tamilnadu

img

இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஓர் அரசியல் ஆய்வு - எஸ்.இசட். ஜெயசிங்

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற இரண்டு பகுதியினரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இந்த இணக்கம் ஏற்பட்டுவிடாமல் இனவாதத்தை மட்டும் விதைத்து அறுவடை செய்திட தீவிரவாதிகள், அரசியல் கட்சிகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும்.

உலகின் முக்கிய நாடுகளால் குறிப்பாக இந்திய மக்களால் கூர்ந்து கவனிக்கப்படும் இலங்கை யின் 8ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 16ம் நாள் நடைபெற இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஜனவரி 9இல் முடிவடைவதால் அதற்கு முன்னதாக இத்தேர்தல் நடைபெற வேண்டியது அவசியமாகிறது. இலங்கையில் மக்கள் நேரடி வாக்குச் சீட்டு முறை மூலம் வாக்களித்து ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். இலங்கையில் நவம்பர் 16ல் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதுவரை பதவியில் இருந்த, இருக்கின்ற ஜனாதிபதிகள், பிரதமர்கள் என யாரும் போட்டியிடாது புது முகங்களாக போட்டியிடுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். 8ஆவது ஜனாதிபதி தேர்வுக்கான தேர்தல் போட்டியில் இம்முறை 35 பேர் களம் காண்கின்ற னர். எனினும் இதுவரை இலங்கையில் மாறி, மாறி ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே கடும் போட்டி நிலவுகிறது.

1989 முதல் 1993 வரை ஜனாதிபதியாக இருந்த காலம் சென்ற ரணசிங்க பிரேமதாசாவின் மகனும் தற்போதைய வீடமைப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலை வருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அக்கட்சி சார்பில் போட்டியிட, இவரை எதிர்த்து இலங்கை சுதந்திரக் கட்சியில் நீண்ட காலம் அங்கத்த வராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்த மகிந்த ராஜ பக்சே அக்கட்சியிலிருந்து பிரிந்து சிறிலங்கா பொது ஜன பெரமுன என்ற கட்சியை தொடங்கி தான் இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது என்ற சட்ட முடிவு காரணமாக தனது சகோதரரான கோத்தபய ராஜபக்சேவை வேட்பாள ராக நிறுத்தியுள்ளார். இவ்விரு பலமான வேட்பாளர்களுக்கி டையே வேறு சிலரும் குறிப்பிடத்தக்க போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர்களாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) வேட்பாளரான அதன் தலைவர் அநுராகுமார திஸநாயக்க, முன்னாள் ராணுவ அதிகாரி மகேஸ் சேனநாயக்க, இலங்கைத் தமிழரும் டெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னருமான சிவாஜிலிங்கம், கிழக்கிலங்கை முன்னாள் கவர்னர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இவர்களில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாச புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் பல சிறு கட்சிகளை இணைத்து களம் காண்கிறார். இம்முன்ன ணியில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உருமய, தமிழரசு கட்சி, மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக முற்போக்கு கூட்டணி என 12 கட்சிகள் ஆதரவு தெரி வித்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவின் இலங்கை மக்கள் சுதந்திர கூட்டணியில் இன்றைய ஜனாதி பதியான சிறிசேனாவின், இலங்கை சுதந்திரக் கட்சி, மகாஜன எக்சத் பெரமுன, ஜாதிக நிதஹஸ்பெரமுன, டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் சனநாயக கட்சி, இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ், ஜனநாயக இடது முன்னணி என 17 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இலங்கையில் இளம் தலைமுறையினர் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி வரும் அநுரா திஸநாயக்காவின் ஜேவிபி கட்சியானது தேசிய மக்கள் அதிகாரம் என்ற பெயரில் ஐக்கிய இடதுசாரி முன்னணியை இணைத்துக் கொண்டு போட்டியில் இறங்கியுள்ளது.

