tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 11

சிந்தனை சிற்பி சிங்காரவேலர்

ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள பொருளாதார வித்தியாசம் தொலைந்த அன்றுதான், பெண்கள் தங்கள் பிறப்புரிமைகளாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பெறுவார்கள். அந்தப் பொருளாதார வித்தியாசம் ஒழியும் வரை பெண்களின் அடிமைத்தனம் நீங்கவே நீங்காது. மற்ற முயற்சிகள் யாவும் காலப் போக்கே. ஆதலின், சமதர்ம சமூகம் ஒன்றில்தான் பெண்கள் ஆணுடன் சரிசமத்துவம் பெற முடியும்.

சகலருக்கும் போதுமான சமத்துவ உணவு, ஆடை, வீடு கிடைக்க வேண்டுமானால் அவை சமதர்ம ஆட்சியில்தான் பெற முடியும். தொழிலாளர்களுக்கும், விவசாயி களுக்கும் ஓய்வு நேரம் சமதர்மத்தில்தான் கிடைக்கும். சகலரும் உயர்தரக் கல்வியைப் பெற்று, மூட சாதி, மூட மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டு மானால் அது சமதர்ம ஆட்சி மூலமாகத்தான் முடியும். பெண்கள் ஆணுடன் சமத்துவம் பெறவேண்டு மானால் சமதர்மத்தில்தான் அனுகூலப்படும். இனி வரும் சந்ததியாரை, பஞ்சத்திலிருந்தும், பட்டினியிலிருந்தும், நோயிலிருந்தும், அகால மரணத்திலிருந்தும் விடுவித்து, உலகை அழகு பெறச் செய்ய வேண்டுமானால் அது சமதர்மத்தில்தான் கூடிவரும். நமக்குப் பின்னால் உலகம் முழுதும், துவேச மோகமற்று, சண்டையற்று, போரற்று, உலக மக்கள் அன்புடன் கூடி வாழ வேண்டுமானாலும், சமதர்ம ராஜ்யம் மூலமாகத்தான் முடியும். உலகம் இப்பேற்றைப் பெறத் தற்காலத்தில் நிலவிவரும் கொடிய பொருளாதார வித்தியாசத்தினை முற்றிலும் மாற்றி, சமதர்ம ராஜ்யத்தை உருவாக்குதல் வேண்டும். -சிங்காரவேலர்

சிங்காரவேலர்

பெரணமல்லூர் சேகரன்

;