tamilnadu

img

இந்நாள் மே 16 இதற்கு முன்னால்

1960 - முதல் சீரோளி(லேசர்) கதிரை, கலிஃபோர்னியாவிலுள்ள ஹ்யூஜஸ் ரிசர்ச் லேபரட்டரீசில், தியோடர் மைமான் உருவாக்கினார். பொதுவாக ஒளியில் பல்வேறு அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கற்றைகளும், ஒரே அலைநீளம் கொண்டவைகூட மாறுபட்ட அலைமுகங்களுடனும் காணப்படுகின்றன. இவற்றை ஒருமுகப்படுத்தி, ஒரே அலைநீளமும், ஒத்தியங்கும் அலைமுகமும் கொண்டதாக்குவதன்மூலம், அதிகரிக்கப்பட்ட லேசர் வெளிப்படுத்துகிறது. ‘கதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வின்மூலம் செறிவூட்டப்படும் ஒளி’(லைட் ஆம்ப்ளிஃபிகேஷன் பை ஸ்டிமுலேட்டட் எமிஷன் ஆஃப் ரேஸ்) என்பதன் முதலெழுத்துக் கூட்டுப்பெயரே(அக்ரனிம்) லேசர். 1917இல் ஜன்ஸ்டீன், கதிர்வீச்சு பற்றிய குவாண்டம் கோட்பாடு என்ற ஆய்வுக் கட்டுரையில் ஒளியை செறிவூட்டி லேசர், நுண்ணலையை(மைக்ரோவேவ்) செறிவூட்டி மேசர் ஆகியவற்றை உருவாக்க முடியும் என்றார்.

பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப்பின், 1953இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேசர் முதலில் உருவாக்கப்பட்டது. அணுக்கடிகாரம், விண்மீன்களிடை ஊடக ஆய்வுகள் உள்ளிட்டவற்றில் பயன்பட்டுக்கொண்டிருக்கும் மேசரை முன்னோடியாகக்கொண்டே உருவாக்கப்பட்டதால், லேசர் தொடக்கத்தில், ஒளியியல்(ஆப்டிக்கல்) மேசர் என்றழைக்கப்பட்டது. தொடர்ந்த ஆய்வுகளில், பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி, ஏராளமான மாறுபட்ட லேசர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1996இல் உருவாக்கப்பட்ட உலகின் அதிக சக்திவாய்ந்த லேசர் 12.5 கோடிகோடி வாட் சக்தியை(ஒரு ஹைட்ரஜன் குண்டுக்கு இணையான சக்தி!) வெளிப்படுத்தியது.

இதனால், லேசர் கருவிகளைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவதற்காக, 1,2,3ஆர்,3பி,4 என்று லேசர் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், கதிர் வெளியில் வராத, வகை(க்ளாஸ்) 1(உதாரணம்:சிடி கருவி), ஒரு மில்லிவாட் அளவுக்கு மட்டும் சக்தியுள்ள வகை 2(உதாரணம்: பிரசண்ட்டேஷன் பாயிண்ட்டர்) தவிர மற்றவை மனிதர்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துமளவுக்குச் சக்திவாய்ந்தவை. சிடி-டிவிடி ஆகியவற்றை இயக்கும் கருவிகள், லேசர் பிரிண்டர்கள், கடைகளில் பொருட்களின் பார்கோட் உணரும் கருவிகள், நடன அரங்குகளின் பலவண்ண விளக்குகள் என்று அன்றாடப் பயன்பாடு தொடங்கி, உலோகங்களை அறுத்தல், பற்றவைத்தல்(வெல்டிங்) உள்ளிட்ட கடினமான பணிகள், மருத்துவத்துறையில் கண் உள்ளிட்ட உறுப்புகளில் நுண்ணிய அறுவை சிசிச்சைகள், மரபணுக்களில் டிஎன்ஏ வரன்முறையிடல் என்று அனைத்துத் துறைகளிலும் பயன்படக்கூடிய தொழில்நுட்பமாக லேசர் மாறிவிட்டது. லேசர் தொடர்பான ஆய்வுகளுக்காக, லேசர் இயற்பியல்(அல்லது லேசர் அறிவியல்) என்ற பெயரில், தனித்துறையே உருவாகிவிட்டது. லேசர் தொடர்புடைய கண்டுபிடிப்புகளுக்காக மட்டும், இதுவரை பத்துக்கும் மேற்பட்டோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

- அறிவுக்கடல்

;