தீர்மானிக்கும் சக்தி

இவ்வாறு பலரும் போட்டியிட்ட போதும் இரு பெரும் கட்சிகளுக்கிடையே மட்டுமே கடும் போட்டி என கருதப்படு கிறது. 2015-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது 1,50,44,490 வாக்காளர்களில் 1,22,64,377 பேர் அதாவது 81.52 சதவீதம் பேர் வாக்களித்த நிலையில் இம்முறை 1,59,92,096 பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைப் போன்றே இம்முறையும் சிறுபான்மையினரின் வாக்குகள் ஜனாதிபதி வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலங்கையில் நடை பெற்ற தேர்தல்களில் 74 சதவீதமாக இருக்கின்ற சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகள் இரு பெரும் கட்சிக ளுக்கிடையே சம அளவில் பிரியும் போது மக்கள் தொகையில் 26 சதவீதமாக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தி ருப்பதை கடந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2015ஆம் ஆண்டு தேர்தலில் மைத்ரி பால சிறிசேன பெற்ற  வாக்குவிகிதம் 51.28 சதவீதம் ஆகும். தோல்வியுற்ற மகிந்த ராஜபக்சே பெற்ற வாக்கு சதவீதம் 47.58 சதவீதம் ஆகும். அதாவது 3.70 சதவீத வாக்குகளை மேலதிகமாக பெற்றதன் மூலம் சிறிசேன வெற்றி பெற முடிந்தது. 

இது எவ்வாறு நடந்தது என்பதை கூர்ந்து கவனிக்கும் போது சிறுபான்மை மக்களாகிய தமிழ் பேசும் இலங்கைத் தமிழர்கள் இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் சிறிசேனவை ஆதரித்துள்ளனர். குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வசிக்கும். யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக் களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சிறிசேன பெற்ற வாக்கு கள் 744751, ராஜபக்சே பெற்ற வாக்குகள் 202573. இதன் மூலம் சிறிசேன பெற்ற மேலதிக வாக்குகள் 542178 ஆகும். எனவே மொத்த வாக்களிப்பில் சிறுபான்மையினரின் வாக்குகளின் வாயிலாக 3.70 சதவீதம் மேலதிகம் பெற்று ஜனாதிபதியாக வெற்றியடைய முடிந்ததை தெளிவாக காணலாம். கடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலிலும் மலையக மக்கள் உட்பட பரந்துபட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றதன் மூலமே ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி இலங்கை சுதந்திரக் கட்சி கூட்டணியை விட 3சதவீதம் கூடுதலான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. எனவே வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இனவாதத்தை கக்குபவர்கள்

இவ்வாறானதொரு தேர்தல் முறை இலங்கையில் இருந்தபோதும் தேர்தலின் போது இனவாதத்தை கக்கு கின்ற ராஜபக்சே போன்றவர்கள் இப்பொழுதும் விடுதலைப் புலிகளை தோற்கடித்த பெருமையைக் கூறி, நாடு பிளவு படும் என பெரும்பான்மை சிங்கள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக தேர்தல் ஆதாயம் தேடுவதையும் காணலாம். போர் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலை யில் இனங்கள் இடையே இணக்கம் அமைதி அவசியம் என்ற உணர்வு ஏற்பட்டுவிடுவதை விரும்பாத இவர் வளர்ச்சி திட்டங்களை முன் நிறுத்தாது இனப்பாகுபாட்டை முன் நிறுத்துவது அதிகரித்து வருகிறது. இந்திய நாட்டில் ஆர்எஸ்எஸ், பாஜக அமைப்பினர் இந்துத்துவ கோஷத்தை முன்வைத்து மக்களை பிளவுபடுத்தி தேர்தல் ஆதாயம் தேடுவதைப் போன்று ராஜபக்சே போன்றவர்கள் இலங்கை யில் பௌத்த பேரினவாதத்தை தூண்டிவிடுவதன் வாயிலாக அதிகாரம் பெற முனைகின்றனர். 

உள்நாட்டுப் போரினால் சிறுபான்மையினர் மட்டுமல்ல பெரும்பான்மை மக்களும் பல்வேறு இன்னல்களை அனுப வித்துள்ளனர். லஞ்ச ஊழல், குடும்ப ஆதிக்கம், சொத்து குவிப்பு, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொருளா தார தேக்கம் என அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிர்க்கும் இலங்கை மக்கள் அமைதியானதொரு வாழ்க்கை முறையையே விரும்புகின்றனர். அதன் காரண மாகவே இரண்டு கட்சிகளும் வலதுசாரி சிந்தனைகளில் வேறுபாடு இல்லாத போதும், சற்று மென்மையான போக்கு டைய ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க இலங்கை மக்கள் கடந்த காலங்களில் முற்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கடைசியாக முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 22 மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்தை வழங்கி, 11 மாவட்டங்களில் அதிக அளவு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ள போக்கை அவதானிக்கலாம். 92 சதவீத கல்வி அறிவுடைய இலங்கை மக்கள் தேர்தலில் சரியான நிலைப்பாட்டை எடுப்பர் என எதிர்பார்க்கலாம்.

