tamilnadu

img

ஊரடங்கால் கேரளா செல்ல முடியாத தமிழக விவசாயிகள்; 30 ஆயிரம் தோட்டத்தொழிலாளர்கள் அவதி

தேனி,ஏப்.23- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு காரணமாக ஏலத்தோட்டத்தை பராமரிக்க முடியாமல் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவ சாயிகள் கடும் பதிப்பிற்குள்ளாகி உள்ளனர் .மேலும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழக தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர் .

தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் நிலத்தில் ஏலம் சாகுபடி நடைபெற்று வருகிறது .பீர்மேடு ,உடும்பஞ்சோலை ஆகிய வருவாய் வட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஏல விவசாயம் செய்து வருகிறார்கள் .இந்த ஏலத்தோட்டங்களில் கூடலூர் ,கம்பம் ,பாளையம் ,தேவாரம் ,போடி ஆகிய ஊர்களின் சுற்று வட்டாரங்களில் ஜீப்புகளில் தினந்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் வேலை செய்து வந்தார்கள். 

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மார்ச் 22 ஆம் தேதி முதல் கேரள -தமிழகம் செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டது .கேரளத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு விவசாயிகள் ,விவசாய தொழிலாளர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பாதிப்பில் ஏலத்தோட்டம்

ஏலத்தோட்டங்களுக்கு விவசாயிகள் ,மற்றும் தொழிலாளர்கள் செல்ல அனுமதி கிடைக்காததால் பராமரிப்பு பணிகள் நடை பெறவில்லை .ஆடி ,ஆவணி மாத ங்களில் ஏலக்காய் பறிக்கும் பணி துவங்க உள்ள நிலையில் ஏல செடிகளுக்கு அதற்கு தேவையான தண்ணீர் ,மருந்துகள் தெளித்து ,மண் வேலை செய்யவேண்டிய நிலையில் உள்ள விவசாயிகள் ஏலச்செடிகளை பராமரிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள் .இந்த நிலை தொடருமானால் ஏலச்செடிகள் காய்ந்து போகும் என விவசாயிகள் அஞ்சுகிறார்கள் .பெரிய விவசாயிங்கள் அங்குள்ள தொழிலாளர்களை கொண்டு பணி செய்து வருகிறார்கள் .அந்த தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை கூலி பட்டுவாடா செய்யப்படும் .போக்குவரத்து தடை பட்டதால் உரிய நேரத்தில் கூலி கொடுக்க முடியவில்லை .தேனி மாவட்டத்தில் பெரும்பாலும் வாங்கி சேவை மூடப்பட்டதால் வங்கிகள் மூலம் பணம் கொடுக்க முடியவில்லை .

வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள்

தேனி மாவட்டத்திலிருந்து இடுக்கி மாவட்டத்தில் உயிரை பணயம் வைத்து ஜீப்புகளில் சென்று வந்த வேலை பார்த்த தொழிலாளர்கள் வேலை இழப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் .வேலை இழந்த தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்த கையோடு அந்த திட்டத்தையும் அடியோடு நிறுத்தியது .

பரிவர்த்தனை முடக்கம்

ஊரடங்கு காரணமாக ஏலக்காய் ஏலம் நடைபெறும் நிறுவனங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் ,வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . ஏலக்காய் விற்பனை நிலையங்கள்,வியாபாரிகள் இடையே பண பரிவர்த்தனை முடங்கியுள்ளது .ஏல நிறுவனங்கள் மூடப்பட்டதால் வியாபாரிகள் கொள்முதல் செய்யமுடியவில்லை .கொள்முதல் செய்யப்பட்ட ஏலகாய்களை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்து வருகிறார்கள் .

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன் கூறியதாவது:

கடும் வறட்சி காரணமாக, மழையின்றி ஏலச்செடிகள் கருகி வருகிறது .சில தினங்களுக்கு முன்பு மழை பெய்தது ஆறுதலான விஷயம் .மேலும் தற்போது ஏலச்செடிக்கு மருந்து மற்றும் உரம் வைக்க வேண்டிய தருணம் ஆகும் .தேசத்திற்கு அந்நிய செலவாணியை பெற்று தரும் ஏலத்தை பாதுகாப்பது நமது கடமை .இடுக்கி மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் , இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் பேசி ,விவசாயிகள் ,தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டம் சென்று வருவதை உறுதி செய்யவேண்டும்.இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் விஜு கிருஷ்ணன் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திடம் பேசியுள்ளார் .ஏலத்தை பாதுகாக்கவும் ,தமிழக விவசாயிகள் ,தமிழக தோட்டத்தொழிலாளர்கள் நலன் கருதி போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக தலையிட வேண்டும்.இது குறித்து கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.    (ந.நி)

 

;