tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 29

ருக்மணி தேவி அருண்டேல் பிறந்த நாள்

ருக்மிணி தேவி அருண்டேல் மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். தியசோஃபிக்கல் சொஸைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவரது தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். ருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார்.

1920ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னிபெசன்ட் அழைத்தார். அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், ருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெஸண்ட்டின் அனுமதியோடு, ருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் அக்கால கட்டத்தில் ருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. ருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஒபேரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவா விடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு ருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை ருக்மிணி கண்டதில்லை.

1933ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், தேவதாசிகளின் சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண ருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக் கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார். ருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய நாடாளுமன் றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட் டத்தினை நடை முறைப்படுத்துவதில் மிக முக்கிய பங் காற்றினார். 1977ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப் பதவியினை ஏற்க மறுத்தார். அவர் துவக்கி வைத்த கலாஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக நாடாளுமன்றத்தினால் அறிவிக் கப்பட்டது.

பெரணமல்லூர் சேகரன்

;