tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 29 இதற்கு முன்னால்

1675 - நுண்கணிதத்தில் (கால்குலஸ்), தொகையீட்டிற்கான (இண்ட்டெக்ரல்) குறியீடாக, நீண்ட எஸ் எழுத்தை, முதன்முறையாக காட்ஃப்ரைட் லெய்ப்னிஸ் பயன்படுத்தினார். நியூட்டனுடன் சேர்த்து, நவீன நுண்கணிதத்தை உருவாக்கியவராகக் கொண்டாடப்படும் லெய்ப்னிஸ், ஜெர்மானிய பல்துறை விற்பன்னராவார். நியூட்டனுக்குத் தொடர்பின்றி, அவர் காலத்திலேயே, வகையீடு(டிஃபரன்ஷியேஷன்), தொகையீடு ஆகியவற்றின் தொடர்பினை விளக்கும், ‘நுண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றத்தை’ இவரும் உருவாக்கினார்.

தொகையீட்டின் பயன்பாடுகளுள் ஒன்றான, பரப்பையும், கனத்தையும் கணக்கிடுதல், கி.மு.1820 காலத்தின், எகிப்திய கணிதவியல் தொகுப்பான மாஸ்கோ பாப்பிரசில் காணப்படுகிறது. கி.மு.நான்காம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் யூடாக்சஸ், வெறுமைப்படுத்துதல் என்ற முறையை உருவாக்கியுள்ளார். இதை மேம்படுத்திய ஆர்க்கிமிடீஸ், தொகையீட்டு நுண்கணிதத்தையொத்த ஹ்யூரிஸ்ட்டிக்ஸ் என்ற முறையைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில் சீனாவிலும் இத்தகையொரு முறை உருவாக்கப்பட்டது.

பத்தாம் நூற்றாண்டில் அரேபிய கணிதவியலாளர் இபின் அல்-ஹேதமும், 14ஆம் நூற்றாண்டில் இந்தியக் கணிதவியலாளர்களும் இத்தகைய சில கணக்கீட்டு முறைகளை உருவாக்கினர். நியூட்டனின் பல கருத்துகளை, அவர் வெளியிடுவதற்கு முன்பே லெய்ப்னிஸ் முறையாகத் தொகுத்திருந்ததால், நியூட்டனின் கண்டுபிடிப்புகளை திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், பின்னாளில் லெய்ப்னிஸின் பங்களிப்பு உணரப்பட்டு, கண்டுபிடிப்பாளர்களாக இருவரும் ஏற்கப்பட்டனர். தொகையீட்டிற்கு லெய்ப்னிஸ் வழங்கிய நீண்ட எஸ் எழுத்து, வழக்கொழிந்த சிறிய எஸ் எழுத்தாகும். பண்டைய ரோமில் பயன்படுத்தப்பட்ட ரோமன் கர்சிவ்(அல்லது லத்தீன் கர்சிவ்) என்ற சேர்த்தெழுத்து முறையிலிருந்து இந்த நீண்ட எஸ் எழுத்து உருவானது.

சொற்களின் நடுப்பகுதியில் இரண்டு எஸ்  எழுத்துகள் வரும்போது முதல் எஸ் இவ்வாறு நீண்டதாக எழுதும் நடைமுறை இருந்துள்ளது. சொல்லின் இறுதி எழுத்தாக இந்த நீண்ட எஸ் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. எஃப் எழுத்தின் வடிவத்தை ஒத்திருந்ததால், குழப்பங்களையும் ஏற்படுத்திய இந்த நீண்ட எஸ் பயன்பாடு, அச்சிடும் எந்திரத்தின் வருகைக்குப்பின் குறைந்தாலும், லத்தீன் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தும் மொழிகளில் பயன்படுத்தப்படும், இரண்டு எழுத்துகள் சேர்ந்த அச்சுகளில் காணப்பட்டது. ஜான் பெல் என்ற பதிப்பாளர், தற்போதைய சிறிய எழுத்து எஸ்-சை 1788இல் உருவாக்கியதால், நீண்ட எஸ்-சின் முடிவுக்குக் காரணமானவர் என்று குறிப்பிடப்படுகிறார். இரண்டுவகை எழுத்துகளை வைத்திருப்பது கூடுதல் செலவென்பதால், அச்சகங்களும் நீண்ட எஸ்-சைக் கைவிட்டாலும், கையெழுத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவந்த இது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முழுமையாக மறைந்தது.

- அறிவுக்கடல்

;