tamilnadu

img

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் ஒப்பந்தம்

என்.எல்.சி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த போதிலும் அவர்களை நிரந்தரம் செய்யும் நடைமுறை இல்லாதிருந்தது. 1989 ஆண்டு சி.ஐ டி.யு சங்கத்தின் தலைமையில் திரண்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்த கோரிக்கைகள் மீது நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டத்தின் போது தங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் இணைந்து கொண்டனர். நெய்வேலியில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்காக முதலில் தொடங்கப்பட்ட சங்கம் சிஐடியு தான். 1989 ஆம் ஆண்டு ஊதியமாற்று ஒப்பந்தத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நிரந்தரம் செய்வதற்கான ஷரத்து இணைக்கப்பட்டு 1990 ஆண்டில் இன்கோ சர்வ் சொசைட்டி உருவாக்கப்பட்டது. 5000 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு அடுத்து 4 ஆண்டு காலம் வரை நிரந்தரம் செய்யாமல் நிர்வாகம் இழத்தடித்து வந்த நிலையில், மீண்டும் சிஐடியு சங்கத்தின் தலைமையில் இன்கோ சொசைட்டி தொழிலாளர்கள் 1994ஆம் ஆண்டு மே 3ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சிஐடியு அறை கூவலை ஏற்று 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்களும் பணிக்கு செல்லவில்லை நிர்வாகம் பழி வாங்கும் நடவடிக்கையாக 48 சொசைட்டி தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

பழிவாங்கல்  சிஐடியு இன்கோசர்வ் சொசைட்டி சங்க தலைவராக இருந்த தோழர் சங்கிலி பாண்டியன் அவர்களை 3 மாத காலம் சஸ்பெண்ட் செய்து சிஐடியுவின் அன்றைய அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் எம்.கே .பாந்தே அவர்கள் நெய்வேலி வந்து அதிபர் மற்றும் நிர்வாகத்துறை இயக்குநரைச் சந்தித்து பேசியதற்குப் பின்னால் நிர்வாகத்தின் பழி வாங்கும் நடவடிக்கை கைவிடப்பட்டதோடு, 1995ஆம் ஆண்டு 5 ஆண்டுகளில் 5000 சொசைட்டி தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்யும் ஒப்பந்தம் உருவானது. ஒப்பந்தப்படி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய நிர்வாகம் காலதாமதம் செய்யும் நேரத்தில் போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி இறுதியாக 4000 பேர் நிரந்தரமாக்கப்பட்ட நிலையில் சீனியாரிட்டி குறித்த வழக்கு நீதிமன்றம் சென்றது. அதன்பின் 2002ல் சிஐடியு தலைமையிலும், 2006, 2008, 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் தொழிற்சங்க கூட்டமைப்பாக போராடிய காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும், சில சலுகைகளும் தொடர்ச்சியாக கிடைக்கப் பெற்ற போதும் நிரந்தரம் என்பது கனவாகவே இருந்து வந்தது. 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட்டு நிரந்தரம் செய்ய வலியுறுத்திய நிலையில் நிர்வாகம் 2015ஆம் ஆண்டு துவங்கி இந்த 5 ஆண்டுகளில் மிகச் சொற்பமாக 250 பேரை மட்டும் நிரந்தரம் செய்துள்ளது.

கடைநிலை ஊழியர்களின் காலி பணியிடம் அவ்வளவு தான் என்று காரணம் கூறி நிர்வாகம் ஏமாற்றி வந்தது. இந்த சூழ்நிலையில் தான் சிஐடியு தலைமையிலான ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பு 2017 ல் துவங்கி பலகட்ட போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வந்தது. 2018ல் ஒரு நாள் வேலை நிறுத்தத்தையும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நிரந்தர தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தம் டிசம்பர் 05, 2018 ஆம் ஆண்டு கையெழுத்தான போது ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அடுத்த சில மாதங்களுக்குள் பேசி முடிப்பது என்ற ஷரத்து சேர்க்கப்பட்டு ஒப்பந்தம் உருவானது. ஆனால், நிர்வாகம் கோரிக்கைகளைப் பேசுவதற்குப் பல மாதங்கள் காலதாமதம் செய்து வந்த நிலையில் சிஐடியு தலைமையிலான தொழிற்சங்க கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. இறுதியாக 2019, ஆகஸ்ட் மாதத்தில் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. தொழிற்சங்க கூட்டமைப்பிலிருந்த பல சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க தயங்கிய நேரத்தில் சிஐடியு உறுதியாக நின்று வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பது என்ற முடிவினை அடுத்து வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கும் பேரணியில் சிஐடியுடன் தா.வா.க எல்.எல்.எப் ஆகிய சங்கங்கள் மட்டுமே பங்கேற்றன.

