மதுரை:
உலகெங்கும் செப். 8-ஆம் தேதி உலக எழுத்தறிவுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை யுனெஸ்கோ நிறுவனம் 1965 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. 1966-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
ஒரு மொழியில் புரிதலுடன் சரியாகப் பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை. எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தைத் திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை தடுக்க முடியும்.
எந்த மொழியிலும் எளிமையானவற்றை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுத்துள்ளது.உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறுவர்கள் படிப்பதற்கு வசதியற்ற நிலையில் உள்ளனர். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியை பெறவும், எழுதவும், வாசிக்கவும், எண்ணத் தெரியாதவர்களாகவும் இருகிறார்கள் என பத்தாண்டுகளுக்கு முந்தைய தகவல் தெரிவிக்கிறது.
உலகம் முழுவதும் 6,500 மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவில் 19,500 க்கும் மேற்பட்ட மொழிகள் அல்லது கிளைமொழிகள் தாய்மொழிகளாக பேசப்படுகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தபோது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 121 மொழிகளை பேசினர்.உலகளவில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெண்கள். 2030-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் எழுத்தறிவு கிடைக்க வேண்டும் என ‘யுனெஸ்கோ’ அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்த நிலையில் உலக எழுத்தறிவு தினம் செவ்வாயன்று சிவகங்கையில் கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்ட அறிவொளி குடும்பத்தினர் சார்பாக முகநூல் வழியாக உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியரும், ஓய்வுபெற்ற முதன்மை தலைமைச் செயலாளர் குத்சியாகாந்தி, சிவகங்கை மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரும் ஓய்வுபெற்றதமிழக காவல்துறை டிஜிபியுமான ராதாகிருஷ்ணன், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்புப் பொதுச்செயலாளர் பொ.ராஜமாணிக்கம், சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை முன்னாள் திட்ட இயக்குனரும் ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனருமான பரமேஸ்வரன், சென்னை லயோலா கல்லூரி மாற்று ஊடகமைய இயக்குநர் காளீஸ்வரன், பொருளாதர ஆய்வறிஞர் ஆத்ரேயா, தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.