tamilnadu

img

உலக நாடுகளும், சீனாவும்

வுஹானில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்தியாவில் கேரள மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கே. கே. சைலஜா கூர்ந்து கவனித்தார்.  இந்தியாவில் 3.5 கோடி மக்களைக் கொண்ட மாநிலமாகிய கேரளத்தில் உடனடி நடவடிக்கைகளைத் துவக்கினார். அவர் எதற்காகவும் காத்திருக்கவில்லை. சீனா மேற்கொண்டு வருகிற நடவடிக்கைகள் சைலஜாவிற்கும், அவரது குழுவினருக்கும் எத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் எனக் கற்பித்தன. இந்தியாவின் இப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்குதலை இவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. 

பிரச்சனையின் தீவிரத்தன்மை குறித்து அமெரிக்காவிற்கு துவக்கத்திலேயே தெரிவிக்கப்பட்டது.  புத்தாண்டு தினத்தன்று, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவர் டாக்டர் ராபர்ட் ரெட்பீல்ட் விடுமுறையில் இருந்தபோது சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிகள் அவரை அழைத்தனர்.  “அவர் கேட்ட செய்தி குலைநடுங்கச் செய்வதாக இருந்தது” என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் எழுதியது. அதன் பின் சில நாட்கள் கழித்து சீனாவின் நோய் தடுப்பு மையத்தின் தலைவர் டாக்டர் ஜார்ஜ் எப் கேவோ, ரெட்பீல்ட்டுடன் பேசினார். அவர்களிடையேயான உரையாடலின்போது டாக்டர் கேவோ “கண்ணீர் விட்டு கதறினார்”. இந்த எச்சரிக்கை அமெரிக்காவால் அக்கறையோடு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஒரு மாத காலத்திற்குப் பின்னர், ஜனவரி 30ம் தேதியன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிகுந்த ஆணவத்துடனான நிலைபாட்டை எடுத்தார். “கொரோனா வைரஸ் நமக்கு நல்லதொரு முடிவையே அளிக்கும் என நான் நினைக்கிறேன்” என இவ்வைரஸ் பற்றி அவர் குறிப்பிட்டார். “அந்த உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்” என்றார். மார்ச் 13ம் தேதி வரை தேசிய அவசர நிலையை அவர் பிரகடனம் செய்யவில்லை. அதற்குள் அந்த வைரஸ் அமெரிக்க நாடு முழுவதும் பரவத் துவங்கிவிட்டது. 

உலகின் இதர பல பகுதிகளில் இருப்பவர்களும் அலட்சியமாகவே இருந்தனர். “ஆசிய காலரா” நோய் நம்மைத் தாக்காது என 1832ல் எண்ணிய பிரான்ஸ் நாட்டின் அரசியல்வாதிகளைப் போன்றே அவர்களும் எண்ணினர். 1832ல் ஆசிய காலரா என எதுவும் இருக்கவில்லை. ஆனால், மோசமான சுகாதார நிலைமையில் உள்ள மக்களையே காலரா நோய் பாதிக்கிறது. அதே போன்று, சீன வைரஸ் என்று எதுவும் இல்லை. சார்ஸ்-கோவ்-2 என்ற வைரஸ் மட்டுமே உள்ளது. அவர்களது தரப்பில் சில தவறுகளுக்குப் பின்னர், இந்த வைரஸ் தொற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் சீன மக்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து படிப்பினையை நாம் பெற்றுக் கொள்வதற்கான தருணமிது.  உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டபடி, “பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை”, அதன் பிறகு கதவடைப்புகள், தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த் தொற்றை தடுக்க மக்களை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை கவனத்தோடு செயல்படுத்த வேண்டும்.  இந்த வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதில் நிபுணத்துவத்தை வளர்த்தெடுத்த சீன மருத்துவர்கள் இன்றைக்கு ஈரான், இத்தாலி மற்றும் இதர பல நாடுகளுக்குச் சென்று சர்வதேச உணர்வையும், ஒருங்கிணைப்பையும் அவர்களோடு கொண்டு வந்துள்ளனர். 

உலக சுகாதார அமைப்பின் குழுவை சீனாவிற்கு தலைமை தாங்கிச் சென்ற மருத்துவர் ப்ரூஸ் ஐல்வார்ட்டை மார்ச் 4ம் தேதியன்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பேட்டி எடுத்தது.  அப்போது வைரஸ் தொற்றை சீனா எவ்வாறு கையாண்டது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “போர்க்காலத்தில் இருப்பதைப் போன்று அவர்கள் ஒன்று திரண்டிருந்தார்கள். வைரஸ் குறித்த அச்சம் அவர்களை வழி நடத்தியது. சீனாவின் இதர பகுதிகளில், உலகின் மக்களை பாதுகாப்பதில் முன்னணியில் நிற்கும் படைவீரர்களாகவே அவர்கள் தங்களைக் கருதினர்.”

;