tamilnadu

img

இந்நாள் பிப். 05 இதற்கு முன்னால்

1807 - இங்கிலாந்துக் கடற் படையைச் சேர்ந்த பிளென்ஹீம், ஜாவா ஆகிய கப்பல்கள், இந்தியப் பெருங்கடலிலுள்ள ரோட்ரிக்ஸ் தீவுக்கருகில் மறைந்துபோயின.  கம்பியில்லாத் தந்தியின் வரவுக்குமுன், நடுக்கடலில் கப்பல்கள் மோதிக்கொள்ளுதல், மோசமான காலநிலை, திடீரென்று எழும் பேரலைகள் உள்ளிட்ட காரணங்களால் கப்பல்கள் காணாமற்போவது  வழக்கமாக நடப்பதுதான். கப் பல்களை மூழ்கடிக்கும் அளவுக்குத் திடீரென்று எழும் பேரலைகள் போக்கிரி அலைகள் (ரோக் வேவ்ஸ்) என்றழைக்கப்படுகின்றன. காணாமற்போன கப்பல், நீண்ட காலத்திற்குக் கண்டுபிடிக்க முடியாமற்போனால், மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்படும். கப்பலில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் இறந்துபோவது, ‘லாஸ்ட் வித் ஆல் ஹேண்ட்ஸ்’ என்று குறிப்பிடப்படுகிறது.

கப்பலில் இருந்து தப்பியவர்களோ, கப்பல் மூழ்கியதைப் பார்த்தவர்களோ இல்லாத நிலை, கப்பலின் மறைவுகுறித்த பல்வேறு கட்டுக் கதைகளுக்கு அடிப்படையாகிவிடுகிறது. இவ்வாறு நிலவும் நம்பிக்கைகள் ‘மாலுமி களின் மூடநம்பிக்கைகள்’ என்றழைக்கப்படுகின்றன. கப்பலில் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது, சூரியன் சிவப்பாக உதித்தால் ஆபத்து என்று இத்தகைய மூடநம்பிக்கைகள் ஏராள மாக உள்ளன. அதைப் போலவே, குறிப்பிட்ட சில இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து ஏற்படுவது, மனித அறிவிற்கு அப்பாற்பட்ட(அமானுஷ்ய!)  சக்திகள் நிலவுவதாக அப்பகுதிகளைக் கருதி, அஞ்சவும் செய்தன. அவ்வாறானவற்றில் பெர்முடா முக்கோணம் பெரிதும் அறியப்பட்டதாகும்.  உலகம் முழுவதும் இவ்வாறு நம்பப்படும் 12 பகுதிகள் தொகுப்பாக ‘தீமையின் சுழல்கள்’ அல்லது ‘சாத்தானின் இடுகாடுகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன. இவை, புவியில் சீரான அமைப்பில் அமைந்துள்ளதாகவும் நம்பப்படுகின்றன.

கம்பியில்லாத் தந்தியின் வரவுக்குப்பின் ஆபத்துகளில் உதவி கோர முடிந்ததுடன், அடுத்தடுத்து ஏற்பட்ட தொலைத்தொடர்பு முன்னேற்றங்கள் காணாமல் போதல் விகிதத்தைக் குறைத்திருந்தாலும், இன்று வரை காரணம்கூற முடியாத விபத்துகளும், விமானங்கள்கூட காணாமற்போவ தும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக நீர்மூழ்கிகளில் தகவல் தொடர்பு வசதிகள் குறைவு என்பதால், நீருக்கடியில் நிகழும் இடர்களில் அவை அதிகம் காணாமற்போகின்றன. தற்காலத்திய சோனார் முதலான தொழில்நுட்பங்கள், பெரும் பாலான மூழ்கிய கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதைச் சாத்தியமாக்கினாலும், இன்னும் கண்டுபிடிக்க முடியாதவையும் ஏராளமாக உள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட வற்றிலும், மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டவை மட்டும்தான் மீட்கப்படுகின்றன. 

- அறிவுக்கடல்

;