tamilnadu

img

‘தீக்கதிர்’ இரா.நாராயணன் காலமானார்

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

மதுரை, பிப்.11- தீக்கதிர் நாளிதழின் முதல் செய்தியாளர், மூத்த செய்தியாளர், கட்டுரையாளர், துணை ஆசிரி யர் என பன்முகத் தன்மை கொண்ட வரும் தமிழக பத்திரிகையாளர்களால் தீக்கதிர் நாராயணன் என அழைக்கப் பட்டவருமான தோழர் இரா. நாராயணன் செவ்வாயன்று கால மானார். அவருக்கு வயது 73. தோழர் இரா. நாராயணனின் தந்தை முன்னணி ராமசாமி மதுரை ஹார்வி மில் தொழிலாளி. அவரது தாயார் சீதாலெட்சுமி அம்மாள். இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளில் துடிப்புடன் செயல்பட்டவர்கள். இவரது சகோதரர் ஜெயச்சந்திரன், சகோதரிகள் ஜீவகலா, சொக்கம்மாள் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களே.  தோழர் இரா. நாராயணன் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னோடி  அமைப்பான தமிழக  மாணவர் சங்கத்தின் ஸ்தாபக பொதுச்செயலாள ராக செயல்பட்டவர்.

தோழர் இரா. நாராயணன் உடல்நலக்குறைவின் காரணமாக திங்க ளன்று பகல் 12 மணிக்கு காலமானார். அவரது மறைவுச் செய்தி யறிந்ததும் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், செய்தியா சிரியர் ப.முருகன், கார்ட்டூனிஸ்ட் தி.வீராச்சாமி, தீக்கதிர் மேலாளர் ஜோ. ராஜ்மோகன், விளம்பர மேலாளர் ஆர்.உமாபதி, செம்மலர் துணையா சிரியர் சோழ.நாகராஜன் மற்றும் தீக்கதிர் ஊழியர்கள் அன்னாரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மாலையணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர். தோழர் நாராயணனின் இறுதி நிகழ்வு புதன்கிழமை காலை 12 மணிக்கு மதுரை, சிம்மக்கல் காமாட்சிபுரம் அக்ரஹாரம், பேச்சியம்மன் படித்துறையில் நடை பெறும். மறைந்த நாராயணனுக்கு இரா.ஜோதி என்ற மனைவியும், நா.சிந்து பாலா, நா.கல்பனா, நா.நிரூபனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். 

மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்

தோழர் தீக்கதிர் இரா. நாராயணன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் இரங்கல் தெரி வித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், தமிழக மாணவர் சங்கத்தின் முதல் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயலாற்றிய தோழர் இரா.நாராயணன், தீக்கதிர் ஏட்டின் செய்தியாளராகவும், துணை ஆசிரிய ராகவும் நெடுங்காலம் பணியாற்றியவர்.  அவசரநிலைக் காலத்தில் தீக்கதிரை கொண்டு வருவதில் அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்க ஒன்று. மாநிலம் முழுவதும் சென்று கட்சி செய்திகளை சேகரித்து தீக்கதிருக்கு தரும் பணியை அவர் பல ஆண்டுகள் செய்து வந்தார். ஆசிரியர் குழுவிலும் திறம்பட பணியாற்றியுள்ளார். அவரது மறைவு கட்சிக்கும் தீக்கதிருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலக்குழு அஞ்சலி

சென்னையில் நடைபெற்ற கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தோழர் இரா.நாராயணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன் நாராயணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.