tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 17 இதற்கு முன்னால்

1346 - ‘நெவில்லியின் சிலுவை’ யுத்தத்தில் ஸ்காட்லாந்து தோற்று, அதன் அரசர் இரண்டாம் டேவிட், அடுத்த 11 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த கற்சிலுவையின் அருகில் யுத்தம் நடைபெற்று, யுத்தத்துக்குப்பின், புதிய சிலுவையை நெவில்லி பிரபு அமைத்துக்கொடுத்ததால், இப்பெயர் ஏற்பட்டது. உண்மையில் நூறாண்டுப் போரின் ஒருபகுதியாக, பிரான்சின்மீது இங்கிலாந்து படையெடுத்ததை எதிர்த்தே, ஸ்காட்லாந்து இங்கிலாந்தின்மீது படையெடுத்தது. 1295இல் செய்துகொள்ளப்பட்டிருந்த ஆல்ட் அலையன்ஸ் என்ற ஒப்பந்தத்தின்படி, ஸ்காட்லாந்து இவ்வாறு படையெடுக்க வேண்டியிருந்தது.

ஆல்ட் என்ற ஸ்காட் மொழிச்சொல்லுக்கு பழைய (ஆங்கிலத்தில் ஓல்ட்!) என்று பொருள் என்பதால், இது பழைய கூட்டணி என்று பொருள்படும். ஸ்காட்லாந்தின் அரசியான மார்கரெட் 1295இல், ஏழு வயதில் இறந்துவிட, வாரிசு இல்லாத ஸ்காட்லாந்தின் அரசுரிமையைக் கைப்பற்ற இங்கிலாந்தின் அரசர் முதலாம் எட்வர்ட் முயற்சித்தார். அப்போது, துணைக்கு பிற நாடுகளை ஸ்காட்லாந்து தேடியபோது, பிரான்சின் கேஸ்கனியை இங்கிலாந்து ஆக்கிரமித்தது தொடர்பான விரோதத்தால், இரு நாடுகளும் போரிடும் தருவாயில் இருந்தன. அதனால், ஸ்காட்லாந்து, பிரான்ஸ் ஆகியவற்றில் யாரை இங்கிலாந்து தாக்கினாலும், மற்றவர் இங்கிலாந்தைத் தாக்கவேண்டும் என்று செய்துகொள்ளப்பட்டதே ஆல்ட் அலையன்ஸ். வறுமையுடன், ஐரோப்பாவின் கோடியில் அமைந்திருந்த நாடான ஸ்காட்லாந்துக்கு, பிரான்ஸ் துணை என்பது பெரியதாகத் தோன்றினாலும், இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் மோதல் ஏற்படும்போதெல்லாம் தானும் போரிடவேண்டியதாகி, அதிக இழப்பு ஏற்பட்டது ஸ்காட்லாந்துக்குத்தான்.

1329இல் 5 வயதில் இரண்டாம் டேவிட் அரசராகி, காப்பாளர்மூலம் ஆட்சி நடந்துகொண்டிருந்த நிலையில், 1332இல் இங்கிலாந்து ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, 1333இல் பிரான்சில் தஞ்சம் புகுந்த அவர், 1341இல் அவரது ஆதரவாளர்களின் கை ஓங்கும்வரை 8 ஆண்டுகள் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. 17 வயதில் நேரடியாக ஆட்சிசெய்யத்தொடங்கிய அவர், 5 ஆண்டுகளில் இங்கிலாந்தால் சிறைப்பிடிக்கப்பட்டார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பத்தாயிரம் மார்க்குகள் வீதம் பணயத்தொகை தருவதாக 1357இல் ஸ்காட்லாந்து ஒப்புக்கொண்டு அவரை மீட்டாலும், 1363ஆம் ஆண்டுக்கான தவணையைத் தர முடியவில்லை. தனக்குப்பின் அரசுரிமையை இங்கிலாந்து எடுத்துக்கொள்ளலாம் என்று எழுதிக்கொடுத்து அவர் பிரச்சனையைத் தீர்த்ததை, ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஏற்கவில்லை. இங்கிலாந்துடன் ரகசிய உடன்படிக்கைகள்மூலம் பிரச்சனையைத் தீர்த்து, 1371இல் இறக்கும்வரை அரசராக இருந்தார் டேவிட். 1332இல் இங்கிலாந்து ஆக்கிரமித்ததிலிருந்து, 1357இல் டேவிட் மீட்கப்பட்டது வரையான யுத்தங்கள் ஸ்காட் லாந்தின் இரண்டாம் விடுதலைப்போர் என்று அழைக்கப்படுகின்றன.

 

;