tamilnadu

img

முதல்வரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் மனு

சென்னை,ஜன.10- குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, மனு அளித்தனர்.  மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை  திருத்த சட்டம் மக்களை பிளவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் குற்றம்சாட்டியும் அதனை திரும்பப்பெறக் கோரியும் நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, தேசிய குடியுரிமை பதிவேட்டை புறக்கணிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி 23 இஸ்லாமிய அமைப்பினர் ஜனவரி 10 வெள்ளியன்று சென்னை கிரீன்வேஸ் சாலை யிலுள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தில், முதல்வர் எடப் பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து,மனு அளித்தனர். இக்குழுவினருடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா,  இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடைய நல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். முதல்வர் சந்திப்பிற்கு பின்னர் அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,  சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.

;