tamilnadu

img

இந்நாள் மார்ச் 07 இதற்கு முன்னால்

1971 - பங்களாதேஷின் அடை யாளப்பூர்வாமான விடுதலை அறிவிப்பாகவே கருதப்படும், புகழ்பெற்ற உரையை, ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆற்றினார். வரலாற்றில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய உரைகளுள் ஒன்றாக இந்த 19 நிமிட உரை குறிப்பிடப்படுவதுடன், யுனெஸ்கோவின், ‘உலகின் நினைவுகள் பதிவேட்டிலும்’ பாதுகாக்கப்படுகிறது. விடுதலையின்போது, பல்வேறு சமயங்களும்கொண்டதாக உருவாகி, ஒப்பீட்டள வில் பாகிஸ்தானைவிட சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ள இந்தியாவில், தற்போது, சமயத்தை முக்கிய அளவுகோலாகக்கொண்ட குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டு, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிற பின்னிணியில், சமயம் ஒன்றாகவே இருந்தாலும், விடுதலைக்குப் போராட நேர்ந்த பங்களாதேஷின் வரலாறு கூர்ந்து நோக்க வேண்டியதாக உள்ளது. இன்று இந்தியாவில் நாம் காணும், மொழி, பண்பாடு ஆகிய வேறுபாடுகள் மட்டுமின்றி, ஒரு பகுதியின் வல்லாதிக்கமும் அந்த நாடு பிரியக் காரணமாக இருந்தது. கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து, பாகிஸ்தானின் முதன்மை அமைச்சர்களாக(பிரதமர்) நியமிக்கப்பட்ட கவாஜா நஸீமுதீன், முகம்மது அலி போக்ரா, ஹுசேன் சாகீத் சுராவார்டி உள்ளிட்டோர் நீண்டகாலம் ஆட்சிபுரிய அனுமதிக்கப்படவில்லை. 1970 டிசம்பரில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், கிழக்கு பாகிஸ்தானின் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையுமே கைப்பற்றியிருந்த அவாமி லீக், மொத்த பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் அறுதிப் பெரும்பான்மையும் பெற்றிருந்தாலும், முஜிபுர் ரஹ்மான் பிரதமராக பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதன் தலைவர் ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் அனுமதிக்காமல், இருவரும் ஒவ்வொரு பகுதிக்குப் பிரதமராக இருக்கலாம் என்றார்.

ஏற்கெனவே, கிழக்கு, மேற்குப் பகுதிகளுக்குத் தன்னாட்சி யும், பாதுகாப்பு, வெளியுறவு மட்டுமே மத்தியக் கூட்டரசின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமென்ற 6 அம்சக் கோரிக்கையை 1966இல் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய போது, தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறையலடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனால், ‘இம்முறை எங்கள் விடுதலைக்காகப் போராடுகிறோம்’ என்று பேசிய அவர், ஒத்துழையாமை இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். 20 லட்சம் பேர் முன்னிலையில் அவர் ஆற்றிய இவ்வுரையை தொலைக்காட்சியிலும், வானொலியி லும் ஒலிபரப்ப மேற்குப் பாகிஸ்தான் நிர்வாகம் மறுத்துவிட்ட நிலையில், பதிவு செய்யப்பட்டு, இசைத்தட்டுகளாக 3,000 பிரதிகள் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் அனுப்பப்பட்டது. 18 நாட்களில், ஆப்பரேஷன் சர்ச்லைட் என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் வேட்டையைத் தொடங்க, பங்களாதேஷ் விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

- அறிவுக்கடல்

;