1938 - வானொலி வரலாற்றின் மிகப் புகழ்பெற்ற தும், மிக மோசமானதுமாகக் குறிப்பிடப்படும், ‘வார் ஆஃப் த வேர்ல்ட்ஸ் (உலகங்களின் போர்)’ நாடக ஒலிபரப்பு நிகழ்ந்தது. புவியில் செவ்வாய்க்காரர்கள் (மனிதர்கள் என்று எப்படிச் சொல்வது?!) இறங்கி தாக்குதல் நடத்துவதான இந்த அறிவியல் புதினத்தை, எச்.ஜி.வெல்ஸ் எழுதி, 1898இல் வெளியிட்டார். வானொலியின் வருகைக்குப்பின், அதில் நாடகங்களை ஒலிபரப்புதல் என்பது 1920களில் தொடங்கி பரவத்தொடங்கியது. (ஆனாலும், கி.மு.முதல் நூற்றாண்டின் ரோமானிய நாடக ஆசிரியரான செனகா-வின் நாடகங்கள் மேடையில் நடிக்கப்படாமல், குரலில் மட்டும் நடிக்கப்பட்டதால், வானொலி நாடகத்தின் முன்னோடியாக இவரே குறிப்பிடப்படுகிறார்.) அமெரிக்காவின் சிபிஎஸ் வானொலி யில் ஒலிபரப்புவதற்காக இதனை வானொலி நாடக மாக எழுதிய ஹோவர்ட் கோச், 1938இன் சூழல்களுடன், அமெரிக்காவில் நடப்பதுபோல உருவாக்கியிருந்தார்.
(அமெரிக்க வரைபடத்தில் அவர் கண்ணை மூடிக்கொண்டு தொட்டு, கதை நடைபெறும் இடமாக நியூஜெர்சியைத் தேர்ந்தெடுத்தார்!) நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும், நிகழ்ச்சிக்கு இடையில் 40, 55ஆவது நிமிடங்களிலும், அது ஒரு கற்பனை நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும், அன்றைக்கு வானொலிமீது மக்களுக்கிருந்த நம்பிக்கை யால், உண்மையிலேயே புவி தாக்கப்படுவதாக மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர் கிடைக்கவில்லை. இடையிடையே விளம்பரங்களும் வரவில்லை என்பதால், உண்மையிலேயே நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்பப்படுவதாக மக்கள் நம்ப, வானொலி நிலையத்துக்கு ஆயிரக்கணக்கான தொலை பேசி அழைப்புகள் வந்தன. முதல் இடைவேளையின் போதே, ஏராளமான காவல்துறையினர் வானொலி நிலையத்தில் குவிய, அவர்களுக்கு நாடகம் என்று விளக்கவேண்டியிருந்தது.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியிருந்து ஏற்கெனவே போர்ச்செய்திகளாக ஒலிபரப்பிக்கொண்டிருந்ததும் பதற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. பயத்தினால் உடல்நிலை பாதிக்கப் பட்டதாக ஒருவர் 50,000 டாலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க மக்களில் வெறும் 2 சதவீதம் மட்டுமே இந்நிகழ்ச்சியைக் கேட்டதாகப் பின்னர் வெளி யான ஆய்வு, மக்களிடம் வானொலி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மீண்டும் 1949இல் ஈக்வடாரில், (உள்ளூர்ப் பெயர்களுடன்) இந்நாட கம் ஒலிபரப்பப்பட்டபோது, ஊடுருவல் நிகழ்ந்ததாக நாடகம் குறிப்பிட்ட இடத்திற்கு அந்நாட்டு அரசு ராணுவத்தை அனுப்பிவிட்டது. உலகம் அழியப் போகிறது என்று மதகுருக்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கத் தொடங்கி விட்டார்கள். பின்னர் நாடகம் என்று தெரிந்தவுடன், வானொலி நிலையம் தாக்கப்பட்டது. 1968இல் இந்நாடகம் அமெரிக்காவின் எல்லைப்புற நகரமான பஃபலோ நகரில் ஒலிபரப்பப்பட்டபோது, எல்லைப் பகுதிக்குப்படைகளையே அனுப்பிவிட்டது கனடா!
- அறிவுக்கடல்