tamilnadu

img

இந்நாள் மே 26 இதற்கு முன்னால்

1998 - ஆஸ்திரேலியாவில் ‘தேசிய வருத்தம் தெரிவிக்கும் நாள்(நேஷனல் சாரி டே)’ முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக இது கடைப்பிடிக்கப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப்பின், அவர்கள் ஏற்படுத்திய சூழ்நிலைகள், அவர்களோடு வந்த புதிய நோய்கள் முதலானவற்றைப் பூர்வகுடிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் பூர்வகுடிகளின் எண்ணிக்கை மிகவேகமாகக் குறைந்தது. முழுமையான பூர்வகுடி இரத்தம்கொண்டவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிவின் விளிம்பிலிருப்பதாகக்கூறிய, இவர்களைப் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்ட குழுவின் தலைவர் ஏ.ஓ.நெவில், ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளுக்கும், குடியேறிகளான வெள்ளையர்களுக்கும் பிறந்த கலப்பினக் குழந்தைகளை, வெள்ளையர்களிடையே பணிபுரியப் பழக்கினால், திருமண உறவுகளும் ஏற்பட்டு அவ்வினம் காக்கப்படும் என்று 1930இல் யோசனை கூறினார். ஆனால், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே, தாய்மார்களிடமிருந்து பிரிக்கப்பட்ட இக்குழந்தைகள் கலப்பினம், அரை-சாதி, க்வாட்ரூன்(கால்பங்கு பூர்வகுடி-முக்கால்பங்கு ஐரோப்பியர்), ஆக்டோரூன் (எட்டில் ஒரு பங்கு பூர்வகுடி) என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தேவாலயங்களிலும், பிரித்துவைக்கப்பட்ட தங்குமிடங்களிலும் வைக்கப்பட்டனர். உண்மையில், முழு ஐரோப்பியர்களின் (வந்தேறிகள்) எண்ணிக்கையைவிட, இந்தக் கலப்பினத்தவர் அதிகமாகவிடுவார்கள் என்ற அச்சத்தில், வெள்ளையரின் பண்பாட்டை அங்கு நிலைநிறுத்துவதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்ட இவர்கள், ‘திருடப்பட்ட தலைமுறை’ என்று குறிப்பிடப்படுகின்றனர். ஏற்கெனவே, பூர்வகுடிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்கள், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியவற்றுக்காக, இங்கிலாந்துக் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டதன் 150ஆவது ஆண்டுக்கொண்டாட்ட நாளான 1938 ஜனவரி 26ஐ, பூர்வகுடிளுக்கு ஆதரவான அமைப்புகள் துக்க நாளாகக் கடைப்பிடித்தன. குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணைகோரிய இயக்கங்கள், 1990களில் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, 1995இல் விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டது. இணை ஆணையர்களாகப் பூர்வகுடிப் பெண்களே நியமிக்கப்பட்ட இந்த ஆணையத்தின், ‘அவர்களை வீட்டுக்கு அழைத்துவருதல்(பிரிங்கிங் தெம் ஹோம்)’ என்ற 680 பக்க அறிக்கை, 1997 மே 26இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் நினைவாகவே, பூர்வகுடிகள் அல்லாதவர்களையும்கொண்ட பூர்வகுடிகள் பாதுகாப்பு அமைப்புகள் இந்நாளை 1998இல் கடைப்பிடித்தன. அப்போது இதை ஏற்காத அரசு, 1999ல் வருத்தம் தெரிவித்ததுடன், 2008இல் மன்னிப்பும் கேட்டது.

-அறிவுக்கடல்

;