tamilnadu

img

இந்நாள் பிப். 25 இதற்கு முன்னால்

1947 - ப்ரஷ்ய முடியரசாக இருந்து, ஜெர்மன் மொழி பேசிய ஐரோப்பியப் பகுதி களை ஒருங்கிணைத்து, ஜெர்மன் பேரரசாக உருவாக்கி, பின்னர், ஜெர்மனியின் ஒரு மாநிலமாக இருந்த ப்ரஷ்யா, முற்றிலுமாகக் கலைக்கப்பட்டது. ப்ரஷ்யா என்பது, பால்ட்டிக் கடலின் தென்கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள பகுதியாகும். பழைய ப்ரஷ்யர்கள் என்று குறிப்பிடப்படும் தொல்குடியினர் வசித்த இப்பகுதியை, போலந்தின் அழைப்பை ஏற்று, 13ஆம் நூற்றாண்டில் ட்யூட்டானிக் படையினர் கைப்பற்றினர். 1525இல் இது போலந்து முடியரசுக்குட்பட்ட, ப்ரஷ்ய டச்சி ஆனது. 14ஆம் நூற்றாண்டிலேயே பெரும்பகுதியினர் ஜெர்மன் மொழி பேசத் தொடங்கியிருந்த நிலையில், 17ஆம் நூற்றாண்டுவாக்கில், பழைய ப்ரஷ்யர்களே தனியாக இன்றி முழுமையாகக் கலந்துவிட்டிருந்தனர்.

புனித ரோமப் பேரரசர், போலந்து அரசர் ஆகியோரின் அனுமதியுடன், 1701இல் முதலாம் ஃப்ரடரிக்கை அரசராகக் கொண்டு, ப்ரஷ்ய முடியரசு உருவானது. 46 ஆண்டுகள் ஆட்சிசெய்த, மகா ஃப்ரடரிக் என்று குறிப்பிடப்படும் இரண்டாம் ஃப்ரடரிக், ப்ரஷ்ய ராணுவத்தை, ஐரோப்பாவின் தலைசிறந்த ராணுவமாக்கினார். வரலாற்றின் மிகச்சிறந்த போர்த்தந்திர மேதைகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் அவர் காலத்தில், ஐரோப்பாவின் பெரும் சக்திகளுள் ஒன்றாக ப்ரஷ்யா உயர்ந்தது.

இந்தப் பின்னணியில்தான், 1862இல் முதலாம் வில்லெம் அரசரால், ப்ரஷ்யாவின் ‘மினிஸ்ட்டர் ப்ரெசிடெண்ட்’ ஆக நியமிக்கப்பட்ட இரும்பு மனிதர் பிஸ்மார்க், ஜெர்மன் பேசும் பகுதிகளை ஒருங்கிணைத்து, ஜெர்மானியப் பேரரசை, ப்ரஷ்யாவின் தலைமையில் உருவாக்கினார். முதல் உலகப்போரின் இறுதியில், ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் இடைப்பட்ட பகுதியான ப்ரஷ்யாவின் சில பகுதிகள் போலந்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது, அந்நாடுகளுக்கிடையேயான வணிகத்துக்கு இடையூறாக இருந்தது. வெய்மார் குடியரசாக ஜெர்மனி மாறிய போது, ப்ரஷ்ய சுதந்தர நாடு என்ற குடியரசாக ப்ரஷ்யா மாறியது. 1932இல் ப்ரஷ்யாவின் குடியரசு, ஜெர்மனியால் கவிழ்க்கப்பட, 1933இல் ஜெர்மனியே நாஜிகளின் கட்டுப் பாட்டிற்குள் சென்றது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின், ரஷ்யக் கட்டுப்பாட்டில் கிழக்கு ஜெர்மனி வந்துவிட, ப்ரஷ்யாவை, போலந்தும், ரஷ்யாவும் பிரித்துக்கொண்டன. அமெரிக்கா, சோவி யத், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நான்கு பெரும் சக்திகளின், கூட்டணிக் கட்டுப்பாட்டுக் குழு, ப்ரஷ்யா என்ற நாட்டையே கலைத்துவிடுவதற்கான சட்டம் எண்.46 என்பதை இயற்றி, ஒரு மாபெரும் சகாப்தத்தையே முடிவுக்குக் கொண்டுவந்தது.

- அறிவுக்கடல்

;