tamilnadu

img

இந்நாள் நவ. 18 இதற்கு முன்னால்

1760 - மறுகட்டுமானம் செய்யப்பட்ட கேஸ்ட்டலேனியா ‘கடன்காரர்கள் சிறை’க்கு, கைதிகள் வருகை தொடங்கியது. கேஸ்ட்டலேனியா என்பது, தற்போதைய மால்ட்டாவின் தலைநகரான வேலெட்டா நகரில் அரசவை, நீதிமன்றங்கள் செயல்பட்டுப் பின்னாளில் சிறையாக மாற்றப்பட்ட கேஸ்ட்டலேனியா அரண்மனை. சரி, கடன்காரர்கள் சிறை? ஆம்! கடனைத் திருப்பித் தராதவர்களை அடைப்பதற்கென்றே சிறை! திருப்பித்தராத (அல்லது தரமுடியாத!) கடனுக்காகச் சிறைகள் என்பவை உலகின் பல நாடுகளிலும் நடைமுறையிலிருந்திருக்கின்றன.

இவை, கடன் தீரும்வரை உழைக்கவேண்டிய, அடைத்து வைக்கப்பட்ட உழைப்புக் கூடங்களாகவோ, கடனை ஏதோவொரு வகையில் திருப்பித்தரும்வரை அடைத்து வைக்குமிடங்களாகவோ இருந்திருக்கின்றன. இவற்றில் அடைக்கப்படும்போது, கடனை மட்டுமின்றி, இவற்றில் அடைக்கப்பட்டிருக்கும் காலத்திற்கு, இச்சிறைகளைப் பராமரிக்கும் கட்டணங்களும் வசூலிக்கப்படும். கடனுக்கென்று சிறைகள் இன்றி, கடன் தீரும்வரை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வதும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்துள்ளது. இடைக்கால ஐரோப்பாவில், கடன்காரர்களான ஆண்கள், பெண்கள் அனைவரும்  ஒரே இடத்தில் அடைக்கப்படும் நடைமுறை இருந்துள்ளது.

இவ்வாறு அடைக்கப்படுபவர்கள் தொற்றுநோய்களால் இறப்பதும், பிற தொல்லைகளுக்கு ஆட்படுவதும்  வழக்கமாக இருந்துள்ளது. இங்கிலாந்தில் ஜான் பைரோம் என்ற ஆங்கிலேயக் கவிஞரின் மகன் சாமுவேல் பைரோம், எழுத்தாளர் சார்லஸ் டிக்கென்சின் தந்தை ஆகியோர் இவ்வாறு கடன்காரர்கள் சிறையில் அடைபட்டிருந்திருக்கின்றனர். அதனால்தான் டிக்கென்ஸ் தன் லிட்டில் டோரிட் புதினத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க விடுதலை சாசனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான ஜேம்ஸ் வில்சன், துணை நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே, கடன்காரர்கள் சிறையிலிருக்கும் நிலையும் ஏற்பட்டது. அதனாலேயே அமெரிக்காவில் 1792இல் கடன்காரர்கள் சிறை நிவாரணம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்த இம்முறை 1833இல் கூட்டரசுச் சட்டத்தால் தடைசெய்யப்பட்டாலும், முழுமையாக ஒழியவில்லையென்பதால், 1978இன் திவால் நிவாரணச் சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் 1950இல் உருவான மனித உரிமைகள் ஒப்பந்தத்தில் இம்முறையைத் தடைசெய்வதுபற்றிக் குறிப்பிடப்பட்டாலும், சில நாடுகள் இன்றுவரை அதை ஏற்கவில்லை. இந்தியாவில் இதை நெறிமுறைப்படுத்த 1881இல் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட நெகோஷியபிள் இண்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டம் (இச்சட்டத்தின்படி ப்ராமிசரி நோட், காசோலை போன்றவை)  இன்றும் பெரிய மாற்றங்களின்றித் தொடர்கிறது. கடன்காரர்கள் சிறைகள் என்பவை பெரும்பாலும் வழக்கொழிந்துபோனாலும், இவற்றைப்போன்ற சட்டங்களால், ஒப்பந்தத்தை மீறுதல் முதலான அடிப்படைகளில் கடனைத் திருப்பித்தராதவர்கள் உலகின் பலபகுதிகளிலும் இன்றளவும் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.

- அறிவுக்கடல்

;