tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 23 இதற்கு முன்னால்

கி.மு.42 - சீசரைக் கொல்லும் சதியில் முக்கியப் பங்காற்றிய ப்ரூட்டஸ் தற்கொலை செய்துகொள்ளக் காரணமான ஃபிலிப்பி யுத்தத் தோல்வி ஏற்பட்டது. ஜூலியஸ் சீசரின் படுகொலை இத்தொடரில் 2019 மார்ச் 15இல் இடம்பெற்றுள்ளது. எளிய மக்களின் நலனுக்கான சீர்திருத்தங்களைச் சீசர் மேற்கொண்டிருந்ததால், அவர் கொல்லப்பட்டதும், மிகச் சிலரான உயர்குடிச் செல்வந்தர்கள், தங்கள் தலைவரைக் கொன்றுவிட்டதாக மக்கள் வெகுண்டெழுந்தது உள்நாட்டுப் போராக வெடித்தது. சீசர் கொலையின் முக்கியச் சதிகாரர்களான ப்ரூட்டசும், கேஷியசும் ரோமிலிருந்து வெளியேறி, கிரேக்கம், மாசிடோனியாவிலிருந்து சிரியா வரையான பகுதிகள் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளைக்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 சீசருடன் இன்னொரு கான்சலாக இருந்தவரான மார்க்கஸ் ஆண்ட்டனியஸ்(மார்க் ஆண்ட்டனி), சீசரின் தத்துப்பிள்ளை கையஸ் ஆக்டேவியஸ்(பின்னாளில் அகஸ்ட்டஸ் சீசர்), சீசரின் முக்கியத் தளபதியான மார்க்கஸ் லெப்பிடஸ் மூவரும் மேற்குப் பகுதியின் ராணுவம் முழுவதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, செனட்டின் எதிர்ப்புகளை முறியடித்து, இரண்டாவது முக்கூட்டணியை உருவாக்கினர். ஏற்கெனவே, கி.மு.50களில், ஜூலியஸ் சீசர், பொம்ப்பெயஸ் மேக்னஸ், லிசினியஸ் கிராசஸ் ஆகியோர் இணைந்து செயல்பட்டது முக்கூட்டணி என்று அழைக்கப்பட்டிருந்ததால், இது இரண்டாவது முக்கூட்டணி என்று குறிப்பிடப்படுகிறது. படைகளின் மிகச்சிறந்த பெரும்பகுதி, 28 லீஜியன்கள் அளவுக்கு முக்கூட்டணியிடம் இருந்த நிலையில், தங்களிடமிருந்த படைகளுடன், முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோரைக்கொண்டு 19 லீஜியன்கள் படையை ப்ரூட்டஸ் தரப்பினரும் திரட்டினர். அக்காலத்திய ரோமானிய லீஜியன் என்பது, சுமார் 5,000 வீரர்கள் அடங்கிய அணியைக் குறிக்கும். அக்காலத்திய மரபின்படி, சீசருக்கு தெய்வீக நிலையை(டிவஸ் லூலியஸ்) முக்கூட்டணி அறிவித்ததுடன், சீசரால் தத்தெடுக்கப்பட்டிருந்த வாரிசான ஆக்டேவியசையும், தெய்வ மகன்(டிவி ஃபிலியஸ்) என்று அழைக்கத் தொடங்கியிருந்தது. ப்ரூட்டசிடமிருந்த படையினரின் சீசரின்மீதான விசுவாசத்தை எவ்வளவு முயற்சித்தும் ப்ரூட்டசால் மாற்ற முடியாததால், சீசரின் வாரிசின் படையை எதிர்த்து அவர்களால் தீவிரமாகப் போரிட முடியவில்லை. நிலத்திலும், நீரிலும் நடைபெற்ற போர்களின் இறுதியாக அக்டோபர் 23இல் ஃபிலிப்பியில் நடைபெற்ற யுத்தத்தில், ஆக்டேவியசின் படைகள் தீர்மானகரமான வெற்றியைப்பெற்றன. சிறு படையுடன் தப்பிச்சென்ற ப்ரூட்டஸ், சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் தற்கொலை செய்துகொண்டார். வாரிசாக ஆக்டேவியசை சீசர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்திராத, சீசருக்குப்பின் ஆட்சியதிகாரத்தை எதிர்பார்த்திருந்த ஆண்ட்டனி, பின்னர் க்ளியோபாட்ரா உதவியுடன் ஆக்டேவியசுடன் போரிட்டதே, ரோம் முடியரசாகவும், அகஸ்ட்டஸ் சீசர் பேரரசராகவும் காரணமானதை இன்னொரு நாள் விபரமாகக் காணலாம்!

;