tamilnadu

img

இந்நாள் மார்ச் 21 இதற்கு முன்னால்

1943 - ஹிட்லரைக் கொல்ல முயற்சித்த தற்கொலைத் தாக்குதல் திட்டம் தோல்வியுற்றது. சோவியத் செஞ்சேனையிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயதங்கள், பெர்னிலிலிருந்த பழைய ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பார்வையிட ஹிட்லர் வந்தார். அவற்றை ஹிட்லருக்கு விளக்கவேண்டிய நிபுணரான, ருடால்ஃப் கிறிஸ்டோஃப் ஃபியரர் வோன் ஜெஸ்டார்ஃப் என்ற ஜெர்மன் ராணுவ அலுவலர்,  உடலில் வெடிகுண்டுகளைப் பொருத்திக்கொண்டு, ஹிட்லர்மீது விழுந்து வெடிக்கச் செய்வது என்று சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்திருந்ததைவிட ஹிட்லர் மிகவேகமாக சுற்றிப் பார்த்ததால், குறித்த நேரத்தில் வெடிக்கும்படி ஜெஸ்டார்ஃப் உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடிப்பதற்குள் கிளம்பிவிட்டார்.

ஹிட்லர் சென்றபின் கழிவறைக்குச் சென்று, யாருக்கும் தெரியாமல் கடைசி நொடியில் அந்த குண்டை செயலிழக்கச் செய்து ஜெஸ்டார்ஃப் உயிர் பிழைத்தார். சந்தேகம் எழாமல் தப்பிய ஜெஸ்டார்ஃப், ஹிட்லரைக் கொலைசெய்ய முயற்சித்து உயிர்பிழைத்த மிகச்சிலரில் ஒருவர்! 1932இல் ஹிட்லர் பங்கேற்ற விருந்தில் நஞ்சு கலக்கப்பட்டதுதொடங்கி, 1944இல் முயற்சிக்கப்பட்ட ‘ஜூலை சதி’வரை, ஹிட்லரைக் கொலைசெய்ய 42 முறை முயற்சிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளியில் தெரியாமற்போன முயற்சிகள் இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இம்முயற்சிகளில் ஈடுபட்ட அனைவரும் ஜனநாயக ஆர்வலர்களோ, முற்போக்காளர்களோ அல்ல.

பலவிதமான நோக்கங்கள் அவற்றின்பின் இருந்தன. ஒரு பெரும் பன்னாட்டு போரைநோக்கி (இரண்டாம் உலகப்போர்!) ஹிட்லரின் பாதை போவதைத் தடுப்பதற்காகவும் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரபுக்கள் அதிகாரம் செலுத்தும் முடியாட்சி போன்ற ஒன்று அமைய வேண்டும் என்று பழைமைவாதிகளும் ஹிட்லரைக் கொல்ல முயற்சித்தனர். முதல் உலகப்போரில் ஜெர்மனி கைப்பற்றியிருந்த பகுதிகள் போருக்குப்பின் மீட்கப்பட்டிருந்த நிலையில், பல பகுதிகளை மீண்டும் ஹிட்லர் ஆக்கிரமித்திருந்ததால், 1939க்கு முந்தைய நிலையை மீட்க, அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் இம்முயற்சிகளில் ஈடுபட்ட னர். மனிதகுலத்திற்கே பொருந்தாத நாஜிகளின் கொள்கைகளை ஏற்காத முற்போக்காளர்களும் இதைச் செய்தனர். 1944 ஜூலை 20இல் நடைபெற்ற கொலை முயற்சியின் 75ஆவது ஆண்டுவிழாவை 2019இல் சிறப்பாகக் கொண்டாடிய ஜெர்மெனி, செல்லக்கூடாத பாதையை அறிந்திருக்கவேண்டும் என்று கூறி, அன்று சதிகாரர்களாகப் பார்க்கப்பட்ட, ஹிட்லரைக் கொலைசெய்ய முயற்சித்தவர்களை கவுரவித்தது!

- அறிவுக்கடல்

;