tamilnadu

img

தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுக்கும் அதிமுக அரசு -கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சேலம், ஆக.2- தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியார்மய மாக்கிடும் நோக்கில் மத்திய பாஜக அரசின் அறிவுறுத்தலின்படி செயில் நிர்வாகம் சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளது.  இதனை கண்டித்தும், டெண்டர் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலி யுறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று சேலம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.  சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.  

“சேலம் உருக்காலை, விமான நிலை யங்கள், திருச்சி பெல் தொழிற்சாலை, பிஎஸ்என்எல் போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனி யாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வரும் பாஜக, எதிர்காலத்தில் இந்தியாவையே தனியாருக்கு விற்பனை செய்யும் நிலைக்கு கூட செல்வார்கள் என்று சாடிய அவர், “மத்திய அரசு தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி மேற்கொள்வதை தடுக்க அதிமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக, தங்களது ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, தமி ழகத்தின் அனைத்து உரிமைகளையும், சொத்துகளையும் கொடுத்திட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளர். மக்களின் உரிமை பற்றியோ, மக்களைப் பற்றியோ தமிழக அரசுக்கு அக்கறை இல்லை.  ஆட்சியை தக்க வைத்து கொள்வதே அவர்களது ஒரே பணியாக உள்ளது” என்றும் குற்றம் சாட்டினார். இப்போராட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உற்பினர் ப.செல்வசிங், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர். சிங்காரவேலு, சிபிஐ மாவட்டச் செய லாளர் ஏ.மோகன், காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் ஜி.ஜெயபிரகாஷ், சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளர் கோ.மோகனசுந்தரம், எஸ்யுசிஐ(சி) மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.நடராஜன், ஐயுஎம் மாவட்டத் தலைவர் ஏ.கே.நசீர் அகமது, திமுக நிர்வாகி அம்மாசியப்பன், சேலம் உருக்காலை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

;