tamilnadu

img

எதிரொலி இவர்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை! - மதுக்கூர் இராமலிங்கம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கே.தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாயன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இடமாறுதல் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு தஹில் ரமணி கொலிஜியத்திற்கு முறையீடு செய்தார். அது ஏற்கப்படாத நிலையில், பதவி விலகிய அவர், தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது. திங்களன்று அவர், நீதிமன்றப் பணியை மேற்கொள்ளவில்லை. 

பழிவாங்கப்பட்ட நீதிபதி தஹில் ரமணிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், தி இந்து ஆங்கில ஏட்டிற்கு (9.9.2019) சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு அளித்துள்ள நேர்காணலில் வெளியிட்டுள்ள கருத்துகள் வியப்பளிப்பதாக உள்ளது. பல்வேறு வழக்குகளில் முற்போக்கான தீர்ப்புகளை வழங்கியவர் அவர். ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு கூட்டங்களில் சமூக நீதியின் குரலாக அவர் ஒலித்து வருகிறார். எனினும், இந்த விசயத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் ஏற்கத்தக்கதாக இல்லை. நீதிபதி தஹில் ரமணியை இடமாறுதல் செய்துள்ளதை கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என்றும், உயர்நீதிமன்றங்களில் பெரியது, சிறியது என்று எதுவும் இல்லை என்றும் 2017-ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான பில்கிஸ் பானு வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பையும் இந்த இடமாறுதலையும் இணைத்துப் பேசுவது மலிவான ஒன்று என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாறுதலுக்கு தேசிய அளவில் ஆணையம் அமைக்க வேண்டும், நீதிபதிகள் இடமாறுதல் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, கொலிஜியம் முறை இருக்கும் நிலையில் அதன் முடிவுகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். கொலிஜியம் முறை முற்றிலும் தோல்வியடைந்த ஒன்றாகும் என்பது அதன் பல்வேறு முடிவுகள் மூலம் தெளிவாகியுள்ளது. 

75க்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவரை,  32 மாவட்டங்களின் நீதிமன்றங்களை நிர்வகித்துக் கொண்டிருப்பவரை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்த்து கவனிக்கும் ஒரு நீதிபதியை மூன்று நீதிபதிகளும் 7 மாவட்ட நீதிமன்றங்கள் மட்டுமே கொண்ட மேகாலயாவிற்கு இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?  உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் பாரபட்சமான அணுகுமுறை குறித்தும் வழக்குகளை ஒதுக்குவதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெளி உலகிடம் குமுறிய நிலையில், கொலிஜியம் எப்படி புனிதப் பசுவாக இருக்க முடியும்? குறிப்பாக, மோடி அரசு அனைத்துத் துறைகளையும் போலவே, நீதித்துறையையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது.  தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குபவர்களுக்கு அடுத்தடுத்து பதவிகளை வாரி வழங்குவதும் நேர்மையோடு தீர்ப்பளிக்கும் நீதிபதிகளை பழி வாங்குவதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது? 

அமித்ஷாவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி லோயாவின் மரணம் குறித்த மர்மத் திரைகள் இன்னமும் கூட விலகவில்லையே? ஆதரவாக தீர்ப்பளித்தவர்களுக்கு அதிகபட்சமாக ஆளுநர் பதவி உட்பட வழங்கப்பட்டது நாடறிந்த ஒன்றுதானே!  தஹில் ரமணி ஒரு நேர்மையான நீதிபதி  என்பதால்தான், தன்னுடைய கடமையை சரிவர செய்தார் என்பதால்தான் மேகாலயாவிற்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். எங்களை அனுசரித்து செல்லவில்லை என்றால் இதுதான் கதி என்று ஏனைய நேர்மையான நீதிபதிகளுக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் இது. இந்த இடமாறுதல் இயல்பான ஒன்றுதான் என்று கூறுவது இயல்பாக இல்லை.

நீர் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்? என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி தமிழ் இந்து நாளிதழில் கட்டுரை ஒன்றை தீட்டியுள்ளார். அவர் பதவியில் இருந்த காலத்தில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர்தான். இந்தக் கட்டுரையிலும் கூட நீர் நெருக்கடியை சமாளிக்க ஆக்கப்பூர்வமான பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.  ஆனால், கடைசியில் அவர் கட்டுரையை முடிக்கும்போது, இலவசமாக அல்லது அதிக மானியத்துடன் கூடிய நீர் விநியோகம் என்பது தொடர்ந்து சாத்தியமல்ல என்பதையே உலக அனுபவங்கள் காட்டுகின்றன. மேலும் குடிநீர் வழங்கலைப் போன்றே குடிநீர் தேவையையும் முறையாக நிர்வகிப்பது அவசியம்.எனவே, தண்ணீர் கட்டண மீட்டர் பொருத்தப்பட்டு குடிநீருக்கு விலை நிர்ணயித்து கட்டணம் வசூலிப்பது அவசியம் என்கிறார். இதன்மூலம் தான் நீர் கசிவு, நீர் திருட்டை தடுக்க முடியும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். 

நீர் என்பது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளல்ல. அது இயற்கையின் கொடை. நீரை தருகிற இயற்கை மனிதர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. மேலும் நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப மனிதர்களுக்கு மட்டுமின்றி பூமிக் கிரகத்தில் வசிக்கும் தாவரங்கள், விலங்குகள், மீன்கள், பூச்சிகள் உட்பட கோடான கோடி உயிர்களுக்கும் நீர் தேவை. அப்படிப்பட்ட நீரை விற்பனை பண்டமாக மாற்றுவதன் மூலம் அந்த உயிர்கள் எப்படி வாழ முடியும்?  ஏற்கனவே மோடி அரசு நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு தேசிய தண்ணீர் கொள்கையை உருவாக்கியுள்ளது. அப்படியென்றால், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.ஒரு அரசின் கடமை அனைத்து குடிமக்களுக்கும் குறைந்தபட்சம் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவது. பல்வேறு பொருட்களைப் போல காசு இருப்பவர்களுக்கு மட்டுமே இனி தண்ணீரும் தர வேண்டும் என்று மெத்த படித்த மேதாவிகள் ஆலோசனை கூறினால், கோடானு கோடி ஏழை-எளிய மக்கள் எங்கே போவார்கள்? தாகத்தில் சிக்கி அவர்கள் உயிரிழக்க வேண்டியதுதானா?

ஏற்கனவே கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் தண்ணீர் வியாபாரத்தின் மூலம் தடையற்ற கொள்ளையடித்து வருகிறது. கோவையில் தண்ணீர் விநியோகிக்கும் பொறுப்பை பன்னாட்டு நிறுவனமான சூயஸ் பெற்றிருக்கிறது. திருப்பூரில் ஏற்கனவே தண்ணீர் விநியோகம் தனியார்மயமாகி விட்டது. மதுரை, திண்டுக்கல் உட்பட பல இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் வந்துவிட்டன. பல இடங்களில் குடிநீர் ஒரு குடம் ரூ.15 வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில்,  இலவச தண்ணீர் கூடவே கூடாது என்பது மக்களின் உயிர்வாழும் உரிமையை கேள்விக்குள்ளாக்குவது ஆகும். ஒரு காலத்தில் உலக வங்கி சொன்னதைத்தான் இன்றைக்கு உள்ளூர் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் கோரப் பசிக்கு மக்களை அள்ளித் தருபவர்கள் அறிவாளிகளாக இருக்க முடியாது.

;