1635 - 'டாய்ம்யோ' என்னும் ஜப்பானிய நிலப்பிரபுக்கள், 'ஹான்' என்னும் தங்கள் பண்ணைகளில் ஓராண்டும், தலைகநரான 'எடோ'-வில்(பின்னாளைய டோக்கியோ) ஓராண்டுமாக, மாறிமாறி இருப்பதற்கான, 'சான்க்கின் கோட்டாய்(மாற்று வருகை)' உத்தரவு, மூன்றாம் டொகுக்காவா ஷோகனான இயமிட்சு-வால் பிறப்பிக்கப்பட்டது. டாய்ம்யோ என்பவர்கள், ஷோகன்களுக்கு அடுத்த நிலையிலிருந்த பெரு நிலவுடைமையாளர்கள். ஜப்பானிய மொழியில் டாய் என்றால் பெரிய என்றும், ம்யோ என்றால் தனியார் நிலம் என்றும் பொருள். இக்காலத்திய ஜப்பானில், பேரரசர், அவருக்குக்கீழ் ஷோகன் என்ற அதிகாரம் படைத்த ராணுவத் தளபதி, அடுத்த நிலையில் டாய்ம்யோகள், அவர்களுக்குக் கீழே சாமுராய்கள், அதன்பின் ரோனின்கள் என்ற வரிசையில் அதிகார அடுக்குகள் அமைந்திருந்தன. பேரரசர் என்பவர் பெயரளவுக்கு மட்டுமே இருக்க, அதிகாரம் முழுவதும் ஷோகன்களிடம்தான் இருந்தது. அவர்களுக்குக்கீழே, ஜப்பான் முழுவதையும் ஆட்சி செய்த, சக்திவாய்ந்த குறுநில அரசர்களைப்போன்று 10-19ஆம் நூற்றாண்டுகளில் டாய்ம்யோகள் விளங்கினார்கள்.
இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்கள், ஹான் என்றழைக்கப்பட்டன. அதிகாரப்பூர்வமாகப் பிரிக்கப்பட்ட மாநிலங்களுடன், இந்த ஹான்கள் அறிவிக்கப்படாத நிர்வாகப் பிரிவுகளாகவே செயல்பட்டன. இயமிட்சு ஷோகனானவுடன், அதிகாரம் செறிந்த, மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பினை உருவாக்கியது, டாய்ம்யோகளின் அதிகாரத்தைச் சுருக்கியதால், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தன்னை எதிர்த்துக் கலகம் செய்துவிடாமலிருக்கவே, இயமிட்சு சான்க்கின் கோட்டாய் உத்தரவைப் பிறப்பித்தார். இதன்மூலம், தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பகுதியில் நிலையான அதிகாரத்தைப் பெறாமல் டாய்ம்யோகள் தடுக்கப்பட்டனர். அத்துடன், போரிடும் அளவுக்குச் செல்வத்தைச் சேர்ப்பதும், ஒன்றுவிட்டு ஓராண்டு தலைநகரிலிருப்பதால் அவர்களுக்கு இயலாமற்போனது. தங்கள் இடத்திலும், தலைநகரிலும் என்று இரு இடங்களில் தங்களுக்கான வசதிமிக்க இருப்பிடங்களை உருவாக்கி, பராமரிப்பது, தங்கள் படைகளுடன் இடம்பெயர்வது ஆகியவை அவர்களின் செலவினங்களை அதிகரித்தன. மாறுபட்ட பகுதிகளிலிருந்து இவ்வாறு டாய்ம்யோகளும், பணியாளர்களும் வந்து செல்வது தொடர்ந்து நடந்ததால், எடோவில் இது அன்றாட நிகழ்வானது. இப்பயணங்களால் சாலைக் கட்டமைப்புகளும், வழித் தங்குமிடங்களும் உருவாயின. டாய்ம்யோகள் தங்கள் சாமுராய்களை, ஷோகன்களுக்காகப் பணியாற்றச் செய்யும் கட்டாய ராணுவச் சேவையாக இது குறிப்பிடப்பட்டது. இதைப்போன்றே, எதிர்ப்புகளைத் தவிர்க்கும் காரணங்களுக்காக , ஃப்ரான்சின் பதினான்காம் லூயி அரசரும், ஆண்டில் ஆறு மாதங்கள் பிரபுக்கள் அரண்மனையில் தங்கி அரசருக்குச் சேவைசெய்ய உத்தரவிட்டிருந்தார்.
===அறிவுக்கடல்===