tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 18

கப்பற்படை எழுச்சி

1946 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி “தல்வார்” என்னும் பயிற்சிக் கப்பலில் புரட்சித்தீ மூண்டது. சில மணி நேரத்தில் ராயல் இந்திய கப்பற்படை முழுவதிலும் காட்டுத் தீ போல் பரவியது.

மாலுமிகளின் உடனடிக் கோரிக்கைகளும், பொருளாதாரக் கோரிக்கைகளும், தேசத்தின் அரசியல் கோரிக்கைகளும் அடங்கிய பட்டியல் அனைத்துப் பகுதி மாலுமிகளையும் கவர்ந்தன. ஒன்று படுத்தின. இக் கோரிக்கைகளுக்காக நடைபெற்ற இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு மாலுமிகளின் போராட்டக்குழு காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டது. இதே நேரத்தில் பல இடங்களில் மாலுமிகளின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்க வெள்ளைப்படை நேரடி நடவடிக்கை யில் இறங்கியது. அதில் கராச்சி துறை முகத்தில் இருந்த இந்துஸ் தான் கப்பலில் மாலுமிகளின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க நேரடி ஆயுதத்தாக்குதலை துவக்கியது. மாலுமிகளின் பதில் தாக்குத லும் நடைபெற்றது. வீரம் செறிந்த போராட்டக்களத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கப்பற்படை மாலுமிகளின் எழுச்சிமிக்க போராட்டத்திற்கு எதிராக அறிக்கை விட்டதோடு, உட னடியாக வெள்ளையர்களிடம் சரணடைய வேண்டும் என்றனர்.  இதைத் தொடர்ந்து முகமது அலி ஜின்னாவும் மாலுமிகள் சரணடைய வேண்டும் என்றார். கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் மாலுமிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவைத் தர தொழி லாளி வர்க்கத்தைக் கேட்டுக்கொண்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பம்பாய் தொழிற் சாலைகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலைகளில் பேரணி நடத்தினர். மாணவர்கள் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்தனர். மக்கள் கப்பற்படை வீரர்களுக்குத் தேவையான உணவுகளை படகுகளில், வண்டிகளில், வேன்களில் கொண்டு சென்று கொடுத்தனர். தல்வாரும், கத்திய வாரும், இந்துஸ்தான், எச்.எம்.ஐ.எஸ் பஞ்சாப் கப்பல்களில் நடைபெற்ற போராட்டம் இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தது. விமானப்படை வீரர்கள் தான் முதன் முதலில் மாலுமிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். மக்களும், ஆயுதப் படையினரும் இணைந்த புரட்சி இந்தியாவில் ஏற்படும் என்றால், இந்தியாவை அடிமைப்படுத்தி மக்களைச் சுரண்டிக் கொழுத்த வர்களை எவ்வித சலுகையும் அளிக்காமல் மக்கள் விரட்டி அடிப் பார்கள் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும், இந்திய தேசிய தலைமைக்கும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இத னால் இந்திய தேசியதலைமை இந்த எழுச்சிக்கு ஆதரவளிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் மாலுமிகளின் போராட்டக் குழு சரண டைந்தது. இதன் பிறகு வெள்ளை அரசின் பழிவாங்கும் படலம் தொடங்கி போராட்டக்குழு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 1500 பேர் ராயல் இந்திய கப்பற்படையிலிருந்து வேலைநீக்கம் செய்யப் பட்டனர். போராட்டத்தைக் கைவிட்டால் பழிவாங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன இந்திய தேசிய காங்கிரசின் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. இதனால் கப்பல்களில் ஏற்றப்பட்ட கொடிகளில் காங்கிரஸ், லீக் கொடிகள் இறக்கப்பட்டன. செங்கொடி மட்டும் உயரப் பறந்தது. இந்த தேசத்தினை வெள்ளை யனிடம் இருந்து மீட்டெடுக்க நடைபெற்ற போராட்டங்களின் உச்சகட்டமாக மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்கள், மாலுமிகள் அனைவரின் இரத்தமும், வியர்வையும், உயிரும் ஒரு சேர பம்பாய் வீதிகளில் போராடியது, குருதி கொட்டிற்று. இந்திய அரசு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த எழுச்சிக்கு ஒரு நினைவுச் சின்னம் கூட எழுப்பவில்லை.

பெரணமல்லூர் சேகரன்
 

;