tamilnadu

img

இந்நாள் ஆகஸ்ட் 22 இதற்கு முன்னால்

1795  அனை த்துத் தேர்தல்களும் ரகசிய வாக்கெடுப்பு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என்று பிரெஞ்சுப் புரட்சியின்போது ஏற்பட்ட புரட்சிகர அரசு, பிரான்சில் சட்டமியற்றியது. ரகசிய வாக்கெடுப்பைக் கட்டாயமாக்கிய தற்கால உலகின் முதல் சட்டம் இதுதான். பிரெஞ்சுப் புரட்சியில் முதலில் உருவான அரசமைப்புச் சட்ட முடியாட்சி முடிவுக்குவந்து, 1792இல் டைரக்டரி என்று குடியரசு உருவானதிலிருந்து, புரட்சிகர நாட்காட்டி தொடங்கியது. அந்த நாட்காட்டியின்படி, மூன்றாம் ஆண்டில் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 31ஆவது பிரிவாக, கட்டாய ரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. ரகசிய வாக்கெடுப்பு பண்டைய கிரேக்கத்திலேயே தொடங்கிவிட்டது. கி.மு.12ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்பட்டதான பண்டைய கிரேக்கத்தில், தனிப்பட்ட செல்வாக்குகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, பல்வேறு சூழ்நிலைகளில், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. ரகசிய வாக்குப்பதிவை சட்டப்பூர்வமாக்கிய வாக்குச் சீட்டு சட்டம் என்பது உலகில் முதன்முறையாக ரோமக் குடியரசில், கி.மு.139இல் இயற்றப்பட்டது. ரோமக் குடியரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாஜிஸ்ட்ரேட் என்னும் அலுவலர்கள், மக்களின் அவைகள், செனட் என்று சிக்கலான கட்டமைப்பைக் கொண்டிருந்தது. சட்ட அவைகளுக்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்காமல், சட்டமியற்றுதல் முதலானவற்றில் தங்கள் அவைகளில் அவர்களே வாக்களிப்பார்கள். தொடக்கத்தில், ஒவ்வொருவராக வரிசையாகச் சென்று, பதிவு செய்யும் அலுவலரிடம் தங்கள் வாக்கை வாய்மொழியாகத் தெரிவிப்பார்கள். இம்முறையில் ரகசியத்தைப் பேண முடியவில்லை. கி.மு.509இல் ஒரு நகர அரசாக தொடங்கிய ரோமக் குடியரசு, அருகாமை பகுதிகளைக் கைப்பற்றி, 400 ஆண்டுகளில் ரோமப் பேரரசாக வளர்ந்ததில், கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகள் பெரும் நிலக்கிழார்களை உருவாக்கியிருந்தன. இவர்கள், தங்களுக்கு உதவும் முடிவுகளுக்கு ஆதரவாக வாக்களிக்க உணவு, நிதி என்று ஏராளமாக வழங்கியதால், கி.மு.182இல் தேர்தல் செலவுக்கு வரம்பு நிர்ணயிக்கவேண்டியதாயிற்று. கி.மு.181இலேயே ஊழல் எதிர்ப்புச் சட்டத்தையும் நிறைவேற்றியிருந்தாலும், இச்சட்டங்களால், அந்த முறைகேடுகளைத் தடுக்க முடியாததால், ரகசிய வாக்கெடுப்புக்குச் சட்டமியற்றப்பட்டது. 1856இல் ஆஸ்திரேலியாவில் சட்டமாக்கப்பட்டு, அதன்பின்னரே இங்கிலாந்து, அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்ததால், ரகசிய வாக்குச்சீட்டு ஆஸ்திரேலிய வாக்குச்சீட்டு என்றும் அழைக்கப்படுகிறது. 1948இல் ஐநா நிறைவேற்றிய உலக மனித உரிமைப் பிரகடனம், ரகசிய வாக்கெடுப்பு மூலம் குறிப்பிட்ட இடைவெளிகளில் கருத்துத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கவேண்டும் என்று கூறுகிறது. - அறிவுக்கடல்

;