tamilnadu

img

இந்நாள்... இதற்கு முன்னால்... ஜூலை 16

1439 -  முத்தமிடுதலைத் தடைசெய்து இங்கிலாந்து அரசர் ஆறாம் ஹென்றி சட்டமியற்றினார்! அப்போது பரவிக்கொண்டிருந்த ஒரு கொள்ளை நோயின் பரவலைத் தடுப்பதற்காகவே இச்சட்டம் இயற்றப்பட்டது. 1346-53இல் சுமார் 20 கோடிப் பேரை பலிவாங்கிய, கருப்புச்சாவு என்று குறிப்பிடப்படும் தொற்று நோயே, மிக அதிக உயிர்களைப் பலிவாங்கிய கொள்ளை நோயாகக் குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து தொடங்கி, ஏறத்தாழ 1840வரை தாக்கிய பல்வேறு தொற்று நோய்கள், ஆசியா-ஐரோப்பாவின் பாதி மக்கள்தொகையைப் பலிவாங்கியது தொகுப்பாக, இரண்டாம் பெருந்தொற்று என்றழைக்கப்படுகின்றன.

(541இல் ஜஸ்டீனியன் ப்ளேக்கில் தொடங்கி 767வரை தாக்கியவை முதல் பெருந்தொற்று என்றும், 1855-1960 காலத்தில் ஏற்பட்டவை மூன்றாம் பெருந்தொற்று என்றும் அழைக்கப்படுகின்றன.) இங்கிலாந்துக்கு 1348இல் பரவிய கருப்புச்சாவு, சுமார் 5 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மக்கள்தொகையில் 40-60 சதவீதத்தைப் பலிகொண்டதால், பண்ணைகளில் உழைப்பதற்கு மக்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தியது. ப்யூபானிக் ப்ளேக்காக இருக்கலாம் என்று கருதப்படும் இந்நோய், அடுத்தடுத்து தாக்கியதால், அதன் பரவலைத் தடுக்கவே முத்தத்தடை விதிக்கப்பட்டது! சீனாவில் தோன்றி பட்டுப்பாதை வழியாகவும், வணிகக் கப்பல்கள் வழியாகவும் இந்நோய் பரவியதாக நம்பப்படுகிறது. இதனால், வெனிசிற்கு வந்த வணிகக் கப்பல்களில் வரும் வணிகர்களும், சரக்குகளும், தரையிறங்குவதற்குமுன் 40 நாட்களுக்குக் காத்திருக்கச் செய்யப்பட்டனர்.

நாற்பது நாட்களைக் குறிக்கும் க்வாரண்டெனா என்ற லத்தீன் சொல்லிலிருந்துதான், தனிமைப்படுத்தலைக் குறிக்கும் தற்போதைய சொல்லான க்வாரண்ட்டைன் உருவானது. இதே நோயின் பரவலைத் தடுக்க, ரகூசா குடியரசு 1347இல் மக்களை முப்பது நாட்களுக்கு தனிமைப்படுத்திய ட்ரெண்ட்டினோ-தான், தற்போதைய க்வாரண்ட்டைன் முறையின் தொடக்கமாகும். ஏராளமான மக்கள், குறிப்பாக ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் அதிகமானவர்கள் பலியானதால், உழைப்பதற்கு மனிதசக்தி குறைந்துபோனதால், நிலவுடைமையாளர்கள் (பண்ணையடிமைகளாக இருந்த!) தொழிலாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள, பணமாகக் கூலி வழங்குவதைத் தொடங்கிவைத்தது. கூலி உயர்வால். அடுத்த சில ஆண்டுகளில், விலைவாசியும் உயர்ந்தது கடுமையான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியது. சமயங்களின்மீதான பற்றுதலை நெருக்கடிகள் அதிகரித்தன. மிகப்பெரிய அளவில் மனிதர்கள் இறந்ததால் வெப்பநிலை குறைந்ததுடன், வனப்பகுதிகளும் அதிகரித்ததே, லிட்டில் ஐஸ் ஏஜ் என்று அழைக்கப்படும், 16-19ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில் ஏற்பட்ட கடுங்குளிருக்குக் காரணமாக இருந்திருக்கும் என்றுகூடச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  

===அறிவுக்கடல்=== 

;