இலங்கையில் பெரும்பான்மை மக்களிடையே ஒரு சில தீவிரவாத சிங்கள பௌத்த இன குழுக்கள் இருந்தாலும் கூட, பெரும்பான்மை சிங்கள மக்கள் அனைவருமே தீவிர இனவெறி பிடித்தவர்களோ மதவாதிகளோ அல்ல. அதனா லேயே தீவிர இன, மத இயக்கங்கள் தேர்தல்களில் போட்டி யிட்டு 1 சதவீத வாக்குகளைக் கூட பெற முடிவதில்லை. வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும் இலங்கை தமிழர்களும் “தனி ஈழம்” என்ற எண்ணத்தை விட்டு தேசிய நீரோடையை நோக்கி நகர்ந்து வருவதை கடந்த கால தேர்தல் முடிவு களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்பாடுகளும் காட்டு கின்றன. இதனாலேயே ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற கொள்கையை முன் வைத்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டணி 16 இடங்க ளைப் பெற்று 3ஆவது தனிப் பெரும் கட்சியாக வர முடிந்தது. உள்நாட்டுப் போரினால் பல ஆயிரம் உறவுகளை இழந்தும், அதன் வடுக்கள் ஆறாத நிலையிலும், போரின் போது பாது காப்புத்துறை செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதி பதி வேட்பாளர் கோத்த பய ராஜபக்சேவை ஆதரிப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இஸ்லாமிய மக்கள் - மலையக தமிழ் மக்கள்

மக்கள் தொகையில் 9.3 சதவீதம் என்ற எண்ணிக்கை  கொண்ட இஸ்லாமிய மக்கள் பெருமளவில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கால தேவாலய குண்டு வெடிப்பு அதன்பின்னர் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் அம்மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், சிறுபான்மையினர் மீது அனுதாபம் கொண்டிருந்த ராஜபக்சே குடும்பத்தை ஆதரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கருதப்படுகிறது. 

மலையக தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5க்கு மேற்பட்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சி சின்னத்தில் போட்டியிட்டு, வென்றதுடன், ஐக்கிய தேசிய கட்சியானது சுதந்திரக் கட்சியை விட அதிக இடங்கள் பெறவும் இந்திய வம்சாவழி தமிழர்கள் காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் தேசிய நீரோடையில் கலந்து தேசிய கட்சிகளுடன் இணைந்து தமது தனித்துவத்தை இழக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டமை நல்லதொரு தொடக்கமாகும். மலையக முற்போக்கு கூட்டணி சார்ந்த பெரும்பாலான மலையக மக்கள் ஜக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் அதே வேளை தொண்டைமான் வழி வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபயராஜபக்சேவை ஆதரிக்க முன் வந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

வழக்கமான தேர்தல் போட்டியை விட இம்முறை இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு பெரும் கட்சிகளும் பல சிறிய கட்சிகளையும், குழுக்களையும் இணைத்துக் கொண்டு கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், ஜக்கிய தேசிய கட்சி ஆதரவுடன் ஜனாதிபதியான சிறிசேன தனது பதவிக்காலம் முடிய இருக்கும் தரு ணத்தில், தனது இலங்கை சுதந்திரக் கட்சியில் சில வரு டங்கள் முன்புவரை இருந்து தற்பொழுது பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கியுள்ள ராஜபக்சேவையும் அவரது சகோ தரர் கோத்தபய ராஜபக்சேவையும் ஆதரிக்க முற்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கதாகும். மறுபுறம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தோற்றுவித்த பண்டார நாயக்காவின் புதல்வியும் இரண்டுமுறை ஜனாதிபதியாக இருந்தவருமான சந்திரிகா பண்டார நாயக்கே ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க உடன்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

