tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 31 இதற்கு முன்னால்

1517  கிறித்தவ மறுசீரமைப் பின் தொடக்கமாகக் குறிப் பிடப்படும் ‘95 குறிப்புகள்’ என்பதை மார்ட்டின் லூதர் வெளியிட்டார். ப்ராட்ட ஸ்ட்டண்ட் கருத்தாக்கத்தின் தந்தையாகக் குறிப்பிடப்  படும் லூதர் ஒரு ஜெர்மானிய பல்கலைக்கழகப் பேராசிரி யரும், இறையிலாளரும் ஆவார். இறப்புக்குப்பின் சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைவதற்குமுன் ஒரு தூய்மைப் படுத்துமிடம் இருப்பதாகவும், இந்த இடத்தில் பாவங்களுக்கு வேதனைப்பட்டு தூய்மையடைந்து, பின்னர் விண்ணகம் செல்வார்கள் என்றும் கத்தோலிக்க கிறித்தவம் நம்புகிறது.

இவர்களுக்காகப் புவியிலிருந்து பிரார்த்திக்க முடியும் என்றும் குறிப்பிடும் கத்தோலிக்கம், திருச்சபையின் பலன்கள் எனப்படும் பாவத்தண்டனைக் குறைப்பினைப் பெற்று இவர்கள் தூய்மையடைய உதவ முடியும் என்றும் குறிப்பிடுகிறது. இயேசு மற்றும் தூயவர்களின் நற்பேறுகளின் பலன்கள் ஒரு கருவூலமாக இருப்பதாகவும், இது தீர்ந்தே போகாமல், மனித குலம் மொத்தத்தையும் பாவங்களிலிருந்து விடுவிக்கக்கூடியது என்றும் கூறும் கத்தோலிக்கத்தில், கட்டணம் பெற்றுக் கொண்டு இந்தப் பலன்கள் சான்றிதழாக அளிக்கப் பட்டன. இவை பகுதிப் பலன்களாகவோ, நிறைவுப் பலன்களாகவோ அளிக்கப்பட்டன. 1515இல் புனித பீட்டர் பசிலிக்கா கட்டுமானப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, அதுவரை மன்னிக்கப்படாத பாவங்களாக இருந்த கூடா ஒழுக்கம் உட்பட அனைத்துப் பாவங்களையும் தீர்க்க  நிறைவுப் பலன்கள் அளிப்பதாக, திருத்தந்தை பத்தாம்  லியோ (சிறப்பு விற்பனை!) அறிவித்தார்.

பசிலிக்கா என்பது, பண்டைய ரோமில், நிர்வாக அவைகள், நீதிமன்றங்கள் கூடும் கட்டிடத்தின் பெயர். எல்லா ரோமானிய நகரங்களிலு மிருந்த இந்தக் கட்டிடங்களின் வடிவத்திலேயே, ரோம்  கிறித்தவத்தைத் தழுவியபின் தேவாலயங்கள் எழுப்பப்பட்ட தால், இந்த வடிவிலான தேவாலயங்கள் பசிலிக்கா என்றழைக்கப்படுகின்றன. இந்த சிறப்பு விற்பனையில்(!) பலன்களை வாங்கியவர்கள், தங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுமென்றும், அதனால் அவற்றுக்காக வருந்த வேண்டியதில்லை என்றும் கூறத்தொடங்கிய நிலையில்தான், அறிஞர்களின் விவாதத் திற்கு இந்த 95 குறிப்புகளை லூதர் வெளியிட்டார்.

லூதருக்கு முன்பே, ஐரோப்பா முழுவதும் பலரும் பலன்களை (பாவமன்னிப்பு) விலைகொடுத்து வாங்குவதுகுறித்து கவலைகளை எழுப்பியிருந்தனர். பாவமன்னிப்பு மட்டுமின்றி, திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபை ஆகியவற்றைப்பற்றியும் லூதர் குறிப்பிட்டிருந்தவை, திருச்சபையின் அதிகாரத்தின்மீது அவர் நடத்திய தாக்குதல்களாகப் பார்க்கப்பட்டதுடன், 1521இல் அவர் மதவிலக்கும் செய்யப்பட்டார். ப்ராட்டஸ்ட்டண்ட் பிரிவு உருவாகக் காரணமான இந்த 95 குறிப்புகள் வெளியிடப்பட்ட அக்டோபர் 31 மறுசீரமைப்பு நாளாக ஜெர்மெனியில் கடைப்பிடிக்கப்படுவதுடன், 2017இல் அதன் 500ஆம் ஆண்டுவிழாவும் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

;