இந்நிலையில்தான் அதிபர் அவர்கள் தலையீட்டு சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிற்சங்கங்கள், காண்ட்ராக்ட் முதலாளிகளின் நிர்வாக அதிகாரிகள் இணைத்து கமிட்டி (ஜெ.பி.சி ) அமைத்தது. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் ஊதிய உயர்வு, நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நிர்வாகம் தன்னிச்சையாக இது தான் ஊதியம், 300 பேர் தான் நிரந்தரம் என அனைத்து சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது. நிர்வாகத்தின் இந்த நிலைப்பாடு தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக மறுதினமே கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டு பிப்ரவரி 25 முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி - 19 அன்று பாண்டிச்சேரி தொழிலாளர் நல உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிப்ரவரி - 24 க்குள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

பின்னர், பிப்ரவரி 24, 25, 26 தேதிகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாலும், அதிபர் நேரடியாக தலையீடு செய்ததாலும் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக பிப்ரவரி - 26 அன்று கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டு மார்ச் 4-ந் தேதி இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. கொரானா வைரஸ் காரணமாக 12(3) ஒப்பந்தம் செய்வது மிகவும் காலதாமதமாக ஆகஸ்ட் கையெழுத்தானது. தற்போது நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்தில் புதிய சம்பளம் அதை தொடர்ந்து அரியர்ஸ் தொகையும் வழங்கப்பட உள்ளது. ஒப்பந்த காலம் முந்தைய ஒப்பந்த முடிவடைவதற்கு 10 மாதங்களுக்கு முன்பாக 01.01.2020 முதல் ஊதிய உயர்வும், பஞ்சப்படி அளிப்பது, வீட்டு வாடகைப்படி கேண்டீன் அலவன்ஸ் போக்குவரத்துப்படி சர்வீஜ் வெயிட்டேஜ் ஆகியவை 01.03.2020 முதல் அளிக்கப்பட உள்ளது.  ஆண்டுக்கு இரு முறை ஊதியத்துடன் பஞ்சப்படி இணைத்துக்கொள்ளப்படும் என்பது மிக முக்கியமான வெற்றியாகும் சர்வீஸ் வெயிட்டேஜ் தவிர மற்ற தொகைகள் நான் ஏஎம்சி, அவுட் சோர்ஸ் உள்ளிட்ட ஒப்பந்த பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது ஊதிய உயர்வு மற்றும் படிகள் மூலம் குறைந்த பட்சம் மாதம் ரூ.5000 முதல் அதிகபட்சம் மாதம் ரூ.7000 வரை உயர்வு கிடைக்கும்.

