tamilnadu

img

அதிமுக அரசு இனியும் நீடிக்கக்கூடாது

விழுப்புரம், ஆக. 6- மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோத சட்டத்திருத்த மசோதாக்களை நிறைவேற்றியும், காஷ்மீரை சிதைத்து கூட்டாட்சிக்கு வேட்டு வைத்து, மாநில சுயாட்சி உரிமைகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியும், அராஜகம் செய்துள்ள மோடி அரசிடம் முற்றாக சரணாகதி அடைந்துள்ள தமிழக அதிமுக அரசு இனியும் ஆட்சியில் நீடிக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடுமையாக சாடினார். தொழிலாளர் உரிமைகளை முற்றாக நசுக்கும் ஊதிய விதிகள் மசோதா 2019; எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தி  எந்தக் கேள்வியும் இன்றி சிறையில் தள்ளி கொடுமை செய்யும் கொடூர ஆள் தூக்கிச் சட்டமான யுஏபிஏ திருத்த சட்ட மசோதா 2019,  தேசிய புலனாய்வு முகமை விதிகள் திருத்த  சட்ட மசோதா 2019 உள்பட முற்றிலும் மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றியுள்ள மத்திய அரசு, மக்களவை கூட்டத்தொடரின் கடைசி இரண்டு நாட்களில்  காஷ்மீரின் மொத்த  உரிமைகளையும் பறித்து அம்மாநிலத்தையே சிதைத்துள்ள அட்டூழியத்தை அரங்கேற்றி யுள்ளது. இதைக் கண்டித்து ஆகஸ்ட் 7 (இன்று) நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) லிபரேசன், பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டாக போராட்டம் நடத்துகின்றன. 

தமிழகத்தில்

இந்நிலையில் ஆகஸ்ட் 6 செவ்வாயன்று தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விழுப்புரத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்தும், காஷ்மீரின் உரிமைப் பறிக்கும் விதமாக 370வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரித்தும் செயல்பட்ட அதிமுக, இனியும் மாநில உரிமை கோரும் கட்சி என்ற தகுதியை இழந்துவிட்டது; பாஜகவின்  மறுபதிப்பாக தமிழகத்தில் அதிமுக மாறிவிட்டது; பாஜகவிடம் முற்றாக சரணாகதி  அடைந்துவிட்டது; எனவே இனியும் தமிழகத்தில்  அதிமுக அரசு நீடிக்கக்கூடாது என கடுமையாக சாடினார். காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை ஜெயலலிதாவின் விருப்பப்படி ஆதரித்தாக அதிமுக சொல்கிறது; இதே ஜெயலலிதா, மெரினாவில் நடந்த கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது தவறு; இனி பாஜகவை வீழ்த்துவதே எனது லட்சியம் என்று முழங்கி னாரே, அந்த ஜெயலலிதாவின் முழக்கத்தை அதிமுக கைவிட்டது ஏன் என்றும் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். காஷ்மீர் மீதான  தாக்குதல் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால்; இது காஷ்மீரோடு நிற்காது; அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் பறிப்பதற்கு பாஜக முயற்சிக்கிறது; இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி, அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் கலந்தாலோசித்து வலுமிக்க போராட்டங்களை நடத்துவோம் என்றும் அவர் கூறினார்.

;