tamilnadu

img

இந்நாள் பிப். 29 இதற்கு முன்னால்

கி.மு.44 - பிப்ரவரி மாதத்தில் முதன்முதலாக 29ஆம் தேதி இடம்பெற்றது. மற்ற நாட்களுக்கு, நடந்தவற்றில் வியத்தகு நிகழ்வுகளை எழுதினால், பிப்ரவரி 29க்கு, அந்த நாளே வியப்புக்குரியதாக இருக்கிறது. ரோமைத் தோற்றுவித்தவரான, ரோமுலஸ் உருவாக்கிய பண்டைய ரோமானிய நாட்காட்டி, ஒரு சந்திர நாட்காட்டி! அதில் ஓராண்டிற்கு 10 மாதங்களும், 355 நாட்களும் மட்டுமே இருந்தன. அதிலும் மாதங்களில் 304 நாட்கள் மட்டுமே இருக்க, 54 நாட்கள் குளிர்காலம் என்று எந்தக் கணக்கிலும் இல்லை! இது ஒரு கட்டத்தில் பருவகாலத்திற்கும், நாட்காட்டிக்கும் முரணை ஏற்படுத்த(உதாரணமாக, மழைக்காலம் என்பது நாட்காட்டியின் குறிப்பிட்ட காலத்தில் வராது!), ரோமக் குடியரசின் காலத்தில், ஜனவரி, பிப்ரவரி என்ற மாதங்களை அவ்வப்போது இடைச்செருகலாகச் சேர்த்துக்கொண்டனர். அதன்படி, ஆண்டின் கடைசி மாதம் பிப்ரவரி! அதிலும் இருந்த முரண்பாடுகளைச் சரிசெய்ய, அவ்வப்போது பிப்ரவரியில் ஒரு கூடுதல் நாள் சேர்க்கப்படும். விநோதம் என்னவென்றால், அது பிப்ரவரி 24உடன் சேர்க்கப்படும். புரியும்படிச் சொன்னால், அத்தகைய ஆண்டுகளில் பிப்ரவரி 24க்கு 48 மணிநேரம்! ஆனால், அக்காலத்திலேயே, எகிப்தின் நாட்காட்டி 365 நாட்களுடன் இருந்துள்ளது! எகிப்தை சீசர் கைப்பற்றியபின், ரோமானிய அறிஞர்களைக்கூட்டி புதிய நாட்காட்டியை உருவாக்கச்சொன்னபோது, கி.மு.4ஆம் நூற்றாண்டிலேயே 365¼ நாள் ஆண்டை கணித்திருந்த யூடாக்சஸ்-இன் கணக்கீடுகளையொட்டிய, ஜூலியன் நாட்காட்டி உருவாக்கப்பட்டது.

இது. கி.மு.46இல் சட்டமாக்கப்பட்டதற்கடுத்து கி.மு.44தான் லீப் ஆண்டென்பதால், அதன் பிப்ரவரி முதன்முறையாக 29 நாட்களைப்பெற்றது. ஆனால், இதிலிருந்த மிகச்சிறிய வேறுபாடு, 15 நூற்றாண்டுகளாகப் பெரிதாகிக்கொண்டே வந்தநிலையில்தான், 1582இல் திருத்தந்தை 13ஆம் கிரிகோரியால், 100இன் மடங்குகள் லீப் ஆண்டல்ல, 400 மடங்குகள் லீப் ஆண்டு என்பன உள்ளிட்ட திருத்தங்களுடன், தற்போதைய நாட்காட்டி உருவானது. இதற்கு மாறும்போது, பல நாடுகளும் அதுவரை ஏற்பட்டிருந்த வேறுபாட்டைச் சரிசெய்யும்வண்ணம், 10-13 நாட்களை இடையில் விடநேர்ந்தது. அப்படி மொத்தமாக விடாமல், லீப் ஆண்டுகளின் கூடுதல் நாட்களை மட்டும் கைவிட்டு படிப்படியாக மாறத்திட்டமிட்ட ஸ்வீடன், போர்க்காலத்தில் கணக்கீடுகளைத் தவறவிட்டதால், உலக வரலாற்றின் ஒரே பிப்ரவரி 30ஆம் தேதியை 1712இல் சேர்த்து, அதெல்லாம் சரிப்பட்டு வராமல், இறுதியாக 1753இல் பிப்ரவரி 17க்குப்பின் மார்ச் 1 என்று அறிவித்தது!

- அறிவுக்கடல்

;