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.215 முதல் அதிகபட்சம் ரூ.280 கிடைக்கும். இந்த உயர்வுடன் மாதம் குறைந்தபட்சம் ரூ.23000ம் அதிக பட்சம் ரூ.26000ம்  கிடைக்கும்.  3000 காண்ட்ராக்ட் தொழிலாளர்களை சொசைட்டியில் இணைக்கவும், ஆண்டுக்கு இரண்டு செட் யூனிபார்ம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிரந்தரத்தை பொறுத்தவரையில் இந்த ஆண்டு (2020 - 21 750 பேர். அதற்கு அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் ஓய்வு பெறும் எண்ணிக்கையில் 60சதவீத இடங்களுக்கான எண்ணிக்கையில் நிரந்தரம் செய்வது என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துக்களை விளக்கி சிஜடியு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விளக்கமாக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. சிஐடியு பேச்சுவார்த்தையில் இருந்த போது 1995 ஆண்டு நிரந்தரம் செய்வது குறித்த ஒப்பந்தத்திற்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2016 ல் சிஐடியு முதன்மைச் சங்கமாக பேச்சு வார்த்தைக்கு வந்த பின்னர் தான் நிரந்தரம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இடைப்பட்ட 16 ஆண்டுகள் சிஐடியு பேச்சு வார்த்தையில் இல்லை. இதே காலகட்டத்தில் நிரந்தர தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தம் மிக சிறந்த முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 2015 ஆம் ஆண்டு ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் அலவன்ஸ் முடக்கப்பட்டு  தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டன. 39 நாள் வேலை நிறுத்தமும், அதை தொடர்ந்த பாதிப்புகளும் தொழிலாளர்களுக்கு மிக கசப்பான அனுபவமாக மாறிப்போனது. 2018 ல் உருவான நிரந்தர தொழிலாளர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் முந்தைய ஒப்பந்தத்தில் பறிக்கப்பட்ட அலவன்ஸ் முடக்கம் உள்ளிட்டவை திரும்ப பெறப்பட்டது. அரியர்ஸ் தொகை முழுமையாக பெறப்பட்டது. பறிக்கப்பட்ட விடுபட்ட சில கோரிக்கைகளை மீண்டும் பெற்று அத்தனையும் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் சில முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டியுள்ளது. அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.  1983 முதல் 1989 வரை ஆண்டு காலம் சிஐடியு பேச்சுவார்த்தையில் இல்லாத காலகட்டத்தில் வாரிசு வேலை, காண்ட்ராக்ட் நிரந்தரம், என்.எல்.சி அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் நிரந்தரம் ஆகிய வேலை வாய்ப்புகள் படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்தது.

1989 சிஐடியு பேராட்டத்தின் மூலம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் தான் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் நிரந்தரம் மற்றும் வாரிசு, என்.எல்.சி அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர் வேலை வாய்ப்பிற்கான ஷரத்து இணைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் 1990 முதல் 1998 வரை என்.எல்.சி அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் 2000 பேர் வரை நிரந்தரம் செய்யப்பட்டார்கள். அதன் பின் இதுவரை என்.எல்.சி அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஐடியு பேச்சுவார்த்தையில் இடம் பெற்ற பிறகு தான் அப்ரண்டீஸ் வேலை வாய்ப்புகான கதவு திறக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட வெற்றிகள் மிக எளிதாக கிடைக்கவில்லை. இதனை பெறுவதற்கு சிஐடியு பல தடைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. மெமோ, விசாரணை இன்கிரிமெண்ட் பறிப்பு, பதவி உயர்வு பறிப்பு, இடமாற்றம் என பல பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு சங்கத்தின் நிர்வாகிகள் உட்படுத்தப்பட்டனர்.

தனி ஒரு சங்கமாக இருந்திருந்தால் காலதாமதம் இல்லாமல் மேலும் பல கோரிக்கைகளை வென்றெடுத்திருக்க முடியும். எனவே, வரும் நாட்களில் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை, உரிமைகளை, சலுகைகளை பெறுவதற்கு, அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், இறந்தோர் வாரிசு, நிலம், வீடு கொடுத்தவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் ஆகியோருக்கு வேலை வாய்ப்பினை பெற்றிடவும் சமரசமின்றி சிஐடியு சங்கம் தொடர்ந்து முயற்சிக்கும். அப்பழுக்கற்ற முறையில் நேர்மையுடன் செயல்படும் சிஐடியு, தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நின்று போராடி கோரிக்கைகளை வெல்லும். 1954-ல் துவங்கப்பட்ட சிஐடியு சங்கம் தான் நெய்வேலியில் உதயமான முதல் தொழிற்சங்கம். அன்று முதல் இன்று வரை உள்ள 66 ஆண்டுகளில் பல தலைவர்கள் இச்சங்கத்தில் தலைமையேற்று வழி நடத்தி இருக்கிறார்கள். திரப்ட் சொசைட்டியில் தலைவராக இயக்குநராகவும், பி.எப். இயக்குநராகவும் பலர் பணியாற்றி இருக்கிறார்கள் அவர்கள் யாரும் தங்களின் சொந்த ஆதாயத்திற்காக செயல்பட்டதில்லை. தொழிலாளர்களுக்கு சேவை செய்வது ஒன்றே லட்சியம் என பணியாற்றினார்கள் என்பது செய்தி அல்ல, வரலாறு கூறும் உண்மை.

;