சிறுச்சிறிதாக விளங்கிக் கொண்டிருக்கிறது. 

மதவாத ஆபத்து குறித்த விழிப்புணர்வு மிக மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒருபோதும் இலகுவாக நினைத்துவிட முடியாதது. ஊரடங்கு, ஊரடங்கு என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொண்டே, ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் திரும்ப எடுத்து, வீடெங்கும் பரப்பிக் கொண்டிருப்பது, உள்ளங்களை வேறு வழியில் அடக்குவதற்கு. அதை அத்தனை இலேசாக நினைத்துவிடக் கூடாது. 

அறிவியலின்முன் உலகமே நின்று, சமூகத்தை எப்படி காப்பது என்று சிந்திக்கத் தலைப்படும் நேரத்தில், தப்பித் தவறிக்கூட மக்கள் கால காலமான நம்பிக்கைகளைக் கேள்விகளுக்கு உட்படுத்தி விடக் கூடாது, பகுத்தறிவின் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு இயங்கிக் கொண்டிருக்கும் வலதுசாரி தத்துவார்த்த சக்திகளை ஒரு போதும் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. 

மக்களிடம் சிந்தனைகளைத் தூண்டவும், அறிவியல் உணர்வுகளை எழுப்பவும், சமூக மாற்றம் குறித்த கேள்விகளை விதைக்கவும், உண்மை தேடலை நோக்கி ஆர்வம் கொள்ள வைக்கவுமான நேரம் இப்போது இல்லை என்றால் பின் எப்போது?

கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com
 

;