tamilnadu

img

குஜராத்தில் 33 இஸ்லாமியர்களை படுகொலை செய்த 14 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம்

கடந்த 2002-ஆம் ஆண்டில், குஜராத் கலவரத்தில் 33 இஸ்லாமியர்களை படுகொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 குற்றவாளிகளுக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. 

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, குஜராத் முழுவதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில், சர்தார்புரா கிராமத்தில் ஒரே வீட்டில் இருந்த 22 பெண்கள் உட்பட 33 இஸ்லாமியர்கள் எரித்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 76 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் விசாரணையின் போது உயிரிழந்த நிலையில், ஒருவர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 73 பேர் மீது 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கீழ்நீதிமன்றம் 42 பேரை விடுதலை செய்து, 31 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இதில் கோட்னானிக்கு 28 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாபு பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 8 பேருக்கு 31 ஆண்டுகளும், 22 பேருக்கு 24 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் கீழ்நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 31 பேரில், 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இதைத் தொடர்ந்து, ஆயுள் தண்டனை குற்றவாளிகளான 14 பேர், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 14 குற்றவாளிகள், குஜராத் மாநிலத்திற்குள் நுழைய கூடாது என்றும், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்று ஜபல்பூரில் தங்கியிருக்க வேண்டும் என்றும்,  ஜாமீன் காலத்தில் ஆன்மீக, சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
 
 

;