மேலும் இம்முறை போட்டியிடும் மற்றைய 32 வேட்பாளர்க ளில் சிலர் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை பெறவும், பிரிக்கவும் வாய்ப்பு உண்டு என கருதப்படுகிறது. குறிப்பாக ஜேவிபி வேட்பாளர் அநுராகுமார திஸநாயக்க இம்முறை மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார். இதே போன்று வட கிழக்கில் தமிழர் வாக்குகளை குறிவைத்து டெலோ தலைவர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாகவும் களம் காண்கிறார். கடந்த முறையும் போட்டியிட்ட இவர் 9662 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதே போன்று இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஒரளவு செல் வாக்குள்ள முன்னாள் கிழக்கிலங்கை கவர்னர் ஹிஸ் புல்லாவும் களத்தில் உள்ள முக்கியமானவராவார். 

இவ்வாறு சிலர் சிறுபான்மை வாக்குகளை பிரிக்கும் எண்ணத்துடன் போட்டியிட்டாலும், மக்கள் கடந்த கால உள்நாட்டுப் போர் படிப்பினைகளையும், அதற்கு காரணமான வற்றையும் கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என நம்பப்படுகிறது. அதே போன்று 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பைச் செய்து அதன் மூலம் ராஜபக்ச வெற்றி பெற காரணமான வரலாற்றுத் தவறை மீண்டும் ஒருமுறை செய்திடமாட்டார்கள் என்பதை யும் எதிர்பார்க்கலாம்.

விருப்ப வாக்கின் முக்கியத்துவம்

இலங்கை ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 3 வாக்குகள் உண்டு. அதாவது விருப்ப வாக்கு முறையாகும். அதன்படி ஒருவர்  1, 2, 3 என தனது விருப்பத்தை வேட்பாளருக்கு தெரிவிக்க லாம் அல்லது 1 வாக்கினை மட்டும் அளிக்கலாம். 1982 முதல் 2015 வரை இடம் பெற்ற 7 ஜனாதிபதி தேர்தல்களின் போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது 50 சதவீதத்துக்கு மேலாக ஒருவர் பெற்றிருந்ததால் வெற்றியை நிர்ணயிப்பதில் எவ்விதச் சிக்கலும் ஏற்பட்டதில்லை. இதனால் 2, 3 ஆவது விருப்ப வாக்குகளை எண்ணக் கூடிய அவசியமும் ஏற்படவில்லை. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பும் நடைபெறவில்லை. ஆனால் வரும் தேர்தலில் பலமான சில வேட்பாளர்கள் 3ஆம் நிலை வரிசையில் இருப்பதால் பிரதான வேட்பாளர்களால் 50 சதவீதத்துக்கு மேல் பெற முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அதனால் 2ஆம் விருப்ப வாக்கின் அவசியம் உணரப்படும் என்றும் கருத்து முன் வைக்கப்படுகிறது.

மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையில் பெரும்பான்மை சிறு பான்மை என்ற இரண்டு பகுதியினரும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உணரப்பட வேண்டும். இந்த இணக்கம் ஏற்பட்டுவிடாமல் இனவாதத்தை மட்டும் விதைத்து அறுவடை செய்திட தீவிரவாதிகள், அரசியல் கட்சிகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும். அண்மையில் இந்திய வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள வேட்பாளர் சிவாஜிலிங்கம் இலங்கை துண்டாடப்படும் என கூறி யுள்ளார். இது போன்ற கருத்துக்கள் பெரும்பான்மை மக்களி டம் வீணான பதற்றத்தையும் வெறுப்புணர்வையும், உரு வாக்கலாம். எனவே இருபகுதி மக்களும், தலைவர்களும் நாட்டின் நலன் கருதி கவனமாகவும், பொறுமையாகவும், செயல்பட வேண்டும். நிறைவான கல்வி அறிவும் முதிர்ச்சி யான அரசியல் அனுபவமும் உடைய இலங்கை மக்கள் யார் வர வேண்டும், யார் வரக் கூடாது என்பதை அவர்கள் வழியில் சிந்தித்து சிறப்பான ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பார்கள் என நம்பலாம்.

கட்டுரையாளர் :  முன்னாள் இலங்கை பேராதனை பல்கலைக்கழக அரசியல்துறை உதவி விரிவுரையாளர் 
தொடர்புக்கு: jeyasinghsz@hotmail.com




 

;