tamilnadu

img

உடைந்தது கையாலாகாத அரசுகளின் முதுகெலும்பே...

கடந்த செப்.14 ஆம் தேதி தன் தாயாருடன் சேர்ந்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தார் 19 வயதே ஆன அந்த இளம் பெண்.  வேறு ஒரு வேலைக்காக தாயார் நகர்ந்த சமயத்தில் அவ்வூரின் ஆதிக்க சக்தியைச் சேர்ந்த நால்வர், அப்பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதோடு உண்மையைக் கூறி விடுவாளோ என அவள் நாக்கை நறுக்கியுள்ளனர். மேலும் முதுகெலும்பை உடைத்தும் கழுத்தை முறித்தும் இனி இவளால் எதுவுமே செய்ய முடியாது என்று உறுதிப்படுத்தியபின் சாலையில் அவளை தூக்கிவீசிச் சென்றுள்ளனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல அரசியல் கட்சியினரும், பெண்கள் கூட்டமைப்பினரும் இதற்கெதிரான போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

நாட்டின் பெருமைகளையும், வீட்டின் பெருமைகளையும் பெண்களின் நடத்தையை வைத்தே நியாயம் தீர்க்கும் செயல் எப்போதும் காவிக் கும்பல்களால் சொல்லப்பட்டு வருவது தான். இந்நிலையில், இதுபோன்ற பல கொடூரமான சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது தான் அவர்கள் கடைபிடிக்கும் சாதியத்திற்கும், புனிதத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பது புலப்படும்.

குவியும் குற்றங்கள்
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2018-ஆம் ஆண்டு 27 ஆயிரத்து 248 ஆக இருந்த இணைய வழிக் குற்றங்கள் ஒரே ஆண்டில் 63.5 விழுக்காடு அதிகரித்து 44 ஆயிரத்து 546 ஆக அதிகரித்துள்ளன. இதனிடையே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் ஒருநாளைக்கு சராசரியாக 87 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளதோடு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. 
அதோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக தலித்துகளுக்கு எதிரான அதிக குற்றங்கள்நடைபெறும் மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2018-ஆம் ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது, 26 விழுக்காடு அதிகரித்து உள்ளன. இது ஒட்டுமொத்த நிலையாகும். அதிகரிக்கும் நிலையை விடுத்து ஆண்டுதோறும் ஒரே எண்ணிக்கையில் தரவுகள் இருந்தாலே அதுவே இப்போது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இச்சூழலில், மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இப்புள்ளி விவரங்கள் ஆண்டுதோறும் அதிகரித்தவாறே செல்வது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக தலித்துகளின் மீதான வன்கொடுமைகள் இக்காலங்களில் அதிகரித்து வருகிறது. 

தலித்துகளும், அடக்குமுறையும்…
2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறை, தலித் மக்கள் மீதான வன்முறைகள் குறித்து ஐநா-வின் மனித உரிமை ஆணையத்தில் ‘தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு’ என்ற அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. இதில் மனித உரிமை ஆணையம் நடத்தும் விவாத அரங்குகளில் பங்கேற்று முதன்முதலாக இந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாடு மற்றும் தலித் மக்கள் மீதான பிரச்சனையை அறிக்கையாக்கி சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இத்தகவல்களின்படி கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை 66 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இருமடங்கு அதிகரித்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்கள் என்றால்,2015 இல் ஒவ்வொரு நாளும் 6 தலித் பெண்கள் இதே குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவை வெறும்வழக்குகளாக பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்கள்தான். எவரின் கவனத்துக்கும் வராமலேயே மறைக்கப்பட்டவை இதைவிட பன்மடங்கு ஆகும். காவல்துறையின் ஒத்துழைப்பு இல்லாமை, சாதி ஆதிக்க சக்திகளின் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வழக்குகள் பதிவாகாமல் ஏராளமானவை மறைக்கப்பட்டு வருகின்றன.

கண்டுகொள்ளப்படாத உண்மைகள்
மிக மோசமான வன்கொடுமைகள் நிகழ்ந்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014 தான். இந்த ஆண்டு 47 ஆயிரத்து 64 வழக்குகள் பதிவாகின. இது இதற்கு முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் அதிகம். அதே ஆண்டில் 77 தலித்துகள் கொலை செய்யப்பட்டனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அல்லது பா.ஜ.க. கூட்டணி ஆளும் மாநிலங்களில்தான் தலித் மீதான வன்கொடுமைகள் அதிக எண்ணிக்கையில் நிகழ்வதாக குற்ற ஆவணப் பதிவகத்தின் புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. தலித்துகளுக்கு எதிராக தண்டனைக்குரிய குற்றங்கள் நடந்த மாநிலங்களில் ம.பி. முதலிடம் (43.4 சதவீதம்), இரண்டாவது இராஜஸ்தான் (42 சதவீதம்), மூன்றாவது கோவா (36.7 சதவீதம்), நான்காவது குஜராத் (32.5 சதவீதம்). 12 நிமிடங்களுக்கு ஒரு முறை தலித் மீதான வன்முறை நாட்டில் நடக்கிறது என்றும், கடந்த 4 ஆண்டுகளில் தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக நடந்த வன்முறை அளவானது முன் எப்போதும் நடந்தது இல்லைஎன்று முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகிறார்.

அக்கறை காட்டப்படாத கூட்டங்கள்
பாலியல் குற்றங்கள் குறித்தான பல விரிவான நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் குறிப்பிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் முதலமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு இருமுறை கூடி விவாதிக்க வேண்டும். ஆனால்கடந்த பத்தாண்டுகளாக வருடத்திற்கு ஒருமுறை கூடுவதில் கூட அக்கூட்டங்கள் கூடுவதில்லை என்பதில் இருந்தேமாநில அரசுகளின் மெத்தனப்போக்கை, அக்கறையின்மையை அறிந்து கொள்ள முடியும்.
இதேபோல், மாவட்ட அளவிலான விழிப்பு கண்காணிப்புக் குழுவின் கூட்டங்களை நடத்துவதில் மாவட்ட ஆட்சியர்கள் அக்கறை காட்டுவதில்லை. போக்ஸோ சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீராய்வு செய்யவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதையும் கூட சரியாகசெய்வதில்லை. இவை ஒருபுறம் இருக்கையில் பாலியல்வன்கொடுமை வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவே போராட வேண்டிய நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலித்துகள் மற்றும்பட்டியலினப் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் மீதே பழிபோடும் கீழ்நிலைப் போக்குகளும் குறைந்தபாடில்லை. 

மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஒருமுறைகூட பட்டியலினத்தவரின் மக்கள் தொகைக்கு ஏற்றாற் போல் நிதி ஒதுக்கப்படவில்லை. குறிப்பாக தலித் மக்களில் சரிபாதியாக இருக்கும்பெண்களுக்கு மிக மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான மொத்த ஒதுக்கீடான ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 963.32 கோடியில் வெறும் 0.53 சதம் மட்டுமே தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதென பாலின நிதி அறிக்கை (Gender Budget Statement) சொல்கிறது.
இந்த விவரங்களும் உண்மைகளும், செப்.14 ஆம்தேதி உடைந்தது அந்த இளம்பெண்ணின் முதுகெலும்பல்ல, இச்சம்பவங்கள் போன்று இதற்கு முன் எந்த சம்பவத்திலும் துரித நடவடிக்கை மேற்கொள்ளாத கையாளாகாத அரசுகளின் முதுகெலும்பே என்பதைத்தான் உணர்த்துகின்றன.

====ச.காவியா=-===

;