tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் ஜூன் 14

1966 - திருத்தந்தை நான்காம் பால்1559இல் உருவாக்கிய, ‘தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலை’, நான்கு நூற்றாண்டுகளுக்குப்பின், திருத்தந்தை ஆறாம் பால் செல்லாததாக்கினார். புவிதான் சூரியனைச் சுற்றுகிறது என்பது உட்பட, இன்று தயக்கமின்றி ஏற்கப்படுகிற, மறுப்பின்றி நிரூபிக்கப்பட்டுள்ள பலவற்றை, இந்தப் பட்டியல் மூலம்20ஆம் நூற்றாண்டுவரை கிறித்தவம் தடைசெய்திருந்தது! இந்தத் தடை விதிக்கப்படுவதற்கு, அச்சுத் தொழில்நுட்பத்தின் வரவே காரணமாகியது. அதுவரை, நூலகங்களிலும், மிகச்சில அறிஞர்களிடமும் மட்டுமே இருந்தவையான நூல்களில், என்ன இடம்பெறலாம் என்பதை திருச்சபை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அச்சு எந்திரத்தை கூட்டன்பர்க் உருவாக்கியதைத் தொடர்ந்து, நூல்கள் பெருமளவில் அச்சிடப்பட்டு, ஏராளமான மக்களைச் சென்றடையத் தொடங்கிய நிலையில், அவற்றிலுள்ள கருத்துகள் மக்களிடையே தெளிவை ஏற்படுத்திவிடும் என்றஅச்சம் திருச்சபைக்கு எழுந்தது என்று சொன்னால் மிகையாக இருக்காது.

புராட்டஸ்டண்ட் மறுசீரமைப்பின்போது, இருதரப்பிலும் ஏராளமான நூல்கள் வெளியானதால், அவற்றின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தவே ‘ஸ்டேஷனர்ஸ் கம்பெனி’ என்பதை இங்கிலாந்து உருவாக்கி, இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும், சில அச்சகங்களுக்கும் மட்டுமே நூல்கள் அச்சிடும் உரிமையை அளித்தது. இறைமறுப்புக் கொள்கைகளை அச்சிட்ட, எழுத்தாளரும் அச்சிடுபவருமான எட்டியன்னி டோலட் உயிருடன் எரிக்கப்பட்டது, 800க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், அச்சகத்தினர், நூல் விற்பனையாளர்கள் பாஸ்டில் கோட்டையில் சிறைவைக்கப்பட்டது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பிரான்சிலும் மேற்கொள்ளப்பட்டன. உண்மையில், திருச்சபையால் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியல் முதலில் ரோமில் வெளியிடப்படவில்லை! 1529இல் நெதர்லாந்தும், 1543இல் வெனிசும், 1551இல் பாரிசும் வெளியிட்டன. ரோமின்முதல் பட்டியல் நான்காம் பாலால் 1557இல் வெளியிடப்பட்டாலும், திரும்பப்பெறப்பட்டது. 1559இல் வெளியிடப்பட்ட பட்டியல் ஏராளமான நூல்களையும், 550 எழுத்தாளர்களின் அனைத்து படைப்புகளையும் தடைசெய்தது. கத்தோலிக்கத்தின் போதனைகளுடன் முரண்படுகிறவற்றைக் கண்டறிந்து, பட்டியலில் சேர்ப்பதற்காக, ஒரு சிறப்புக் குழுவே 1571இல் உருவாக்கப்பட்டதுடன், அது ஆண்டுக்குப் பலமுறை கூடி, அப்பணியைச் செய்தது. சமயத்திற்கொவ்வாத கருத்துகளின் அளவுக்கேற்ப நூலாசிரியர்களின் தரமும் 1897இல் நிர்ணயிக்கப்பட்டது. நான்காயிரம் நூல்களுடன் 1948இல் இந்தப் பட்டியல் கடைசியாக வெளியிடப்பட்டது. தடைசெய்யப்பட்ட பல கருத்துக்கள் கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் கல்வி நிலையங்களாலேயே போதிக்கப்படுமளவுக்கு ஏற்கப்பட்டு, சமயத் தலைமையே மறுக்கமுடியாமற்போய், இப்பட்டியல் பொருளற்றதாகிவிட்ட பின்னரே, 1966இல் செல்லாததாக்கப்பட்டது!

;